Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர்களால் அவதிப்படும் ரயில் பயணிகள்: நிலையத்திற்கு உள்ளே, வெளியே செல்ல முடியாமல் கடும் அவதி

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர்களால் ரயில் நிலையத்தின் உள்ளே செல்லவோ, வெளியே வரவோ முடியாமல் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூரில் இருந்து சென்னை மார்க்கமாகவும் அரக்கோணம், திருத்தணி மார்க்கமாகவும் நாள்தோறும் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், ஊருக்கு செல்பவர்கள் என ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்து செல்கின்றனர்.

புறநகர் மின்சார ரயிலில் சென்னைக்கு சென்று அங்கிருந்து, வெளியூர்களுக்கு செல்பவர்களும் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் கோயம்புத்தூர், பெங்களூர், திருப்பதி, திருப்பத்தூர் உள்பட பிற மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்து நின்று செல்கின்றன. இதுபோன்ற எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பயணிகள் அதிகளவில் திருவள்ளூருக்கு வருகின்றனர். இதனால், திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், வேன் போன்ற வாகனங்களில் வருகின்றனர். இதனால் ரயில் நிலையம் அருகில் பரபரப்பான சூழ்நிலையே நிலவுகிறது.

திருவள்ளூரில் 600க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வரும் நிலையில், ரயில்வே ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தை சேர்ந்தவர்கள் 200க்கும் மேற்பட்டோர், ஆட்டோக்களை ரயில் நிலையம் அருகில் நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். ஆனால், மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் ரயில் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் பெரியகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகே ஆட்டோக்களை நிறுத்தி வைத்து ஏற்றிச் செல்கின்றனர். இதனால், மற்ற ஆட்டோக்கள் ரயில் நிலையம் அருகே வரக்கூடாது என்பதற்காக சாலையின் நடுவில் தடுப்பு கம்பிகள் அமைத்துள்ளனர். அந்த தடுப்பு நடுவில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கடந்து செல்ல வேண்டும். 6 தடுப்புகள் அமைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் சென்று வர காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், அந்த தடுப்புகள் அமைக்கப்பட்ட பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்க வைத்திருக்கும் நிலையில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக ஆட்டோ ஓட்டுநர்கள் போட்டி போட்டுக்கொண்டு, பேருந்து முன் நிறுத்தி வைத்திருக்கின்றனர். இதனால், சாலையில் பாதியை ஆக்கிரமித்து இருப்பதால், ரயில் நிலையத்திற்கு செல்ல முடியாமலும், ரயில் நிலையத்திலிருந்து வெளியேற முடியாமலும் ரயில் பயணிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால், வெளியூர்களுக்கு செல்லும் விரைவு ரயில் அல்லது புறநகர் ரயிலை பிடிப்பதற்காக வரும் பயணிகள், போக்குவரத்து நெரிசல் காரணமாக ரயிலை தவற விட்டு சிரமத்திற்கு ஆளாவதையும் காணமுடிகிறது.

அதே நேரத்தில் ரயில் நிலையம் அருகில் ஓட்டல்கள், மருந்து கடைகள், மளிகை கடைகள், பூ கடை, பழக்கடை, செல்போன் கடைகள் என பல்வேறு கடைகளும் செயல்பட்டு வருவதால், ஏராளமான பொதுமக்களும் பொருட்களை வாங்க இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். இதன் காரணமாக ரயில் நிலையம் அருகே காலை, மாலை வேலைகளில் ஆட்டோக்கள் அதிகளவில் வருகையாலும், சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்திருப்பதாலும், நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள், யாராவது ஆட்டோ ஓட்டுநர்களிடம் கேட்டாலும், அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாகவே செயல்படுகின்றனர்.

இந்த பகுதியில் காவல் துறையினர் காலை, மாலை வேளைகளிலாவது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தை சீர்செய்து ரயில் பயணிகளும், பொதுமக்களும் எளிதில் இந்த தடுப்புகளை தாண்டி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.