Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

இன்ஸ்டென்ட்டாக ஜொலிக்க இன்ஸ்டா டிரெண்ட் இதுதான்!

இன்ஸ்டாகிராம் போட்டோ, ரீல்ஸ், ஸ்டோரி பகிர்வு தளமாக மட்டுமல்ல; ஃபேஷன், வாழ்க்கை முறை மற்றும் தனிப்பட்ட பிராண்டிங்கை வெளிப் படுத்தும் முக்கிய மேடையாகவும் மாறியுள்ளது. ஒரு புகைப்படம் ஆயிரக்கணக்கான லைக்குகளைப் பெறுவதற்கு கேமரா தரம் மட்டுமல்ல, உடையின் நிறம், துணியின் தன்மை, அணிகலன்களின் தேர்வு மற்றும் ஒட்டுமொத்த ஸ்டைலிங் ஆகியவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளில் நியான் மற்றும் மிகவும் பளபளப்பான நிறங்களுக்கு பதிலாக, இயற்கையை நினைவூட்டும் மென்மையான பூமியின் இயற்கையான நிறங்கள், பாஸ்டல் எனப்படும் இளம் நிறங்கள் (Earth Tones, Pastel Shades) மற்றும் கொஞ்சம் லக்ஸரி நிறங்களே இன்ஸ்டாகிராம் ஃபேஷனில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்நிறங்கள் புகைப்படங்களில் கண்களுக்கு இதமாகவும், ஸ்டைலான தோற்றத்தையும் வழங்குகின்றன. எப்படித் தேர்வு செய்வது சொல்கிறார் செலிபிரிட்டி டிசைனர், மற்றும் ஃபேஷன் ஆய்வாளர் பேன்சி ராஜா.

பூமியின் நிறம் (Earth Tone) - இயற்கையின் நிறங்கள்

மோக்கா பிரவுன், சாக்லேட் பிரவுன், கேரமல், டான், ஆலிவ் கிரீன், டெரகோட்டா போன்ற இயற்கையான நிறங்கள் தற்போது உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ளன. இந்நிறங்கள் சருமத்தின் இயற்கையான நிறத்தை அழகாக வெளிப்படுத்துவதுடன், தனித்துவமான தோற்றத்தையும் தரும். லினென் சட்டை, காட்டன் கோ-ஆர்ட் செட், மேக்ஸி டிரஸ், ஓவர்சைஸ் பிளேசர் போன்ற ஆடைகளில் இந்த நிறங்களைத் தேர்வு செய்தால் ஸ்டைலாக இருக்கும்.

இளம் வெண்ணெய் மஞ்சள் (Butter Yellow) - இந்த வருட ஹிட் நிறம்

இளம் மஞ்சள் நிறம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் காணப்படும் ஃபேஷன் டிரெண்டுகளில் ஒன்று. இது கோடை காலத்திற்கும், பகல் நேர புகைப்படங்களுக்கும் மிகவும் பொருத்தமானது.

இந்த மஞ்சள் நிற உடையுடன் வெள்ளை ஸ்னீக்கர்ஸ், தங்க நிற காதணிகள், சிறிய ஹேண்ட்பேக் ஆகியவற்றை அணிந்தால் டிரெண்டியான தோற்றம் கிடைக்கும்.

இளம் பச்சை

பச்சை நிறம் இயற்கையுடன் ஒன்றிப்போகும் தோற்றத்தை கொடுக்கும். பூங்கா, மலைப் பகுதி, காபி ஷாப், ரிசார்ட் போன்ற இடங்களில் எடுக்கப் படும் புகைப்படங்களுக்கு இது மிகவும் ஏற்றது.

பச்சை நிற சட்டை அல்லது மிடி டிரஸுடன் பேஜ் நிற காலணிகள் மற்றும் டோட் பேக்ஸ் கச்சிதமாக இருக்கும்.

