மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மாபுரம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள விநாயகர் கோயில் தெரு, திம்மாபுரம் ஊராட்சி, விளங்காடு ஊராட்சி இடையே இணைப்பு சாலையாக உள்ளது. சுமார் 100 மீட்டர் அளவில் அமைந்துள்ள இந்த சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக பொதுமக்கள் பயணிக்க முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது.
சமீபத்தில் பெய்த மழையினால் அந்த சாலை சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்திவரும் பொதுமக்கள் குறிப்பாக விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து திம்மாபுரம் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி நிர்வாகம் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனிமேலாவது நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்கள் கேட்கின்றனர்.
