Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? - பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கக்கோரி மதுரை எழுமலையைச் சேர்ந்த ராமரவிக்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து, மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் தான். கார்த்திகை நாளில் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர் காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்து தனி நீதிபதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தனி நீதிபதி பிரதான மனுவில் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்களில் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராகவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசு சார்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதியின் அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதித்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், அவமதிப்பு வழக்குகள் ஒரு பக்கம் இருக்கட்டும். தனி நீதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே? இது ஜனநாயக நாடு. மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என கேள்வி எழுப்பினர். அரசுத் தரப்பில், உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த வேண்டியதுள்ளது எனக் கூறப்பட்டது. தர்கா தரப்பில் தங்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதில் தமிழக அரசின் முடிவு என்ன? என்பதை நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். தர்கா தரப்பு எதிர்மனுதாராக சேர்க்கப்படுகிறது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுகிறது. அடுத்த விசாரணை ஜூன் 22-க்கு தள்ளிவைக்கப்படுகிறது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.