Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இடியை இறக்கிய பாஜ

நா ட்டில் வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. நேற்று முதல், எண்ணெய் நிறுவனங்கள் 19 கிலோ சிலிண்டரின் விலையை ரூ.203 வரை உயர்த்தியுள்ளன. கடந்த மார்ச் 1-ம் தேதி வர்த்தக சிலிண்டர் விலை ரூ.114.50 உயர்த்தப்பட்ட நிலையில், ஒரு மாத காலத்திற்குள் 2வது முறையாக ஒன்றிய அரசானது மக்கள் தலையில் இடியை இறக்கி உள்ளது. இந்த விலை உயர்வு, சிறு வணிகங்கள் மற்றும் உணவுத்துறையை சேர்ந்த குறிப்பாக ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை நடத்துவோரை நேரடியாக பாதித்துள்ளது.

போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சமீபத்திய அறிக்கைகளின்படி, உலகளாவிய எண்ணெய் விலைகள் சுமார் 50 சதவீதம் உயர்ந்துள்ளன. இது, இந்தியா போன்ற இறக்குமதி செய்யும் நாடுகளை நேரடியாக பாதிக்கிறது. அதன் விளைவாக இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஈரான் போர், ஹோர்முஸ் நீரிணை மூடல் ஆகியவற்றால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் ஹோட்டல்கள், டீ கடைகளில் கடுமையான விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பல ஹோட்டல்கள் நடத்த முடியாமல் மூடப்பட்டுள்ளன. இனி ஓட்டல்களின் வாங்கும் தின்பண்டங்களின் விலை கசக்க துவங்கும். இருப்பினும், தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடந்து வருவதால், இம்முறை 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையில் உயர்வு இல்லை. இது, சாமானிய மக்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது. ஆனாலும், இது தற்காலிகமானதுதான்.

தேர்தல் முடிந்ததும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை கடுமையாக உயரும் என்று கூறப்படுகின்றது. அதோடு சிலிண்டர் புக்கிங் நாட்களுக்கான கால அவகாசத்தையும் உயர்த்தவும் ஒன்றிய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விலை உயர்வு ஒரு பக்கம் புக்கிங் நாட்கள் அதிகரிப்பு ஒரு புறம் என மக்களை கடுமையாக பாதிக்க செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

தற்போதைய வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு ஒருபக்கம் இருந்தாலும், தட்டுப்பாடு இன்னொரு பக்கம் நிலவுகிறது. நாட்டின் பல நகரங்களில் நிலவி வரும் எல்பிஜி நெருக்கடியானது, அதிகரித்து வரும் செலவுகள், விநியோக தடைகள் மற்றும் தேவை-வழங்கல் சமநிலையின்மை ஆகியவற்றின் ஒருமித்த விளைவை பிரதிபலிக்கிறது. வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விலையில் ஏற்பட்ட உயர்வு, வணிகங்கள் மற்றும் போக்குவரத்து துறை மீதான சுமையை அதிகரித்துள்ளது,

குறிப்பாக, அன்றாடம் பணிகளுக்கு எல்பிஜியை பெரிதும் நம்பியிருக்கும் ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுநர்களின் நிலைமை பெரும் சவாலாக மாறியுள்ளது. எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள், சீரற்ற இருப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் நிலையற்ற விலை நிர்ணயம் ஆகியவை அவர்களின் அன்றாட வழக்கத்தை சீர்குலைத்துள்ளது.

எரிபொருளை பெறுவதற்கு பல மணிநேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. இந்த தாமதம் அவர்களது தினசரி வருமானத்தையும் பாதிக்கிறது. இந்த நெருக்கடி வர்த்தக பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் விரைவில் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. ஒன்றிய அரசு தொலைநோக்கு பார்வையுடன் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், வீடுகளில் சமையல் காஸ் சிலிண்டர் நீண்ட காலத்திற்கு கிடைக்காமல் போகும் நிலை உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.