வாழ்க்கையில் எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. நாம் தான் அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றி கொள்ள வேண்டும். வருகின்ற வாய்ப்புகள் பல அதனை உரிய முறையில் பயன்படுத்தினால் வாகை சூடலாம். சில வாய்ப்புகள் கடினமாக இருக்கலாம். ஆனால் அவற்றை அடக்கி ஆண்டால் வெற்றி குவியும்.ஆனால் கிடைத்த வாய்ப்புகளை சரிவரப் பயன்படுத்தாவிட்டால் முன்னேற முடியாது. அலட்சியம் காரணமாகவோ, சோம்பலின் காரணமாகவோ,இயலாமை காரணமாகவோ,தவற விட்டு விட்டால் முன்னேற முடியாது.மீண்டும் அதே வாய்ப்புகள் வரும் என்று சொல்ல முடியாது.
எங்கே அபாயம் மறைந்து இருக்கிறதோ அங்கே சந்தர்ப்பம் மறைந்திருக்கிறது.எங்கு வாய்ப்பு இருக்கிறதோ அங்கே அபாயமும் இருக்கும். இரண்டும் இணை பிரியாதவை என்பார் தன்னம்பிக்கை பேச்சாளர் எர்ல் நைட்டிங்கல்.
ஒரு இரவு பாலைவனப் பயணம் போனான் ஒருவன்.திடீரென ஒரு குரல் கேட்டது. பாலைவனச் சோலையில் கீழே குனிந்து சிதறி கிடக்கும் கற்களை எடுத்துச் செல். உனது சட்டைப் பையில் போட்டுக் கொள். காலையில் உன்னுடைய ஊருக்குப் போனதும் மகிழ்ச்சி அடைவாய், வருத்தமும் அடைவாய் என்றது அந்த குரல். குரல் ஒலித்ததும்.வழிப் போக்கன் கை கொள்ளும் அளவிற்கு அந்த கற்களை எடுத்துச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். அடுத்த நாள் காலை
வேளை வந்தது, ஊருக்குப் போனதும் எடுத்துப் பார்த்தான். வைரமணிகள் இருந்தன. வருத்தமும் மகிழ்வும் அடைந்தான்.வருத்தம் கூழாங்கல் தானே என்று நினைத்து நிறையச் சேகரித்து வரவில்லையே என்பதால்! மகிழ்ச்சி,கையளவாது எடுத்து வந்தோமே என்று நினைக்கையில்! வாய்ப்புகளும் அது போல் தான் கிடைத்த வாய்ப்புகளை கையகப்படுத்தினால் வாகை சூடலாம். வாய்ப்புகளை இழந்தால் வெற்றியை, நன்மைகளை வீணடித்து விட்டோமே என்று பிற்காலத்தில் துயர நினைவுகள் சூழும். அறிவாளி சரியான வாய்ப்பு வரட்டும் என்று காத்திருப்பதில்லை.அவனே சரியான வாய்ப்பை உருவாக்குகின்றான். இலட்சிய சந்தர்ப்பம் வாய்க்கட்டும்,சிறந்த வாய்ப்புகள் வரட்டும் என்று காத்து இருக்காதீர்கள். வலையை வீசிக்கொண்டே இருங்கள். மீன் கிடைக்கும் உறுதியாக! தூண்டிலோடு காத்திருங்கள். கண்டிப்பாக,மீன் கிடைக்கும் வரை!
ஒரு குகையில் மூன்று பேரை அடைத்து வைத்திருந்தான் மன்னன் ஒருவன். மூன்று பேரும் சுவற்றினைப் பார்க்கும் வகையில் இரும்புச் சங்கிலியால் பிணைத்துக் கட்டப்பட்டு இருந்தனர்.இருள் படர்ந்த குகை. ஆனால் பகல் வேளையில் லேசாக ஒளி பரவும்.அவர்களுடைய நிழல்கள் மட்டும் சுவற்றில் விழும்.அசைவது போல் தோன்றும். தப்பி ஓடாமல் இருக்க இந்த ஏற்பாடு.
ஒரு நாள் மூன்று பேரில் ஒருவன் மெதுவாக சங்கிலியை கழற்றி விட்டு குகையை விட்டு வெளியேறினான். வெளியே அவனுக்கு எல்லாம் ஆச்சரியமாக இருந்தது. அதிசயமாகப் பார்த்தான்.மீண்டும் குகைக்கு வந்தான்.
இருட்டையே கண்டு சோர்ந்து போன மீதி இரண்டு பேரிடம் சொன்னான். வெளியே இருக்கிற உலகம் அற்புதமானது. உங்களை நான் அழைத்துச் செல்கிறேன். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு செல்லநல்ல வாய்ப்பு, என்றான்.
மீதி இரண்டு பேரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இருட்டிலே பழக்கப்பட்டவர்களுக்கு வெளிச்சத்தின் அருமை புலப்படவில்லை. என்ன சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.
