Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுவைக்காக கலக்கப்படும் ரசாயனங்கள்; மிரட்டும் மினரல் வாட்டர்

* பக்கவிளைகள் என்ன?

* மருத்துவர்கள் அறிவுரை

பெரம்பூர்: சென்னையில் தரம் இல்லாத குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை குடிப்பதால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இவ்வுலகில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மனிதர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று நீர். நீரின்றி அமையாது உலகு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மனிதனின் ஒவ்வொரு நிகழ்விலும் தண்ணீர் அவசியமானது என்பதை அது நமக்கு உணர்த்திக் கொண்டே உள்ளது. அவ்வாறு உள்ள தண்ணீரின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை அறியாமல் விளம்பரங்களை நம்பி மனிதன் போலியான ஒரு வாழ்க்கைக்குள் பயணம் செய்து கொண்டிருக்கிறான்.

சாதாரணமாக, ஒரு இடத்திற்கு சென்றால் அங்குள்ள தண்ணீரை பருகாமல் சுத்தமானது எனக் கருதி மினரல் வாட்டர் வேண்டும் என கேட்டு கடைகளில் கேன் தண்ணீரை வாங்கி குடிக்கும் நபர்கள் அந்த தண்ணீரில் என்ன உள்ளது என்று எண்ணிப் பார்ப்பதில்லை. தண்ணீரின் சுவையை அறிந்த மனிதர்கள் தண்ணீரில் தரம் அறியாமல் அதனை பயன்படுத்தி வருவது வேதனையின் உச்சம். எந்த பிரச்னையாக இருந்தாலும் தமிழ்நாட்டில் அதிகம் பாதிக்கப்படுவது சென்னை. அதற்கு காரணம் நகரமயமாதல், அதிவேகமான வளர்ச்சி போன்றவை அந்த வகையில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் அதிக அளவில் தண்ணீர் கேன் விற்பனை நடந்து வருகிறது.

மற்ற மாவட்டங்களில் வேலை செய்யும் இடங்களில் மட்டுமே அதிகமாக தண்ணீர் கேன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சென்னையில் தண்ணீர் கேன் பயன்பாடு இல்லாத இடங்களே இல்லை என்று கூறலாம். வீடுகளில் கூட பெரும்பாலும் தண்ணீர் கேன் பயன்பாடு அதிகரித்துள்ளது. சென்னை மக்களால் பயன்படுத்தி வரும் கேன் தண்ணீரால் அவர்களின் உடல்நிலை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியாமலேயே தொடர்ந்து கேன் தண்ணீரை சென்னை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கேன் தண்ணீர் என்றாலே மினரல் வாட்டர் என்று நினைத்துக் கொள்ளும் சென்னைவாசிகள் அந்த கேன் தண்ணீரில் எத்தனை விதமான ரசாயனங்கள் கலக்கப்படுகிறது.

அதன் மூலம் ஏற்படும் பாதிப்பு குறித்து ஒருபோதும் அறிந்திருக்க மாட்டார்கள். கார்ப்பரேஷன் வாட்டர் என்றால் ஏளனமாக பார்க்கும் சென்னைவாசிகள். காசு கொடுத்து நோயை வாங்கும் நிலையில் தான் தற்போது இருந்து வருகிறார்கள். தண்ணீரில் உள்ள கரைசல்களில் உப்புத் தன்மை குறைந்தபட்சம் 100க்கு மேல் இருக்க வேண்டும். அதற்கு கீழ் இருந்தால் அந்த தண்ணீரில் எந்தவிதமான மினரல்களும் இருக்க வாய்ப்பில்லை. மனிதனின் உடலுக்கு கண்டிப்பாக மினரல்கள் தேவை எனவே தான் தண்ணீரை அதிகமாக மனிதன் பருகி வருகிறான். தற்போது விற்கப்படும் கேன் தண்ணீரில் மினரல்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. மேலும் இந்த கேன் நீரில் சுவைக்காக கலக்கப்படும் ரசாயனங்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.‌

