9ம் வகுப்பில் மும்மொழி கட்டாயம் சிபிஎஸ்இ கொள்கையை எதிர்த்த மனுக்கள் மீது அவசர விசாரணை: உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை
புதுடெல்லி: ஒன்பதாம் வகுப்பில் 3 மொழிகள் கட்டாயம் என்ற சிபிஎஸ்இயின் கொள்கையை எதிர்த்த மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை 2020க்கு ஏற்ப, 2026-27ம் கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி மாணவர்கள் 3 மொழிகளை கட்டாயம் கற்க வேண்டும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மூன்றாவது மொழிக்கு தனித்தேர்வு நடத்தப்படாது என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இயின் இந்த கொள்கையை எதிர்த்து பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று வலியுறுத்தப்பட்டது. கல்வியாண்டு ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் போதுமான ஆசிரியர்கள் மற்றும் பாடபுத்தகங்கள் இல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.

