மும்பைபுனே விரைவுச் சாலையில் வாகனங்கள் வேகமாகப் பறந்து கொண்டிருக்கின்றன. அந்தப் பரபரப்பிலிருந்து சற்றே விலகி, சஹ்யாத்ரி மலைகளைப் பின்னணியாகக் கொண்ட ஒரு சிறிய மலைப்பகுதியில் அமைதியாக இருக்கிறது ஓர் இல்லம். அதன் பெயர் ‘ஆனந்தா’.
அங்கே வசிப்பவர்கள் மனிதர்கள் அல்ல. வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தெருக்களில் கழித்த வயதான நாய்கள்.
ஒரு காலத்தில் தெருவோரக் குப்பைகளில் உணவு தேடியவை. மழை வந்தால் ஒதுங்க இடமின்றி நனைந்தவை. வாகனங்களில் அடிபட்டு காயமடைந்தவை. மனிதர்களால் விரட்டப்பட்டவை. சில நேரங்களில் தாக்குதலுக்கும் ஆளானவை. வயது ஏற ஏற உணவு தேடுவதற்குக்கூட உடலில் வலு இல்லாமல் போனவை. அப்படிப்பட்ட நாய்களின் வாழ்க்கையின் கடைசிக் காலம் கொஞ்சம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவான இடம்தான் ‘ஆனந்தா’.
சுமார் 0.9 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இல்லத்தில் தற்போது 60-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு வந்த பிறகு அவற்றின் வாழ்க்கையே மாறிவிடுகிறது. நிழலில் படுத்து உறங்க பசுமையான இடம் இருக்கிறது. அவை சுதந்திரமாக நடமாட புல்வெளிகள் இருக்கின்றன.
நீந்துவதற்குக் குளம்கூட இருக்கிறது. இவை மட்டுமா, ‘ஆனந்தா’வை வித்தியாசப்படுத்துவது இந்த வசதிகள் மட்டுமல்ல.
வயதான நாய்கள் என்பதால் அவற்றுக்குப் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு. அதற்காகவே இங்கு ஒரு சிறிய கால்நடை மருத்துவமனைப் போன்ற மருத்துவ வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் எக்ஸ்-ரே வசதி, அறுவை சிகிச்சை அரங்கு, உயிர்வேதியியல் ஆய்வகம், தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைப் பகுதிகள், மருத்துவருக்கான அறை ஆகியவை உள்ளன. அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸும் தயாராக இருக்கிறது. 24 மணி நேர மின்சார வசதியும், கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் காயங்களுக்கு மருந்து போடுவதைவிட சிரமமான ஒன்று இருக்கிறது. அது பயத்தைப் போக்குவது.
தெருவில் நீண்ட காலம் வாழ்ந்த சில நாய்களுக்கு மனிதர்களைக் கண்டாலே பயம். அவற்றை ஆனந்தாவுக்குக் கொண்டு வரும்போது, பராமரிப்பவர்களின் முகத்தைப் பார்க்கக்கூட அவை அஞ்சி நடுங்கும்.
மனிதனின் கை தன்னைத் தடவுவதற்காகவும் நீளலாம் என்பதை அவை அதுவரை அறிந்திருக்காமல் இருக்கலாம். அந்தப் பயம் மெல்ல மெல்ல மாறுகிறது.
சரியான நேரத்தில் உணவு கிடைக்கிறது. காயங்களுக்கு சிகிச்சை கிடைக்கிறது. யாரும் விரட்டுவதில்லை. அடிப்பதில்லை. நிம்மதியாகத் தூங்கலாம். அருகில் வரும் மனிதர்களின் கைகளில் இருந்து அன்பு மட்டுமே கிடைக்கிறது. சில நாட்கள் செல்லச் செல்ல மனிதர்களை மீண்டும் நம்ப ஆரம்பிக்கின்றன.
அப்படி மாறிய நாய்களில் ஒன்றுதான் லீலா.
