Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியதற்கு தார்மீக பொறுப்பேற்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் ராஜினாமா செய்ய வேண்டும்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

சென்னை: தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியதற்கு தார்மீக பொறுப்பேற்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று காலை சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இன்று திரைப்படத்தை மிஞ்சுகின்ற அளவுக்கு காட்சிகள் நடக்கிறது. செஞ்சியில் 7 வயது சிறுமி காணாமல் போய் 3 வாரம் ஆகியும் இன்றைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. சென்னை அடையாறு பகுதியில், ரோட்டில் வந்து வெட்டிவிட்டு ரீல்ஸ் போடுகிறார்கள். தேனி ஜெயிலில் இருந்து 17 பேர் தப்பித்து போகிறார்கள். பிடித்துவிட்டார்கள், அது வேற விஷயம். சிறை மரணம், பாலியல் துன்புறுத்தல்கள், அத்துமீறல்கள், வெளியில் போனால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால், தனியாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வீடு புகுந்து பெண்களை வெட்டிவிட்டு நகையை கொள்ளையடிக்கிறார்கள்.

விலைவாசி உயர்வு குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் கலையரசன் என்பவரை கைது செய்கிறார்கள். காரணம் இல்லாமல் கைது செய்யப்பட்டு, காவல் துறையால் அலைக்கழிக்கப்படுகிறார். ஒரு பக்கம் சட்ட அமைச்சர், போலீஸ் செய்தது தவறு என்கிறது. உங்களுக்கு (தவெக அரசுக்கு) வெட்கமே இல்லையா? யாருடைய ஆட்சி நடக்கிறது. உங்கள் ஆட்சி நடக்கிறது. ஆனால், போலீஸ் செய்தது தவறு என்றால் தமிழ்நாட்டில் விஜய் ராஜ்யமா? இல்லை தவெக ராஜ்யமா? அரசா அல்லது ஜனநாயக ராஜ்யமா? இதெல்லாம் கிடையாது. ஒரே ராஜ்யம், போலீஸ் ராஜ்யம்தான் நடக்கிறது. போலீஸ் ஒரு தறிகெட்ட குதிரைபோல தடுமாறி இந்த பக்கம், அந்த பக்கம் ஓடி கட்டுப்படுத்த முடியாமல் அரசு இன்று இருக்கிறது. இப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு போய் போலீஸ் ராஜ்யத்தால் தமிழக மக்கள் விஜய் அரசு போறுப்பேற்றதில் இருந்து பாதிக்கப்படுகிறார்கள்.

மின்சாரத்தை பொறுத்தவரை 2011ல் மின்சாரம் வெளியில் இருந்து வாங்கினோம். அப்போது ஒரு யூனிட் ரூ.5 என்று கொள்முதல் செய்யப்பட்டது. 2021 வரை அதிகப்பட்சமாக ரூ.11 வரை வாங்கப்பட்டது. திமுக ஆட்சியில் ரூ.21க்கு மின்சாரம் வாங்கப்பட்டது. ஆனால் இப்போது அப்படியே இரண்டு மடங்காக ரூ.37 மற்றும் ரூ.41க்கு வாங்குவது எந்தவிதத்தில் நியாயம்? முன்கூட்டியே திட்டமிடாமல் மக்களை இருளில் தத்தளிக்கவிட்டு அதன்மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது மக்களுடைய வரிப்பணம் வீணாக்குவதாகும். இதை யார் மீது சுமத்துவீர்கள்? இப்போது ஆவின் பொருட்கள் எல்லாம் விலையேறி விட்டது. மக்களுக்கு விஜய் அரசு தீபாவளி பரிசாக விலையை ஏற்றியுள்ளது. அதேபோல தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் நிறைய பரிசுகள் காத்துக் கொண்டிருக்கிறது.

மக்களை பொறுத்தவரை இன்று ஒரு மாற்றம் தெரியுது. ஏன் இந்த தவெக அரசை கொண்டு வந்தோம் என்று மக்கள் மத்தியில் தெரிந்திருக்கிறது. தேனியில் சிறை கைதிகள் 17 பேர் தப்பித்த விவகாரத்தில் டிஜிபியைவிட துறை அமைச்சருக்கே தார்மீக பொறுப்பு உள்ளது. அமைச்சரவை என்பது ஒரு கூட்டு பொறுப்பு. அதன் அடிப்படையில் ஒரு தார்மீக பொறுப்பை சட்ட அமைச்சர் ஏற்க வேண்டும். 31 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயிலில் இருந்து கைதிகள் இத்தனை ேபர் தப்பித்து போயிருக்கிறார்கள். அவர்களை பிடித்துவிட்டோம் என்பதில் என்ன பெருமை இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இன்று நடக்கிறதா? இல்லையா? அதிகாரிகள் அரசாங்கம் தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது. தார்மீக பொறுப்பு ஏற்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.