Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேன்கனிக்கோட்டை அருகே விபத்து கார் மீது டிப்பர் லாரி மோதி ஆண்குழந்தை, பெண் பலி

*3 பேர் படுகாயம்; தப்பிய டிரைவருக்கு வலை

தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே, கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், ஒன்றரை வயது ஆண் குழந்தை மற்றும் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், படுகாயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியில் செயல்படும் ஜல்லி கிரஷரில் இருந்து எம்.சாண்ட் லோடு ஏற்றிக் கொண்டு, நேற்று அதிகாலை 5 மணியளவில் தேன்கனிக்கோட்டை-ஓசூர் சாலையில் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

பி.செட்டிப்பள்ளி பஸ் ஸ்டாப் பகுதியில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய லாரி, சாலையின் இடது ஓரமாக இருந்த புங்கமரத்தில் மோதியது. உடனே டிரைவர் லாரியை வலதுபுறமாக திருப்பியுள்ளார். அந்த நேரத்தில், அவ்வழியாக ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி சென்ற கார் மீது, லாரி பயங்கரமாக மோதியது. இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதை கண்ட டிரைவர், லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார்.

இந்த விபத்தில் காரில் வந்த குழந்தை உள்பட 5 பேர், இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அந்த வழியாக சென்றவர்கள் கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார், கிராம மக்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். அப்போது, ஒன்றரை வயது ஆண் குழந்தை மற்றும் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

மேலும், படுகாயமடைந்த மற்ற 3 பேரையும் போலீசார் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த குழந்தை மற்றும் பெண்ணின் உடல்கள், பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசாரின் விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த கணேசன் மகன் நடராஜ்(33) என்பவர், தனது மனைவி அபிராமி(25), ஒன்றரை வயது குழந்தை சோம்குகன், உறவினர்கள் சீனிவாசன் மனைவி கவிதா(43), செல்வநாயகம் மகன் பிரபாகரன்(24) ஆகியோருடன் காரில் வந்தது தெரியவந்தது. இதில், கணேசனின் ஒன்றரை வயது குழந்தை சோம்குகன், உறவினரான சீனிவாசன் மனைவி கவிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்ததும், மற்றவர்கள் படுகாயமடைந்ததும் தெரியவந்தது.

இவர்கள் ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை வழியாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற போது, இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.