அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.20.53 லட்சம் மோசடி: கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது: போன், பைக், நகை ரசீது பறிமுதல்
தண்டையார்பேட்டை: சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன்நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சித்ரா (28). இவர், அரசு வேலை வாங்கிதரும்படி தெரிந்தவர்களிடம் கூறியிருந்தார். இந்நிலையில் சித்ராவுக்கு அறிமுகமான 3 பேர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். பணம் தந்தால் உடனடியாக வேலை வாங்கி தருகிறோம் என கூறியுள்ளனர். இவர்களை நம்பி சித்ரா, 2 தவணையாக 20 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.
இந்த பணத்தை சசிகலா, அவரது கணவர் மற்றும் இளம் பெண் ஒருவர் வாங்கியுள்ளனர். பணத்தை வாங்கிக்கொண்டு வேலை வாங்கி தராமல் காலம் கடத்தி வந்துள்ளனர். இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த சித்ரா, ஏமாற்றப்படுவதையறிந்து, வேலை வேண்டாம், நான் கொடுத்த பணத்தை தந்துவிடுங்கள் என கேட்டுள்ளார். சித்ராவை அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் சித்ரா புகார் அளித்தார். புகாரின்பேரில், ஆய்வாளர் அருள்மணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, சென்னை சேத்துப்பட்டு மங்களாபுரத்தை சேர்ந்த சசிகலா (40), அவரது கணவர் குமார் (43) மற்றும் திவ்யதர்ஷினி (22) ஆகியோர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சித்ராவிடமிருந்து பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பைக், ஐபோன் மற்றும் 13 லட்சத்தில் அடகு வைத்த நகை ரசீது ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.



