Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருப்பரங்குன்றம் சர்ச்சைக்கு இடையே அடுத்த பொய் ‘கந்தன் எக்ஸ்பிரஸ்’ புருடா விட்ட வானதி: குவியும் கண்டனங்கள்

கோவை: தேஜஸ் எக்ஸ்பிரஸ், கந்தன் எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்றப்பட்டு, திருப்பரங்குன்றம் வரை நீட்டிக்கப்பட்டதாக சமூக ஊடகத்தில் பொய் தகவல் வெளியிட்ட வானதி சீனிவாசனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று ஒரு பதிவினை வெளியிட்டார். அதில், ‘‘தமிழக வரலாற்றினை நாடு முழுவதும் எடுத்துரைக்கும் வகையில் இந்திய ரயில்வே தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டி கவுரவித்து வரும்வேளையில், தற்போது தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் பெயரை மாற்றி ‘கந்தன் எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் சூட்டியுள்ளது வரவேற்கத்தக்கது. வருகின்ற தை முதல்நாள் முதல் இந்த ரயிலானது முருகக் கடவுளின் முதல்படை வீடாம் திருப்பரங்குன்றம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, முருக பக்தர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழ் கடவுள் பெயர் சூட்டி, ரயில் சேவையை நீட்டித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தெற்கு ரயில்வேக்கு மனமார்ந்த நன்றிகள்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால் தனியார் மூலம் இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூர் முதல் மதுரை வரை இயக்கப்பட்டு வரும் நிலையில், ஜனவரி முதல் திருப்பரங்குன்றம் வரை நீட்டிக்கப்படும் என ரயில்வே துறை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் வானதி சீனிவாசன் அரசியல் லாபத்திற்காக பொய் செய்தி வெளியிட்டது தெரியவந்தது. இதையறிந்த நெட்டிசன்கள் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் கருதியும், மதுரை, கோவை மெட்ரோ ரயில்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஒன்றிய அரசு மீதான அதிருப்தியை மடைமாற்றவும் வானதி சீனிவாசன் பொய் செய்தி வெளியிட்டு இருப்பதாக கமெண்டுகளை பதிவிட்டனர். மேலும் கட்சியில் தேசிய பொறுப்பிலும், சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளவர் இப்படி பொய் செய்தி வெளியிட்டு மக்களை ஏமாற்றலாமா? எனவும் வறுத்தெடுத்தனர். இதனால் சுதாகரித்துக்கொண்ட வானதி சீனிவாசன், தேஜஸ் எக்ஸ்பிரஸ் தொடர்பான தனது சமூக வலைதள பதிவினை நீக்கம் செய்தார். இருந்தாலும் பொறுப்பற்ற முறையில் பொய் செய்தி பரப்பிய வானதி சீனிவாசனுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.