Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பக்தர்களுக்கான கூடுதல் வசதிகள் ஏற்பாடு

*3408 சிறப்பு பஸ்கள்; 24 தற்காலிக பஸ் நிலையங்கள்

*அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு தகவல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பக்தர்களுக்கான கூடுதல் வசதிகள் செய்துத்தரப்படும் என ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் தெரிவித்தனர்.திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த அடுத்த மாதம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிசம்பர் 13ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,669 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.

இந்நிலையில், தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கரபாண்டியன், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்பி சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:கடந்த ஆண்டு தீபத்திருவிழாவில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு பாதுகாப்பாக திரும்பினர். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதற்கு தீபத்திருவிழாவே சாட்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். இந்த ஆண்டும் முதல்வரின் பாராட்டை பெறும் வகையில் சிறப்பாக விழாவை அனைவரும் ஒருங்கிணைந்து நடத்த வேண்டும். சிறு குறைபாடும் இல்லாத வகையில், ஆன்மிக பக்தர்கள் பாராட்டும் வகையில் விழா நடைபெறும். தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகதாரம், போக்குவரத்து வசதி ஆகியவை சிறப்பாக செய்துத்தரப்படும்.

இந்த ஆண்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, 3408 சிறப்பு பஸ்கள் 8670 நடைகள் இயக்கப்படும். சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், 24 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படும். கூடுதலான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின்போது, கோயிலுக்கு அனுமதிக்கப்பட வழங்கப்படும் பாஸ் இந்த ஆண்டு முறைப்படுத்தப்படும். யாருக்கு பாஸ் வழங்கப்படுகிறதோ அவர்கள்தான் கோயிலுக்கு வர வேண்டும். மேலும், போலி அனுமதி அட்டைகளை தடுக்க, அதில் உள்ள கியூஆர் கோடு சரிபார்க்கப்பட்ட பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தவறான பாஸ் கொண்டுவருவோர் மீது கடுமமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைன் மூலம் அனுமதி சீட்டு பெறுவோர் மற்றும் கட்டளைதாரர், உபயதாரர்களை முறையாக அனுமதிக்க ஏற்பாடு செய்யப்படும். அதேபோல், பணி அடையாள அட்டை, திருப்பணியில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள் முறைப்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.அதைத்தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்ததாவது:

திமுக ஆட்சி ஆன்மிகத்துக்கு எதிரானது என சாயம் பூசுவோரின் கருத்துக்களை கடந்த மூன்றரை ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் முதல்வரின் வழிகாட்டுதலோடு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சி காலங்களில் கோயில் விழாக்கள் நடந்ததே தெரியாமல் முடிந்துவிடும். ஆனால், ஆழித்தேரோட்டம், கள்ளழகர் விழா, தீபத்திருவி’ழா என 11 முக்கியமான விழாக்களை முறையாக திட்டமிட்டு, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை இந்த ஆட்சி செய்துத்தருகிறது.

தீபத்திருவிழா குறித்து ஏற்கனவே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக செய்துத்தரப்படும்.

இந்த விழாவைகாண வெளி மாநில முக்கிய பிரமுகர்கள் ஆர்வம் செலுத்துகின்றனர். எனவே, நமது மாநிலத்தின் பெருமையை பேசும் வகையில் அவர்களுக்கு முக்கியத்தும் கொடுக்கப்படும்.

கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் ரூ.920 கோடிக்கு திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே, ஆன்மிக நம்பிக்கையுள்ளவர்களை சிறப்பிக்க வேண்டியது நமது கடமை. தீபத்திருவிழாவுக்காக கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகளைவிட, இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதலாக செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சுகுமார், கோயில் இணை ஆணையர் ஜோதி, மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் கோமதி குணசேகரன், சினம் பெருமாள், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், பிரியாவிஜயரங்கன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அனைத்து கோயில்களுக்கும் கட்டணமின்றி எண்ணெய் மற்றும் திரி

தீபத்திருவிழா ஆய்வுக் கூட்டத்தில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்ததாவது:தீபத்திருவிழாவில் இறைவன் தீப ஒளியாக மின்ன வேண்டும். எனவே, அனைத்து திருக்கோயில்களுக்கும் கட்டணமின்றி எண்ணெய் திரி ஆகியவற்றை அறநிலையத்துறை சார்பில் வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கிராமப்புறங்களில் உள்ள கோயில்கள் உள்பட அனைத்து கோயில்களுக்கும் எண்ணெய் திரி ஆகியவை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.