இதுகுறித்து சென்னை மெட்ரோ வாட்டர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சுகாதாரமான குடிநீர் என நினைத்து மக்கள் பணம் கொடுத்து கேன் தண்ணீரை வாங்கும் போது அதன் தரம் நன்றாக உள்ளது என தவறாக நினைத்துக் கொண்டுள்ளனர். இலவசமாக வரும் மெட்ரோ வாட்டர் குடிநீரை அவர்கள் பருக பயப்படுகிறார்கள். ஆனால் கேன் தண்ணீரில் உள்ள மினரல்களை விட மெட்ரோ வாட்டர் மூலம் வழங்கப்படும் தண்ணீரில் அதிக மினரல்கள் இருக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ள வழிமுறையில் 500 டிடிஎஸ் வரை உள்ள தண்ணீரை மனிதர்கள் பருகலாம். தவிர்க்க முடியாத இடங்களில் 2000 டிடிஎஸ் வரை உள்ள தண்ணீரை மனிதர்கள் பருகலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்ப்பரேஷன் மூலம் வழங்கப்படும் மெட்ரோ வாட்டரில் 300 முதல் 350 வரை டிடிஎஸ் உள்ளது. சென்னையில் வந்து தங்கும் கிராமவாசிகள் இங்கு உள்ள கார்ப்பரேஷன் தண்ணீரை குடித்துவிட்டு ஊருக்கு சென்று வேறு தண்ணீர் குடிக்கும் போது அதன் வித்தியாசம் அவர்களுக்கு நன்றாக தெரியும். ஏனென்றால், சென்னையில் அந்த அளவிற்கு தண்ணீரின் சுவை மாறுபடும் தற்போது சென்னை வாசிகள் கேன் தண்ணீரை குடித்து பழகி விட்டதால் மெட்ரோ வாட்டர் குடிக்கும் போது அது அவர்களுக்கு பிடிப்பதில்லை. தற்போது சென்னையில் விற்கப்படும் பல நிறுவனங்களில் கேன் தண்ணீரில் 100 டிடிஎஸ் அளவிற்கு குறைவாகவே உள்ளன.

இதனால் அதில் மினரல்கள் இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. மினரல் வாட்டர் என்பது தண்ணீரில் உள்ள அனைத்து சத்துக்களையும் எடுத்துவிட்டு மனிதனுக்கு தேவையான மினரல்களை அதில் உட்படுத்துவார்கள். அதன் பெயர் தான் ஒரிஜினல் மினரல் வாட்டர். அந்த தண்ணீர் ஒரு லிட்டர் குறைந்தபட்சம் 200 ரூபாய்க்கு விற்கப்படும், அதுதான் ஒரிஜினல் மினரல் வாட்டர். ஆனால் நமது ஊரில் கேன் தண்ணீரையும் பாட்டில்களில் இருபது ரூபாய்க்கு விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களையும் மினரல் வாட்டர் என்று நம்பி மக்கள் குடித்து வருகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். சென்னை மாநகராட்சி மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் தண்ணீரை காட்சி குடித்தாலே நோயில்லாமல் வாழலாம் என தெரிவித்தார் .

உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

தற்போது கோடை காலம் என்பதால் கேன் தண்ணீர் விற்பனை அதிகரித்து வருகிறது. அவ்வாறு விற்கப்படும் தண்ணீருக்கு அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப 15 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. ஆனால் கடைகளில் வாங்கிக் குடிக்கும் கேன் தண்ணீர் மூலம் ஒவ்வாமை ஏற்படுவதாகவும் உடலில் நோய் பாதிப்பு ஏற்படுவதாகும் புகார்கள் அவ்வப்போது பெறப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 1500க்கும் மேற்பட்ட தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். எனவே கேன் குடிநீரின் தரத்தை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத குடிநீர் ஆலைகள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தரம் இல்லாத கேன் குடிநீர் விற்பனை செய்தால் 5 ஆயிரம் அபராதம் விதக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை வழிகாட்டுதலின்படி கேன் தண்ணீரை நேரடியாக சூரிய ஒளியில் வைக்கக்கூடாது. கேன்களை முப்பது முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக்கூடாது. கேன்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும். பலமுறை பயன்படுத்தப்பட்ட பழைய கேன்களில் தண்ணீர் நிரப்பி விற்பனை செய்யக்கூடாது. இந்த விதிகளை பின்பற்றாத கடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

