தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே விளாத்திகுளம் கல்வி வட்டாரத்திற்கு உட்பட்ட தருவைகுளம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவரை, அவரது சக மாணவர்கள் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. வகுப்பறைக்குள் அந்த மாணவனை நிர்வாணப்படுத்தி, ரப்பர் பேண்ட், ஸ்கேல் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதுடன், மிளகாய்ப் பொடியைத் தூவியும், பபுள் கம் போன்றவற்றை உடலில் ஒட்டியும் பல்வேறு வகைகளில் துன்புறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்தை வெளியே தெரிவித்தாலோ அல்லது பெற்றோரிடம் கூறினாலோ, மேலும் அதிகமாகத் துன்புறுத்துவோம் என அந்த மாணவனை சக மாணவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மாணவன் நடந்த சம்பவங்களை யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில், மாணவனுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது வகுப்பு ஆசிரியை சந்தேகமடைந்து விசாரித்துள்ளார். அப்போது மாணவன் தனக்கு நேர்ந்த துன்புறுத்தல்கள் குறித்து ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆசிரியை உடனடியாக மாணவனின் தாயை பள்ளிக்கு வரவழைத்து, நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாணவனின் தாயார் பள்ளித் தலைமை ஆசிரியரைச் சந்தித்து பேசியபோது, இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகவும், மாணவனின் உடல்நிலை சரியாகும் வரை விடுப்பு எடுத்துக்கொள்ளுமாறும் தலைமை ஆசிரியர் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, மாணவனின் தாயார் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் அடிப்படையில், மாணவனைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் 9 மாணவர்களை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



