சென்னை: சென்னையிலேயே 2வது பெரிய மெட்ரோ நிலையமாக பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலையம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. தரையில் இருந்து 20 மீட்டர் ஆழத்திலும், பூமிக்கு அடியில் 320 மீட்டர் நீளத்திற்கும் கட்டப்பட்டு வரும் நிலையம், ஒரே நேரத்தில் 5000 பேர் பயன்படுத்தும் வகையில் அமைகிறது
சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான ஆரஞ்சு லைன் மெட்ரோ பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதில் பனகல் பார்க் ஸ்டேஷனில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஸ்டேஷனில் ஐந்து நுழைவு பகுதிகளை அமைக்க மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. துவக்கத்தில் மெட்ரோ ரயிலுக்கு போதிய பயணிகள் வரவேற்பு இல்லாதது போல தெரிந்தாலும் தற்போது சென்னையின் முக்கிய போக்குவரத்து அமைப்பாக மெட்ரோ மாறிவிட்டது. தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வருகிறார்கள்
இதனால், மெட்ரோ ரயில்களில் தற்போது பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிகறது. வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-ல் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதில் வழித்தடம் 3 மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ நீளத்தில் 19 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமைக்கப்படவுள்ளன. இதில் கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வரையிலான ஆரஞ்சு லைன் மெட்ரோ மிக முக்கியமான ரூட்டாக பார்க்கப்படுகிறது.
இந்த ரூட்டில் தான் நந்தனம் மற்றும் கோடம்பாக்கம் இடையில் பனகல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் வரவுள்ளது. சென்னை தி நகரில் உள்ள பனகல் பூங்கா ரயில்வே ஸ்டேஷன் சுரங்கத்தில் அமைகிறது. பனகல் பூங்கா ஸ்டேஷனை பொறுத்தவரை மிக முக்கியமான ஸ்டேஷன்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தி.நகர் சென்னையின் மிக முக்கியமான வர்த்தக பகுதியாக உள்ளது. இதனால் பயணிகள் கூட்டம் இங்கு எப்போதுமே இருக்கும். இதனை கருத்தில் கொண்டு பிரமாண்டமாக இந்த மெட் ரோ ரயில் நிலையம் அமைகிறது. வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த பணிகள் முடிவடையும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


