Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருத்தணி முருகன் கோயில் மலை அடிவாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தடுத்து நிறுத்தம்: தவெக அரசு அழுத்தத்தால் ஒருதலைபட்சமாக போலீஸ் நடந்ததாக பக்தர்கள் குற்றச்சாட்டு

திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் மலைஅடிவாரத்தில், காரில் மலைகோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை என திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்தப்பட்டார். தவெக அரசு அழுத்தம் கொடுத்ததால் போலீசார் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணி முருகன் கோயில் ஆடி கிருத்திகை தெப்ப திருவிழா யொட்டி இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் மலைகோயிலில் குவிந்து, சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முக்கிய பிரமுகர்கள், உபய தாரர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கார் பாஸ் வழங்கப்பட்டு மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தனது குடும்பத்துடன் முருகப்பெருமானை தரிசிக்க காரில் வருகை தந்தார். மலை அடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், திமுக முன்னாள் அமைச்சர் என்பதால், மலைகோயிலுக்கு செல்ல அனுமதி மறுத்துவிட்டனர். அப்போது அவர், என்னிடம் கார் பாஸ் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மலைகோயிலுக்கு செல்ல அனுமதிக்கவேண்டும் என போலீசாரிடம் கேட்டார். மாவட்ட எஸ்பி அனுமதி வழங்கினால் மட்டுமே உங்களை காரில் மலைகோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படும் என போலீசார் திட்டவட்டமாக கூறி தடுத்து நிறுத்தினர்.

கார் பாஸ் உள்ள மற்ற கார்களை மலைகோயில் செல்ல அனுமதிக்கும்போது, முன்னாள் அமைச்சரின் காரை ஏன் அனு மதிக்ககூடாது என கோயில் அறங்காவலர் சுரேஷ்பாபு, மோகனன் ஆகியோர் போலீசாரிடம் எடுத்து கூறியும் போலீசார் ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பியிடம் புகார் செய்யப்பட்டது. அவர், மாவட்ட எஸ்பி சாய் பிரணீத்துக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சுமார் 30 நிமிடம் காக்கவைத்து திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் குடும்பத்தினர் காரில் மலைகோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் தவெக அரசு அழுத்தம் கொடுத்ததால் போலீசார் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.