Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமாவளவனை கூட்டணிக்கு அழைக்கவில்லை 2026 சட்டமன்ற தேர்தலில் ‘வெற்றிவேல்-வீரவேல்’ ஆபரேஷன்: நயினார் நாகேந்திரன் பேட்டி

நெல்லை: 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிவேல், வீரவேல் ஆபரேஷன் மூலம் தேர்தலை சந்திப்போம். திருமாவளவனை பாஜ கூட்டணிக்கு நான் அழைக்கவில்லை என்று நெல்லையில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்தார். நெல்லை மாவட்ட பாஜ அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியா சுதந்திரம் பெற்ற போது ஏற்பட்ட சந்தோஷத்தைவிட, தற்போது அடைந்த சந்தோஷம் அதிகம்.

இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. இதன் மூலம் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்களின் ஆன்மா சாந்தி அடையும். இதற்கு தமிழ்நாடு பாஜ சார்பில் பிரதமர் மோடிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் முதல்வராக இருக்கும் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்றார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தாக்குதல் குறித்து பதிவிட்டுள்ளார்.

அதற்காக இரண்டு மாநில முதல்வர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.2026 சட்டமன்ற தேர்தலில் ‘வெற்றிவேல் வீரவேல்’ எனும் ஆபரேஷனை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம். திருமாவளவன் எனது நண்பர். அவர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். நான் கூட்டணி தொடர்பாக இதுவரை அவரிடம் பேசவில்லை. வேறு யாரும் பேசினார்களா என்பது தெரியவில்லை. தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்யின் பாதுகாவலர்கள் யாரும் ஆயுதம் ஏந்தக்கூடாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

* ‘நீட் தேர்விற்கு கடும் சோதனைகள் தேவையில்லாதது’

நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், நீட் தேர்வு எழுதச் செல்லும் பெண்களிடம் சோதனை என்ற பெயரில் தேவையில்லாத விஷயங்களை, அரசியலுக்காக சிலர் செய்கின்றனர். பெண்களின் முடியை அவிழ்க்கச் செய்வது போன்ற சோதனைகள் தேவையில்லாதது. எனினும் பட்டன்களில் எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளதா என்பதை பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது’ என்றார்