‘‘சீட்டுக்கு கேட்கிற ‘சி’ பயங்கரமா இருக்காமே..’’ என கேட்டு சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்க... நெருங்க... கோவை மாவட்டத்தில் உள்ள இலைக்கட்சி முக்கிய புள்ளிகளிடம் ‘சீட்’ கேட்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதாவது, ‘ஏற்கனவே, இரண்டுமுறை, மூன்றுமுறை எம்எல்ஏ.வாக இருந்தவர்களுக்கு இம்முறை ‘சீட்’ தரக்கூடாது. ப்ரெஷ் கேன்டிடேட் செலக்ட் செய்து, அவர்களுக்குத்தான் வாய்ப்பு தர வேண்டும் என மாவட்ட அளவில் உள்ள நிர்வாகிகளிடையே புகைச்சல் கிளம்பி வருகிறது. அதனால், பலரும், இம்முறை தனக்கு ‘சீட்’ தந்து விடுவார்கள்.... என கனவில் மிதக்கிறார்கள்.
அதேசமயம், கோவையின் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் இருமுறை எம்எல்ஏ.வாக இருந்த ஒருவர், தனக்கு ‘ஹாட்ரிக் சான்ஸ்’ கொடுக்க வேண்டும்... என கட்சியின் மேலிடத்துக்கு தூது விடுகிறாராம். ஆனால், அங்கிருந்து வந்த பதில் இவரை அதிர்ச்சிக்கு உள்ளாகி விட்டதாம். ‘’புதிதாக ப்ரெஷ் கேன்டிடேட், போட்டியிட விரும்பினால், அவர்கள் கட்சியின் தலைமைக்கு ‘’15 சி..’’ கொடுக்க வேண்டும். ஏற்கனவே, எம்.எல்.ஏ.வாக இருந்து மீண்டும் போட்டியிட விரும்புவோர் ‘’30 சி...’’ கொடுக்க வேண்டும்’’ என்பதுதான் அந்த உத்தரவாம். அதனால், கோவை மாவட்டத்தில் உள்ள இலைக்கட்சி நிர்வாகிகள் பலரும் என்ன செய்வது என தெரியாமல் கலக்கத்தில் இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வடமாநில ரயில்களில் வரும் போதையை தடுப்பதுதான் பெரும் பிரச்னையா இருக்காமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடைக்கோடி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காக்கி துறை பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்களாம். இருந்தாலும் வட மாநிலங்களில் இருந்து புறப்படும் ரயில்களில் பல ஆயிரம் கி.மீ தூரம் பயணித்து கஞ்சா பொட்டலங்கள் பல நூறு கிலோ தினசரி வருகிறது. இது கடைக்கோடியில் வரும்போதுதான் ரயில்களில் பிடிபடும் நிலை உள்ளதாம். கூடவே எஸ்கார்டு ஆக வருபவர்கள் வட மாநிலத்தவர்களாக உள்ளனராம். கஞ்சா புழக்கத்தை தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம். ஆனால் வட மாநிலங்களில் இருந்து ரயில்களில் வருவதை முழுமையாக கட்டுப்படுத்துவது எப்படி என்பதில் காக்கி துறை கையை பிசைந்து வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘யூனியனில் மீண்டும் ‘வாசனை’ பிரச்னை வாட்டி எடுக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சிறிய யூனியனான புதுச்சேரியில் பாளையம் என்ற பகுதி உள்ளதாம். இங்குள்ள புதுமையான நகர் வீடுகளில் கடந்தாண்டு கழிவறைக்குள் விஷவாயு தாக்கி 3 பேரின் உயிரை காவு வாங்கியதாம். புல்லட்சாமி வீடு அருகிலுள்ள கனகன் ஏரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறிய வாயுவின் பாதிப்புதான் அப்பாவி உயிர்கள் பறிபோக காரணம் என பொதுப்பணி கண்டுபிடித்ததாம். அடுத்தடுத்து ஆய்வுகளை மேற்கொண்ட துறையானது அரசு செலவிலே வீடுகளின் கழிவறைகளில் இருந்து பாதாள சாக்கடைக்கான இணைப்பை முறைப்படுத்தியது. அதன்பிறகும் அவ்வப்போது புதுமை நகரில் புதுவிதமான வாசனை வீசவே, சுத்தகரிப்பு நிலையத்தை நவீனப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் கிடப்பில் போடப்படவே ஒன்றரை ஆண்டு கடந்தும் நிலைமை மாறவில்லையாம். இதனால் கழிவுநீர் உந்து நிலையத்தை முறையாக ஆய்வு நடத்தி பராமரிக்க அப்பகுதி மக்கள் மீண்டும் முறையிட்டு வருகிறார்களாம். தேர்தல் நெருங்குவதால் போராட்டத்தில் குதிக்கவும் தயாராகி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விஜிலன்ஸ கண்டு மிரள்வது ஏனாம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல இருக்குற குடியேற்றம் வாகன பதிவு அலுவலகத்துல தினமும் நூற்றுக்கும் மேல வாகனம் பதிவு செய்யப்படுது. இப்ப நேர்ல வாகனங்கள் வரவேண்டாம்னு அரசு சொல்லிடுச்சு. இருந்தாலும் சம்திங் வாங்குறாங்கன்னு விஜிலென்ஸ்சுக்கு புகார்கள் போயிருக்குது. இதனால விஜிலென்ஸ், போன வாரம் திடீர்னு குடியேற்றம் ஆபிஸ்ல ரெய்டுக்கு போயிருக்காங்க. கணக்குல வராத 80 கே கரன்சி பறிமுதல் செஞ்சிருக்காங்க. அதோட பதிவு அதிகாரி மேல வழக்குப் பதிவு செஞ்சிட்டாங்களாம். விஜிலென்ஸ்சின் இந்த திடீர் ரெய்டு மேட்டர் பத்திரம், வாகனம் பதிவு அலுவலகங்கள்ல பரபரப்பு பேச்சாக போய்கிட்டிருக்குது. இதனால பத்திரப்பதிவு அலுவலகமும் எப்போ விஜிலென்ஸ் டீம் வருமோ என்று கதிகலங்கி கிடக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தலைமையிடத்தில் செல்வாக்கை காட்டி சீட் வாங்க மாஜி அமைச்சரின் ஆதரவாளர்களை அழைத்து சென்றாராமே மற்றொரு மாஜி..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியின் மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் களத்தில் இறங்க தற்போது இருந்தே வேலையை ஆரம்பித்துள்ளாராம்... சமீபத்தில் தலைநகரில் நடந்த இலை கட்சியின் கூட்டத்திற்கு தன்னுடைய பலத்தை காண்பிக்கும் வகையில், தனது ஆதரவாளர்களை அதிகம் பேரை அழைத்து சென்று இருக்காரு. இதில் முக்கியமாக, மற்றொரு அமைச்சரின் ஆதரவாளர்களையும் மணியானவர் அழைத்து சென்று இருந்தாராம். தனியாக மற்றொரு மாஜி அமைச்சர் அவரது ஆதரவாளர்களை அழைத்து சென்றால் தலைமையிடத்தில் அந்த மாஜி அமைச்சருக்கு முக்கியத்துவம் வந்து விடும் என்பதால் அவருடைய ஆதரவாளர்களையும் மணியானவர் அழைத்து சென்று தனக்கு செல்வாக்கு இருப்பது போல் தலைமையிடத்தில் காட்டிக்கொண்டராம்’’ என்றார் விக்கியானந்தா.


