திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 2014, 2017 தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும்: ஐகோர்ட் கிளையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை:திருப்பரங்குன்றம் தீப வழக்கில் 2014, 2017ம் ஆண்டு தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தக் கோரி, ஐகோர்ட் கிளை முன் 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் 2014ல் ஐகோர்ட் கிளை வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரியும், இந்த விவகாரத்தில் சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன், சு.வெங்கடேசன் ஆகியோரை இழிவுபடுத்தி பேசி வருவோரை கைது செய்யக்கோரியும் மதுரை ஐகோர்ட் கிளை முன்பு வக்கீல்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், ‘நீதிமன்றத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 2014 தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர். இது குறித்து வக்கீல் வாஞ்சிநாதன் கூறுகையில், ‘திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில், கடந்த 2014ம் ஆண்டு ஐகோர்ட் கிளை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பையும், 2017ல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் நடமுறைப்படுத்த வேண்டும்.
பாஜகவைச் சேர்ந்த வக்கீல்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினர். நாங்கள் எந்த நீதிபதிக்கும் ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் நடத்தவில்லை. திருப்பரங்குன்றம் வழக்கில் கடந்த கால தீர்ப்புகளை அமல்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில், வக்கீல்கள் பசும்பொன் பாண்டியன், பஷீர்தீன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.


