Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேனி மாவட்டத்தில் 2 தொகுதியை குறிவைக்கும் குக்கர்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஹனிபீ மாவட்டத்தில் ரெண்டு தொகுதியை குக்கர்காரர் குறி வைப்பதால் இலைக்கட்சி முக்கிய நிர்வாகிகள் தலைமைக்கு புகார்களை தட்டிவிடுறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘கடந்த எம்பி தேர்தலின்போது ஹனிபீ தொகுதியில் மலராத கட்சியோட கூட்டணி சேர்ந்து குக்கர்காரர் போட்டியிட்டு ரெண்டாம் இடத்தை பிடித்தார். இலைக்கட்சி மூன்றாம் இடத்தை பிடித்தது. இதனால் ஹனீபீ மாவட்டத்தில் தனது செல்வாக்கு குறையவில்லையென எல்லோரிடமும் கூறி வருகிறாராம்.. இம்முறை சட்டமன்ற தேர்தலில் ரெண்டு தொகுதிகளை பெற வேண்டுமென்ற முனைப்புடன் குக்கர்காரர் தீவிரமாக செயல்பட்டு வருகிறாராம்.. தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கூறினாலும், இலைக்கட்சி தலைவர், தலைவி போட்டியிட்ட ஆறெழுத்து தொகுதியில் ஒரு கண் வைத்துள்ளாராம்..

அதேபோல தனிக்கட்சி துவங்கிய பிறகு தன்னுடன் துவக்கத்தில் இருந்தே உடனிருக்கும் பிக் பாண்ட் தொகுதி முன்னாள் எம்எல்ஏவான டாக்டருக்கு, எப்படியாவது சீட்டு வாங்கிட வேணும்னு குக்கர்காரர் முனைப்பா இருக்காராம்.. அதிக தொகுதிகளை விட விரும்பும் தொகுதிகளை தாங்க என்று, தான் இருக்கும் கூட்டணிக்கு கோரிக்கையும் வைத்துள்ளாராம்.. இதனால கடந்த 3 ஆண்டுகளாக தங்களுக்கு சீட் கிடைக்குமென காத்திருந்த இலைக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் எரிச்சலில் உள்ளனராம்.. நாம துண்டை போட்டு உட்காரலாம்னு பார்த்தால், நேத்து வந்த குக்கர்காரர் டோட்டல் சீனையை கெடுக்கிறாரே என புலம்புகின்றனராம்.. இருப்பதே நாலு தொகுதிதான்... ஒரு தொகுதியை வேணும்னா கொடுங்க.. ரெண்டு தொகுதி கொடுத்தால் கட்சியை எதிர்க்கவும் தயங்க மாட்டோம்னு இலைக்கட்சி தலைமைக்கு தொடர்ந்து புகார்களை அனுப்பி வருகின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூக்கம் இல்லாம தவிக்கும் தேனிக்காரர் இலைக்கட்சியில் சேர நான் ரெடி, நீங்க ரெடியான்னு கேள்வி எழுப்பி தூது விட்டதுக்கு வாய்ப்பே இல்லைனு சேலத்துக்காரர் கைவிரித்துவிட்டாரே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சியின் தலைவியான மம்மியின் நெஞ்சில் குடியிருந்தவர் தான் தேனிக்காரர்.. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மம்மிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட நேரத்தில் முதல்வர் பதவியை, தேனிக்காரரிடம் கொடுத்துட்டு ஜெயிலுக்கு போனாராம் மம்மி. வெளியே வந்தவுடன் மீண்டும் பதவியை மம்மியிடமே கொடுத்துட்டாராம்.. இவ்வாறு பெயர் பெற்ற தேனிக்காரரின் முதல்வர் பதவியை பறித்தவர் தான் சின்ன மம்மியும் குக்கர்காரருமாம்.. இதனால தர்மயுத்தம் நடத்தியதால் கட்சி ரெண்டாக உடைந்தது தான் மிச்சம்.. வேறு ஒன்றும் நடக்கல.. அதன்பிறகு ஒவ்வொரு நாளும் அவருக்கு நெருப்பில் நடப்பது