தர பரிசோதனை செய்வதில்லை

தண்ணீர் கேன் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்கள் தங்களது உரிமத்தை புதுப்பிக்கும் போது மீண்டும் அவர்கள் உரிமத்தை பெறுவதற்கு மூன்று மாத காலம் ஆகிவிடுகிறது. ஆனால் அவர்கள் தொடர்ந்து தொழில் செய்து தான் வருகிறார்கள். அவ்வாறு இவர்களுக்குச் சான்று அளிக்கும் நபர்கள் குறிப்பிட்ட தண்ணீர் கேன் இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வது கிடையாது. சில இடங்களில் பணத்தை வாங்கிக் கொண்டு அனுமதி வழங்கி விடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே தண்ணீர் கேன் வியாபாரத்தில் சான்றளிக்கும் போது அதிகாரிகள் நேரில் சென்று எத்தனை பில்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. என்றும் எவ்வாறு தண்ணீர் எடுக்கப்படுகிறது என்றும் பாதுகாப்பு முறைகள் உள்ளிட்டவற்றை ஆராய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வாய்ப்பே இல்லை

சென்னையில் தற்போது 30 ரூபாய்க்கு கேன் தண்ணீர விற்கப்படுகிறது. 20 லிட்டர் கொண்ட இந்த தண்ணீரை மினரல் வாட்டர் என்று கூறி பலரும் விற்று வருகின்றனர். ஆனால் முறையாக 5 பில்டர்களை பயன்படுத்தி 20 லிட்டர் கேன் தண்ணீரை தயார் செய்வதற்கு குறைந்தபட்சம் 80 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை செலவாகும். இதில் 20% அவரது கமிஷன் அடங்கும். ஆக 70 ரூபாய் முதலீடு இல்லாமல் ஓரளவுக்கு தரமான குடிநீரை வியாபாரிகள் பொதுமக்களுக்கு தர முடியாது.‌

விதிமீறல்..

தண்ணீர் கேன் வியாபாரம் செய்யும் நபர்கள் குறிப்பிட்ட இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து பூமியிலிருந்து தண்ணீரை எடுத்து அதனை சுத்தம் செய்து பில்டர்களால் வடிகட்டி தண்ணீரை எடுத்து செல்கின்றனர். அவ்வாறு தண்ணீரை சுத்தம் செய்யும்போது 100 லிட்டர் தண்ணீர் சுத்தம் செய்யப்படுகிறது என்றால் குறைந்தது 40 சதவீத தண்ணீர் அவர்களுக்கு தேவையில்லாமல் போய்விடுகிறது. அந்த தண்ணீரை மீண்டும் பூமிக்குள் அனுப்பி விடுகிறார்கள். அவ்வாறு அனுப்பாமல் அந்த தண்ணீரை வேறு ஏதாவது செயலுக்கு பயன்படுத்த வேண்டும். மினரல்கள் எடுக்கப்பட்ட தண்ணீரை மீண்டும் பூமிக்குள் விட்டால் மீண்டும் அது மறுசுழற்சி ஆகிவிடும் என தண்ணீர் கேன் வியாபாரிகள் நினைக்கின்றனர். ஆனால், அது முற்றிலும் தவறு இவ்வாறு தண்ணீரை மீண்டும் மீண்டும் மறுசுழற்சி செய்வதன் மூலம் தண்ணீரின் தரம் வெகுவாக குறைந்து எந்தவித மினரல்களும் இல்லாமல் தண்ணீர் பொதுமக்களை சென்றடைகிறது என்பது பொதுவான உண்மை.