லீலா ஆனந்தாவுக்கு வந்தபோது மிகவும் பயந்த நிலையில் இருந்தது. அதன் உடலில் முடிகள்கூட பெருமளவில் இல்லாமல் போயிருந்தன. ஆனால் பராமரிப்பும் சிகிச்சையும் கிடைத்த பிறகு அதன் நிலை மாறியது. இப்போது வயதான நாய் என்பதை மறந்து ஒரு குட்டி நாயைப்போல உற்சாகமாக மாறியிருக்கிறது.
இந்த மாற்றங்களுக்குப் பின்னால் பெருமையுடன் சிரிக்கிறார் மீனா சுப்ரமணியன். பிரயாஸ் அறக்கட்டளையின் தலைவர் மீனா சுப்ரமணியன், ஆதரவின்றி விடப்பட்ட அல்லது காயமடைந்த விலங்குகளுக்கும் பாதுகாப்பாக வாழவும், குணமடையவும், மரியாதையுடன் நடத்தப்படவும் ஓர் இடம் தேவை என்று கருதிய மீனா சுப்ரமணியன், வயதான தெருநாய்களுக்காக அப்படிப்பட்ட ஓர் இடத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தை முன்னாள் தனியார் ஃபைனான்ஸ் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தினாநாத் துபாஷியிடம் பகிர்ந்தார். அவரும் அவரது மனைவி நிஷூவும் தெருவிலங்குகள் மீது கொண்டிருந்த அக்கறையால் அந்த முயற்சியில் இணைந்தனர்.
பெண்களால் வழிநடத்தப்படும் பிரயாஸ் அறக்கட்டளையின் இந்த முயற்சிக்கு இவர்கள் ஆதரவளித்து வருகின்றனர். ஆனந்தா விலங்குகள் காப்பகம் மற்றும் மருத்துவமனை பிரயாஸ் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. நாம் பொதுவாகத் தெருநாய்களைப் பற்றி பேசும்போது அவற்றின் எண்ணிக்கை, கடித்தல், தடுப்பூசி, கருத்தடை போன்ற பிரச்னைகள்தான் அதிகம் பேசப்படுகின்றன. ஆனால் ஒரு தெருநாய்க்கும் முதுமை வரும் என்பதைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை.
இளமையில் ஓடித் திரிந்து உணவைத் தேடிக்கொள்ள முடிந்த பிராணிகளால் முதுமையில் அதைச் செய்ய முடியாமல் போகலாம். பார்வை குறையலாம். மூட்டுகள் வலிக்கலாம். நோய்கள் வரலாம். வாகனங்களிடமிருந்து தப்பித்து ஓடும் வேகமும் குறையலாம். அப்போது தெருவில் வாழ்வது இன்னும் கடினமாகிறது. அந்தக் கடைசிக் காலத்திலாவது அவை பசியின்றி, பயமின்றி, வலியின்றி வாழட்டும் என்பதுதான் ஆனந்தாவின் நோக்கம்.
வால் ஆட்டுவது, குணமடைந்த காயங்கள், மர நிழலில் கவலையின்றித் தூங்குவது போன்ற பல காட்சிகள் ஆனந்தாவின் வெற்றியைச் சொல்கின்றன.
ஒரு சமூகத்தின் கருணையை அது வலிமையானவர்களை எப்படி நடத்துகிறது என்பதில் மட்டும் அளவிட முடியாது. தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள முடியாத உயிர்களை அது எப்படி நடத்துகிறது என்பதிலும் அந்தச் சமூகத்தின் முகம் தெரியும்.
அந்த வகையில், சஹ்யாத்ரி மலையடிவாரத்தில் அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கும் ‘ஆனந்தா’, வயதான சில தெருநாய்களுக்கு ஓர் இல்லத்தை மட்டும் கொடுக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் அவற்றுக்குக் கிடைக்காமல் போன ஒன்றை, வாழ்க்கையின் இறுதிக் காலத்திலாவது கொடுக்கிறது.
- ஏ.கவின்.


