Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்போரூரில் அடிக்கடி நெரிசல் போக்குவரத்து போலீசாரின்றி திணறும் புறவழிச்சாலை

திருப்போரூர்: ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள திருப்போரூர் பகுதியில் இள்ளலூர் சந்திப்பில் இருந்து ரவுண்டானா வரை வணிக நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ளன. இதில், தொடர் போக்குவரத்து நெரிசல் காரணமாக காலவாக்கத்தில் இருந்து ஆலத்தூர் வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரி, கல்பாக்கம் செல்லும் வாகனங்கள் மட்டுமே இந்த புறவழிச்சாலையில் செல்கின்றன. மற்றபடி ஆலத்தூர், பையனூர், செம்பாக்கம், சிறுதாவூர், செங்கல்பட்டு செல்லும் வாகனங்கள் திருப்போரூர் நகரப்பகுதிக்கு உள்ளே வந்து செல்கின்றன. இந்த சாலையில் பள்ளி, கல்லூரி வாகனங்களும், தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களும் அதிகளவில் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து செல்கின்றன.

இதுமட்டுமின்றி கட்டுமான பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களும், ஏரி மண்ணை எடுத்துச்செல்லும் கனரக லாரிகளும், தண்ணீர் டேங்கர் லாரிகளும் இந்த சாலையில் செல்கின்றன. இதனால், புறவழிச்சாலை அமைத்தும் பழைய ஓ.எம்.ஆர். சாலை எப்போதும் நெரிசலுடன் உள்ளது. திருப்போரூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீசார் மட்டுமே உள்ளனர். மாமல்லபுரத்தில் இருந்து போக்குவரத்து காவல் நிலைய போலீசார் மாதம் ஒரு முறை வந்து திடீர் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். இதனால், போக்குவரத்து விதிமீறல் குறித்து வாகன ஓட்டிகளுக்கு எந்த கவலையும் இல்லை.

இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் 1 கி.மீ. தூரத்தை கடக்க அரை மணி நேரம் செலவாகிறது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்வோரும், வேலைக்கு செல்வோரும் பெரும் நேர விரயத்திற்கு ஆளாகின்றனர். எனவே, திருப்போரூர் காவல் நிலையத்தில் நிரந்தர போக்குவரத்து பிரிவை உருவாக்கி போலீசாரை நியமிக்க வேண்டும் என்றும், கனரக வாகனங்கள் அனைத்தையும் புறவழிச்சாலையில் மட்டுமே செல்ல அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.