திருப்பூர்: திருப்பூர் என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது பனியன் மற்றும் ஜவுளித் தொழில்தான். ஆனால், அதே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற சிற்ப நகரமாக ஜொலித்து வருகிறது.
மாமல்லபுரம் சிற்பக் கலையின் வணிகத் தலைநகரமாகத் திகழ்ந்து வந்தாலும், சிற்ப உற்பத்தியில் அதையும் தாண்டி முன்னணி வகிப்பது திருமுருகன்பூண்டி எனக் கூறப்படுகிறது.
இங்கு சுமார் 250-க்கும் மேற்பட்ட சிற்பக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 2,000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கல்லுக்கு உயிர் கொடுத்து, அவற்றை கடவுள் சிலைகளாகவும், கலைப்பொருட்களாகவும் வடிவமைத்து வருகின்றனர்.
இங்கு வடிக்கப்படும் நுணுக்கமான கலைநயமிக்க சிலைகள் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைத் தாண்டி, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
திருமுருகன்பூண்டி பிரதான சாலையின் இருபுறங்களிலும் கலைநயத்துடன் வரிசையாக நிற்கும் பல்வேறு வகையான சிலைகள், இப்பகுதியின் சிற்பக் கலையின் பெருமையை வெளிப்படுத்துகின்றன.
சிற்பக் கலைஞர்கள் கூறுகையில், “கல்லுக்கு தற்போது அதிகளவில் தட்டுப்பாடு உள்ளது. அதிக விலை கொடுத்துதான் கற்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது. அதே நேரத்தில் சிலைகளுக்கு நல்ல வரவேற்பும், அதிகளவு தேவைப்பாடும் உள்ளது. சிற்பக் கலை மட்டுமே எங்களுக்குத் தெரிந்த தொழில் என்பதால், இதையே நம்பி எங்களது வாழ்வாதாரம் உள்ளது” எனத் தெரிவித்தனர்.
கல்லுக்கு உயிர் கொடுத்து, உலக அரங்கில் தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்திக் கொண்டிருக்கும் இந்த சிற்பக் கலைஞர்களுக்கு அரசு சார்பில் முறையான பயிற்சி மையம் அமைத்துத் தருவதுடன், தேவையான உதவிகளையும் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசின் உரிய ஆதரவும், பயிற்சி வசதிகளும் கிடைத்தால், தமிழர்களின் பாரம்பரிய சிற்பக் கலை உலகச் சந்தையில் இன்னும் பல மடங்கு பிரகாசிக்கும் என்பதில் ஐயமில்லை.

