Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொகுதி அலசல்: தூத்துக்குடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் 4 முனைப் போட்டி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. திமுக கூட்டணியில் கடந்த முறை இடம்பெற்ற காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக கூட்டணியில் பாஜ, தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் களம் காண உள்ளன. தவெகவும், நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிட உள்ளன. தேமுதிக, ராமதாஸ் தலைமையிலான பாமக, புதிய தமிழகம் கட்சி, ஓபிஎஸ் தலைமையிலான அணியினர் இன்னும் தங்களது கூட்டணியை இறுதி செய்யவில்லை.

இந்நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தளவில், திமுக கூட்டணியில் அமைச்சர் கீதாஜீவன் தான் இந்த முறையும் போட்டியிடுவார் என்பது உறுதியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான தமாகா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. இந்த முறை அதிமுக நேரடியாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் ஆதரவாளர்களும் போட்டியிட சீட் கேட்டு தலைமைக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதுதவிர தவெக, நாம் தமிழர் கட்சிகளும் தனித்து வேட்பாளர்களை நிறுத்துகிறது.

4 முனை போட்டி என்றாலும் திமுக, அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. தவெகவை பொறுத்தளவில் வேட்பாளர் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருவதால், அக்கட்சியினர் இடையே சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தளவில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் நிறைந்துள்ளால், அது திமுக கூட்டணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சரான கீதாஜீவன் தொகுதி மக்களிடம் எப்போதும் நெருக்கமாகவே இருந்து வருகிறார்.

கடந்த 2006ல் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்தித்த கீதாஜீவன் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்ற அமைச்சராக பணியாற்றினார். பின்னர் 2011 தேர்தலில் தோல்வியடைந்த கீதாஜீவன், அதன்பின்னர் நடந்த 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று மக்களோடு மக்களாக நின்று செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும், தற்போது அமைச்சராக இருக்கிற போதும் மக்களை சந்திப்பதில் கீதாஜீவன் முதன்மையாக இருந்து வருகிறார். மழைக்காலம் என்றாலும், களத்தில் இறங்கி பணியாற்றுவதில் பெண் என்றும் பாராமல் கீதாஜீவன் இரவுபகலாக மழைநீரை வெளியேற்றுவதற்கு கடினமாக உழைத்தார். இதனால், பெண்கள் மத்தியில் அவருக்கு நற்பெயர் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மாநகராட்சி பகுதியில் கனிமொழி எம்பி, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரின் பணிகளும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக புதிய மழைநீர் வடிகால், சாலைகள், பூங்காக்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் அமைத்தல் போன்ற பணிகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் மக்கள் மத்தியில் கீதாஜீவனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதிமுகவை பொறுத்தளவில் 2011ல் அமைச்சராக இருந்த சி.த.செல்லப்பாண்டியன் பெரியளவில் செயல்படாததால், அதற்கு பின்பு நடந்த 2016, 2021 ஆகிய சட்டமன்ற தேர்தல் மற்றும் 2019, 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக கூட்டணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் அதிமுக சார்பில் சி.த.செல்லப்பாண்டியன் மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் ஆதரவாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் இந்த தொகுதி அதிமுகவிற்கா? அமமுகவிற்கா?

பாஜவுக்கா? என முடிவாகாத நிலையில், புதிய கட்சியான தவெகவின் வேட்பாளர் யார் என்றே கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. புதிய கட்சி, புதிய முகம் எதுவாக இருந்தாலும் தனது செயல்பாடு, பணிகள் ஆகியவற்றால் முத்துநகர் தொகுதியான தூத்துக்குடி தொகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் முத்து குளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவிற்கு வாக்குகளை அள்ளி தந்த 2024 மக்களவை தேர்தல்

கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,03,161 வாக்குகள் கிடைத்தது. இவருக்கு அடுத்தப்படியாக அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 22,381 வாக்குகளும், பாஜ கூட்டணியில் போட்டியிட்ட தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 21,090 வாக்குகளும் பெற்றனர். எனவே கூட்டணி மற்றும் கட்சியின் பலம், வேட்பாளர் ஆகியவற்றின் அடிப்படையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுகவிற்கே வெற்றி பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது.

2021 தேர்தல் நிலவரம்

2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் மொத்தம் 2,85,497 வாக்காளர்கள் இருந்தனர். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 1,88,407 வாக்குகள் பதிவாகின. இதில், திமுக சார்பில் போட்டியிட்ட கீதாஜீவன் 92,316 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது பதிவான வாக்குகளில் 49 சதவீதம் ஆகும். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 42,004 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேல்ராஜ் 30,937 வாக்குகளும், சமக சார்பில் போட்டியிட்ட சுந்தர் 10,534 வாக்குகளும் பெற்றனர். தற்போது எஸ்.ஐ.ஆர். பணிக்கு பிறகு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 49 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 2,36,461 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.