சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் 19வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் ஹாயாக படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயில் அடுத்துள்ள வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையில் அவ்வப்போது சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு 19வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலை ஓரத்தில் சிறுத்தை ஒன்று படுத்திருப்பதை கண்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுத்தை படுத்திருந்த காட்சியை அவர்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். வாகனங்கள் அதிகப்படியாக பயணிக்கும் மலைப்பாதையில் சிறுத்தை ஹாயாக படுத்திருந்தது வாகன ஓட்டிகளிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. வனப்பகுதி சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் வாகனத்தை விட்டு கீழே இறங்கக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
