திருமங்கலத்தில் பரபரப்பு:ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து
அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் 12வது மெயின் ரோட்டில் ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகம் இயங்கிவருகிறது. இன்றுகாலை 9 மணி அளவில், இங்குள்ள தரைத் தளத்தில் உள்ள கேண்டீனில் இருந்து புகைவந்ததுடன் சிறிது நேரத்தில் தீப்பிடிக்க ஆரம்பித்தது. இதன்காரணமாக அங்கிருந்தவர்கள் வெளியே ஓடிவந்துவிட்டனர். இதனிடையே தீ வேகமாக பரவி பெண் அதிகாரிகளின் ஓய்வறை மற்றும் மற்ற அறைகளுக்கு பரவியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறை இணை இயக்குனர் சத்யநாராயணா தலைமையில், வில்லிவாக்கம், அண்ணாநகர், ஜெ.ஜெ.நகர், கீழ்பாக்கம், அம்பத்தூர், குரோம்பேட்டை மற்றும் கோயம்பேடு பகுதிகளில் இருந்து 10 க்கும் மேற்பட்ட வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் 3 மணிநேரம் கழித்து தீயை முற்றிலும் அணைத்தனர். இதன்பின்னர் தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது கம்ப்யூட்டர்கள், ஷேர், டேபிள் மற்றும் முக்கிய ஆவணங்கள், கேண்டீனில் உள்ள பாத்திரங்கள், மின்னனு உபகரணங்கள் அனைத்து எரிந்து சேதம் அடைந்திருந்தது. தடவியல் துறை அதிகாரிகள் வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரிக்கின்றனர். தீயணைப்புத்துறை இணை இயக்குனர் சத்யநாராயணா கூறுகையில், ‘’ஜிஎஸ்டி ஆணையரகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட வீரர்கள் சுமார் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மின் கசிவா? சதிச் செயலா? என்று திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். விசாரணைக்கு பிறகு தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தெரியவரும்’ என்றார்.