Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் வீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் வீணாகும் அவலம்: பக்தர்கள் வேதனை

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயில் உள்ளது. இது சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாசி திருவிழா மற்றும் பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளில் அலங்கரிக்கப்பட்ட சுவாமியுடன் வீதியுலாவுக்கு யானை வாகனம், யாளி வாகனம், குதிரை வாகனம், பல்லக்கு, அதிகார நந்தி, மயில் வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில், இந்த வாகனங்கள் அனைத்தும் கடந்த ஒருமாதமாக கோயில் பிரகாரத்தில் திறந்தவெளியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவைகள் அனைத்தும் மழையிலும் வெயிலிலும் நனைந்து வீணாகி வருவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்து, சமய அறநிலையத்துறை சார்பில் பல லட்ச ரூபாய் செலவு செய்து மரத்தால் செய்யப்பட்டு வண்ணம் பூசப்பட்டுள்ள இந்த வாகனங்கள் தொடர்ந்து வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வருவதால், மரப்பகுதிகள் மற்றும் வண்ணப்பூச்சுகள் சேதம் அடைந்து வருகிறது. இது, நாளடைவில் பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, சுவாமியை சுமந்து செல்லும் பாரம்பரிய வாகனங்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.3லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை மதிப்புடையவை என்று தெரிகிறது. காக்கை, புறா ஆகியவற்றின் எச்சமும் வாகனங்கள் மீது சிதறி பாழாகி வருகிறது. விழாக்காலங்களில் இதை பயன்படுத்தும்போது கோயில் நிர்வாகத்திற்கு அதிகப்படியாக செலவு ஏற்படும்.‘’பல ஆண்டுகளாக கோயில் திருவிழாக்களில் சுவாமியை சுமந்துச்செல்லும் இந்த வாகனங்கள் வெறும் மரப்பொருட்கள் அல்ல, கோவிலின் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் தாங்கி நிற்கும் முக்கியமான சொத்துக்கள் என்பதால் அவற்றை பாதுகாப்பதில் நிர்வாகம் அக்கறை காட்டவேண்டும்’’ என்று பக்தர்கள் கூறுகின்றனர்.