இளம் நீல நிறம்

இளம் நீல நிறம் அல்லது வானத்தின் நீல நிறம் புத்துணர்வான லுக் கொடுக்கும். கடற்கரை, நகர தெருக்கள், விமான நிலையம், கஃபே போன்ற இடங்களில் இந்த நிறம் பளிச்சென பொருந்தும்.

டெனிம் ஜீன்ஸ், வெள்ளை ஸ்னீக்கர்ஸ், சில்வர் நகைகள் ஆகியவற்றுடன் இணைத்தால் யங் லுக் கிடைக்கும்.

செர்ரி நிற சிவப்பு

அமைதியான நிறங்களுக்கு நடுவில் போல்ட் தோற்றத்தை விரும்புபவர்களுக்கு செர்ரி சிவப்பு சிறந்த தேர்வு. சிவப்பு பிளேசர், சிவப்பு ஹீல்ஸ், சிவப்பு லிப்ஸ்டிக் போன்றவற்றை ஒரே நிறக் குடும்பத்தில் பயன்படுத்தினால் புகைப் படம் எடுப்பாகத் தெரியும்.

எப்போதும் டிரெண்ட் வெள்ளை நிறம்

வெள்ளை நிறம் எந்த காலத்திலும் பொருந்தும் ஃபேஷன். லினன் சட்டை, வெள்ளை குர்தா, காட்டன் டிரஸ் அல்லது கோ-ஆர்ட் செட் போன்றவை ராயல் தோற்றத்தை உருவாக்கும்.

வெள்ளை உடைகளுடன் தங்க நிற நகைகள், பழுப்பு நிற செருப்பு, ஸ்ட்ரா ஹாட் போன்றவை இணைந்தால் ஜென் Z ஸ்பெஷல் ஏஸ்தடிக் லுக் கிடைக்கும்.

இன்ஸ்டாகிராம் டிரெண்டிங் காஃபி பிரவுன்

இதுதான் இந்த வருடத்தின் டிரெண்டிங் வைரல் கலர். இன்ஸ்டாகிராமின் ஃபில்டர்களுக்கு கச்சிதமாக இந்தக் கலர் பொருந்துகிறது. காஃபி டார்க் பிரவுன் புடவை, தாவணி, சல்வார், குர்தா, என எதுவும் யோசிக்காமல் அணியலாம். லைக்ஸ் அள்ளும். உடன் நிறத்தைத் தூக்கிக் கொடுக்கும் கோல்டன் நிற நகைகள் சிறப்பான தேர்வு. தோல் நிற காலணி, ஹேண்ட் பேக் என இணைக்கலாம்.

கிளாசிக்கான ஹெரிடேஜ் வீடுகள், தோட்டங்கள், பழங்கால கட்டிடங்கள் விசிட், கோவில்கள் என இந்த நிறம் பக்கா பொருத்தம் கொடுக்கும்.

துணியின் தேர்வும் முக்கியம்

நிறம் மட்டுமல்ல, துணியின் தன்மையும் புகைப்படத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

லினன் துணி இயற்கையான மடிப்புகளுடன் மிகவும் பிரீமியம் தோற்றம் தருகிறது. காட்டன் துணி பகல் நேர புகைப்படங்களுக்கு ஏற்றது. சாட்டின் மற்றும் சில்க் துணிகள் இரவு நிகழ்ச்சிகளுக்கு லேசான பளபளப்பு, ஜொலிக்கும் எஃபெக்ட் வழங்குகின்றன.

ஒரே நிறத்தில் தலை முதல் கால் வரை அணியும் ஒரே நிற ஸ்டைலிங் (Monochrome Styling) தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. பேஜ், வெள்ளை, கருப்பு அல்லது பழுப்பு நிறங்களில் இந்த ஸ்டைல் புகைப்படங்களுக்கு அருமையாக இருக்கும்.

லேயர் ஸ்டைலிங் முறையும் அதிக வரவேற்பைப்பெற்றுள்ளது. டி-ஷர்டின் மேல் ஓவர்சைஸ் சட்டை, சட்டையின் மேல் லைட் ஜாக்கெட் அல்லது பிளேசர் அணிவது புகைப்படத்திற்கு இன்னும் அழகு சேர்க்கும்.

