Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘தேசிய தலைவர் தேவர் பெருமான்’ படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு: காமராஜர் பற்றி உண்மைக்கு மாறான காட்சி இருப்பதாக குற்றச்சாட்டு: விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: தேசிய தலைவர் தேவர் பெருமான் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய பொது நல வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தேசிய தலைவர் தேவர் பெருமான் படத்தை தடை செய்யக் கோரி சத்திரிய சான்றோர் படை நிறுவன தலைவர் ஹரிநாடார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த அக்டோபர் 30ம் தேதி வெளியான தேசிய தலைவர் தேவர் பெருமான் திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து எந்த ஆதாரங்களும் இல்லாமல், அவமதிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 1936ம் ஆண்டு விருதுநகர் நகராட்சி தேர்தலில், ஆடு வாங்கிக் கொடுத்து, வரி செலுத்தி, காமராஜர் போட்டியிட தேவர் உதவியதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. உண்மைக்கு புறம்பான இந்த தகவல் ஏழாம் வகுப்பு பாடத்தில் இடம் பெற்றிருந்தது.

அதை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் 2019ம் ஆண்டு இந்த பகுதிகளை நீக்கியது. தமிழ்நாட்டில் தனது ஆட்சி காலத்தில் 19 அணைகளை கட்டி, நீர்பாசனத் துறையில் புரட்சி ஏற்படுத்தியவர் காமராஜர். பல்வேறு இடங்களில் தொழிற்பேட்டைகளை அமைத்ததுடன், 1,200 பள்ளிகளை தொடங்கி, மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர்.

இந்நிலையில், இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில், காமராஜரை தவறாக சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, தேசிய தலைவர் தேவர் பெருமான் படத்திற்கு தடை விதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு மீது விளக்கம் தருமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.