காய்ச்சி குடித்தாலே உடலுக்கு தேவையான மினரல்கள் கிடைக்கும்

கேன் தண்ணீர் பயன்பாடு குறித்து பெரம்பூர் சென் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வெங்கடேஷ் கூறியதாவது: மனிதனின் உடலுக்கு இன்றியமையாதது மினரல். மனிதனின் குடல் பகுதியை சிங்க் என்னும் மினரல் பாதுகாக்கிறது. குரோமியம் எனும் மினரல் மூட்டுக்கள் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. இதேபோன்று கால்சியம் உள்ளிட்ட பலவகையான சத்துக்களும் மனிதனுக்கு இன்றியமையாதது. இவை அனைத்தும் தண்ணீரில் உள்ளது. ஒரு காலகட்டத்தில் மனிதர்கள் கிணற்று நீரை பயன்படுத்தி வந்தனர். மேலும் ஆறு, குளங்களில் உள்ள நீரையும் பயன்படுத்தி வந்தனர். இவை அனைத்திலும் மனிதனுக்கு தேவையான மினரல்கள் நிறைந்து இருந்தன.

ஆர் ஓ வாட்டர் முறை தற்போது பிரபலம் அடைந்துள்ளது. இந்த ஆர்ஓ முறையை பயன்படுத்துவதற்கு ஐந்து பில்டர்களை பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. எந்த ஒரு தண்ணீரையும் இந்த ஐந்து பில்டர்கள் வழியாக மினரல் வாட்டராக கொண்டு வர முடியும். முறையாக 5 பில்டர்களை பயன்படுத்தி ஐந்தாவது பில்டரில் இருந்து வரப்படும் தண்ணீரில் தான் முழுமையான மினரல்கள் உள்ளன. இவைதான் ஒரிஜினல் மினரல் வாட்டர். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் பெரும்பாலான நபர்கள் இரண்டு பில்டர்களை மட்டும் பயன்படுத்துகிறார்கள். அதில் மினரல் வாட்டர் சுவை வந்து விடுகிறது. அதனால் மற்ற மூன்று பில்டர்களை பயன்படுத்தாமல் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

இதனால் தண்ணீரில் சுவை இருக்கும். ஆனால் இருக்க வேண்டிய மினரல்கள் எண்ணிக்கை இருக்காது. ஒரு பில்டரை பயன்படுத்தி ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வடிகட்டி எடுக்க முடியும். அதற்கு மேல் அந்த பில்டரை பயன்படுத்தினால் அது எதற்கும் உதவாது. ஆனால் இதை பலரும் முறையாக பயன்படுத்தாமல் பில்டர் கிழியும் வரை அதனை பயன்படுத்துகின்றனர். முதல் இரண்டு பில்டர்களுக்கு சாதாரணமாக செலவு ஆகும். ஆனால் மூன்று நான்கு ஐந்து ஆகிய பில்டர்களை பயன்படுத்தும் போது அதற்கு கூடுதல் செலவு ஆகும். இதனால் கேன் தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்கள் 5 பில்டர்களை முறையாக பயன்படுத்துவது கிடையாது.

இதுபோன்ற தரம் இல்லாத தண்ணீரை பருகும் போது காலப்போக்கில் கிட்னியில் கற்கள் ஏற்படும். அது மட்டும் இல்லாமல் மனித உடலில் எங்கு எங்கு மூட்டு பகுதி உள்ளதோ அங்கு உப்பு நீர் படிவம் அதிகரித்து நாள்பட்ட வலி ஏற்படுகிறது. இதனால் 40, 45 வயது உடையவர்கள் கூட தீராத மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். கிட்னியில் கல் உள்ளது என்ற பிரச்னையுடன் வரும் 90 சதவீத மக்கள் கேன் தண்ணீரை பயன்படுத்துகின்றனர். எனவே தரம் இல்லாத கேன் தண்ணீரை தவிர்த்து மெட்ரோ வாட்டர் மூலம் வழங்கப்படும் தண்ணீரை காய்ச்சி குடித்தாலே உடலுக்கு தேவையான மினரல்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.