போலத்தான் இருக்குதாம்... மூன்று முறை முதல்வராக இருந்தாலும் கட்சியின் கரைவேட்டி கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுட்டாராம்.. எப்படியாவது கரைவேட்டியை கட்டியே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டாலும் வாய்ப்பே இல்லாத இடத்துக்கு தற்போதைய இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர் தள்ளிவிட்டுட்டாராம்.. இதனால அரசியலில் ஒரு நிலையான இடத்துக்கு போகமுடியாம தவிக்கிறாராம்.. இவரை நம்பி வந்தவர்கள் நடுத்தெருவுக்கு வந்துட்டோமுன்னு நொந்துபோய் தாங்கள் விரும்பிய இடத்துக்கு பறந்துபோயிட்டாங்களாம்.. இந்நிலைக்கு ஒன்றிய மலராத கட்சிதான் காரணமாம்.. அவர்களை நம்பி வந்து நட்டாற்றில் கரை கிடைக்காமல் தவிக்கிறாராம் தேனிக்காரர்.. தனிக்கட்சியை தொடங்கிக்கொண்டு கூட்டணியில் சேர்ந்திடலாமுன்னு சொல்லியும் அவரது மனது ஏத்துக்கிடலையாம்.. இரவு நேரங்களில் மம்மி கனவில் வந்து நிக்காங்களாம்.. இதனால தேனிக்காரர் தூக்கமில்லாமல் தவிப்பதுடன், வேறு இடமே எனக்கு வேண்டாம்.. எப்படியாவது இலைக்கட்சியில் இணைந்தே தீருவேன் என அடம் பிடிச்சுகிட்டிருந்தாரு.. இச்சூழலில் இன்னும் ரெண்டு நாளில் இலைக்கட்சியில் சேர்ந்தே தீருவேன் நான் ரெடி, நீங்க ரெடியா என கேட்டதுடன் தூதும் விட்டிருக்கிறாரு.. ஆனால், இவரது ஏக்கத்திற்கு இலைக்கட்சி தலைவர் கருணை காட்டவில்லை. பொதுக்குழுவுல ஏகமனதாக முடிவெத்து அடிப்படை உறுப்பினரில் இருந்தே நீக்கிட்டோம். அவரை இனி இலைக்கட்சியில் சேர்க்கவே வாய்ப்பு இல்லை என கைவிரித்து விட்டார் இலைக்கட்சி தலைவர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஓய்வுபெற்ற பிறகும் சர்வே துறையில் அதிகாரி ஒருத்தர் தனது பவரை காட்டி விரட்டி வருகிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மான்செஸ்டர் மாவட்டத்தில் சர்வே துறையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர், இன்னமும் ‘’ தனது பவரை காண்பித்து வருகிறாராம்.. இவர், ஓய்வுபெற்ற சர்வேயர்கள், புல உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்களை தனது கைக்குள் வைத்துக்கொண்டு, சர்வே சம்பந்தமான அனைத்து கோப்புகளையும் திரட்டி வருகிறாராம்.. மாநகர் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களிலும் இவரது ராஜ்யம்தான் நடக்குதாம்.. மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், நிலம் அளப்பது போன்ற கோப்புகளை தனது பிடியில் வைத்திருக்கிறாராம்.. தற்போது பணியில் இருக்கும் சர்வேயர்களுக்கு சில நோட்டுகளை போட்டு, அவர்களை மிரட்டி, அடிபணிய செய்கிறாராம்.. இவர் எதிர்பார்க்கிற மாதிரி பணி செய்துகொடுக்காவிட்டால், மேலதிகாரிகளுக்கு மொட்டை பெட்டிசன் போடுகிறாராம்.. இது, மலைபோல் குவிந்து கிடக்கிறதாம்.. விடாது கருப்பு... என்ற பாணியில் இவரது மிரட்டல் தொடர்வதால், அனைத்து துறை சார்ந்த சர்வேயர்கள் மற்றும் துணை சர்வேயர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.