ஆக்ஸசரீஸ் எப்படித் தேர்வு செய்வது?

அதிகப்படியான அணிகலன்களை விட குறைந்த அளவிலான மினிமல் ஆக்ஸசரீஸ் தற்போது டிரெண்டில் உள்ளன.

*காதுகளை அதிகம் கவரக்கூடிய ஃபேன்சி காதணிகளுக்கு இப்போது டிரெண்ட். காதில் அணியும் கஃப், மேல் வளையம், செயின் இணைக்கப்பட்ட காதணிகள் என அணியலாம்.

*லேயர் செயின், இன்விசிபிள் நெக்லஸ், ஒற்றை டாலர் சோக்கர்கள் இவை எல்லாம் இப்போது இணையத்தில் டிரெண்டிங் வகையறாக்கள்.

இவை உடையின் அழகை மறைக்காமல், தோற்றத்தை மேம்படுத்துகின்றன.

சரும நிறத்துக்கு ஏற்ற நிறங்கள்

*டஸ்கி சருமத்திற்கு - மோக்கா பழுப்பு, ஆலிவ் பச்சை, மரகதப் பச்சை, கடுகு மஞ்சள், பர்கண்டி (அடர் சிவப்பு) போன்ற நிறங்கள் சிறப்பாகப் பொருந்தும்.

*இந்திய கோதுமை நிற சருமத்திற்கு - வெண்ணெய் மஞ்சள், மென்மையான நீலம், பீச் நிறம், லாவெண்டர் (இளம் ஊதா), சேஜ் பச்சை போன்ற நிறங்கள் புத்துணர்ச்சியான தோற்றத்தை வழங்கும்.

*சிவப்பான சருமத்திற்கு - செர்ரி சிவப்பு, அடர் கடல் நீலம், காட்டுப் பச்சை, கருப்பு, வெள்ளை போன்ற நிறங்கள் அதிக கான்ட்ராஸ்டை உருவாக்கும்.

இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கு தவிர்க்க வேண்டியவை மிக அதிகமான லோகோக்கள் கொண்ட ஆடைகள், மிகவும் பளபளப்பான நியான் நிறங்கள், சீரற்ற பெரிய பிரிண்ட்கள், ஒரே உடையில் பல நிறங்கள், அதிக கிளிட்டர் அல்லது அதிக ஷைன் கொண்ட துணிகள் ஆகியவை புகைப்படத்தின் அழகைக் குறைக்கக்கூடும். இன்ஸ்டாகிராம் ஃபேஷனின் அடிப்படை விதி விலையுயர்ந்த ஆடைகளை அணிவது அல்ல; சரியான நிறத் தேர்வு, தரமான துணி, எளிமையான ஸ்டைலிங் மற்றும் பொருத்தமான அணிகலன்களின் இணைப்பே சிறந்த புகைப்படங்களை உருவாக்குகிறது. உங்கள் உடையின் நிறம், பின்னணி, வெளிச்சம் மற்றும் உங்கள் தனிப்பட்ட ஸ்டைல் ஆகியவை ஒன்றோடொன்று பொருந்தும்போது, எந்த புகைப்படமும் இயல்பாகவே கவர்ச்சியாக மாறும். நான் எல்லாம் இன்ஸ்டாகிராமில் இல்லை என்றாலும் இப்போதைய டிரெண்டில் இருக்க இந்த நிறம், துணி, தேர்வுகள் அவசியம். குறிப்பாக ஜென் Z உலகுடன் நம்மையும் இணைத்துக்கொள்ள இந்த டிப்ஸ் உதவும். உங்கள் செல்ல மகள், மகன் பேசும் போது நம்மை பூமர் என சொல்லி விடக் கூடாது இல்லையா. அதற்கு இந்த டிப்ஸ் நிச்சயம் உதவும்.

- ஷாலினி நியூட்டன்