இருட்டுக்கு அடிமையாக இருந்ததால் மன்னன் குகையிலே இருந்து தப்ப வாய்ப்பு இருந்தும் ஏற்கவில்லை.விடுதலை பெற விரும்பவில்லை.இருட்டே உலகம் என்று மாறிப் போனவர்கள் தப்பிய நண்பன் சொல்லை செவிமடுக்கவில்லை.வெளிச்ச உலகின் நன்மை தெரியவில்லை. ஆயுள் உள்ளவரை இருட்டிலேயே இருப்போம் என்றனர்.பழக்கம் என்பது இரும்பால் ஆன சட்டை. அதை அணிந்து கொண்டு அடிமையாக இருக்கவே அனைவரும் விரும்புகின்றனர். அப்படி இல்லாமல் வாய்ப்பைப் பயன்படுத்தி இருட்டிலே இருந்து வெளிச்சத்திற்கு வரவேண்டும்.இதற்கு உதாரணமாய் இந்த சாதனைப்பெண்மணியை சொல்லலாம்.
யாழ்ப்பாணத்தில் பிறந்து, தனது 3ஆவது வயதில் குடும்பத்துடன் நார்வேயில் குடியேறிய கம்சி,அந்த நாட்டின் தொழிலாளர் கட்சியின் இளைஞரணி மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.நார்வே பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் பின்னணி கொண்ட உறுப்பினர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.தற்போது நார்வே நாட்டின் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார்.
கம்சி குணரத்னம் அவர்களிடம் இதுவரை வாகன ஓட்டுநர் உரிமம் (Driving Licence) இல்லை என்பது நார்வே ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. இருப்பினும், நார்வே வரலாற்றில் ஓட்டுநர் உரிமம் இல்லாத ஒருவர் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்பது இது முதன்முறையல்ல. ஏற்கனவே 1997-இல் அமைச்சராக இருந்த ஒட் எய்னார் டோரம் அவர்களிடமும் ஓட்டுநர் உரிமம் இருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
கம்சி குணரத்னத்தின் பொறுப்பின் கீழ் நார்வேயின் வீதிகள், தொடருந்து, பொதுப்போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் கடல் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகள் வருகின்றன
நார்வே அரசியலில் மிக உயர்ந்த பொறுப்பை ஏற்று, புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்கும் நார்வே மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ள கம்சி குணரத்னம் அவர்களுக்குப் பலரும் தங்கள் வாழ்த்து களைத் தெரிவித்துவருகின்றனர்.
நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது. கம்சி குணரத்னம் 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிய அவரது குடும்பம், 1991ஆம் ஆண்டு நார்வேக்கு சென்றது. அவர்கள் ஆரம்பத்தில் நார்வேயின் வடக்குப் பகுதியில் உள்ள ஹம்மர்ஃபெஸ்ட் நகரில் குடியேறிய பின்னர், ஒஸ்லோவுக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு கிரோருட்டலன் பகுதியில் கம்சி குணரத்னம் வளர்ந்தார். அவர் ஒஸ்லோ நகர சபையில் 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதில் 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் பிரதி மேயராகவும் பதவி வகித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு முதல் நார்வே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வரும் அவர், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். வெளிநாடொன்றில் ஈழத்தமிழ் பெண்ணொருவருக்கு முதல் முறையாக கிடைத்துள்ள முக்கிய பதவி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நாடாளுமன்றத்தின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகளுக்கான நிலைக்குழுவின் முதலாவது பிரதி தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.போரின் நினைவுகளை பகிர்ந்த கம்சி இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிச் சென்ற தனது அனுபவங்களை கம்சி குணரத்னம் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாகப் பேசியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நார்வே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், போரால் பாதிக்கப்பட்ட நாட்டில் தான் பிறந்ததாகவும், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டபோது கர்ப்பிணியாக இருந்த தனது தாய் பாதுகாப்புக்காக பதுங்கியதாகவும் நினைவுகூர்ந்திருந்தார். அத்துடன், யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் போரின்போது காணாமல் போனவர்கள் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்தும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். வெளிநாடொன்றில் ஈழத்தமிழ் பெண்ணொருவருக்கு முதல் முறையாக கிடைத்துள்ள இத்தகைய முக்கிய பதவி உலகில் உள்ள அத்தனை தமிழ்ச்சமூகத்தினருக்கும் மிகுந்த பெருமையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டிருந்த போதும் அதிலிருந்து மீண்டு வேறு ஒரு நாட்டிற்குச் சென்று தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு அந்த நாட்டின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் கம்சி குணரத்தினம்.சவால்களை துணிச்சலோடு எதிர் கொள்ள வேண்டும்.மேலும் நம்மைச்சுற்றி எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. அவற்றை சரியாக பயன்படுத்தினால் சாதிக்கலாம் என்பதுதான் இவருடைய வாழ்க்கை நமக்கு உணர்த்தும் உன்னதப்பாடமாகும்.


