சோர்ந்து கிடக்கும் நிர்வாகிகளுக்கு தெம்பூட்ட படாதபாடு படும் தேனிக்காரரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
‘‘தாசில்தாரின் செல்வாக்கை வைத்து ஊழியர்களை மிரட்டி மாமூல் வசூலில் ஈடுபடுகிறாராமே கடை ஊழியர் தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மான்செஸ்டர் மாவட்டத்தில் மது என தொடங்கும் தாலுகாவில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வரும் குருவானவர் கடந்த இலைக்கட்சி ஆட்சியின் போது இலைக்கட்சி நிர்வாகிகளுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்து அவர்களின் குட்புக்கில் இடம்பிடித்து வந்தாராம்.. தன்னுடைய பழைய தொடர்புகளை பயன்படுத்தி தொடர்ந்து அதே தாலுகா அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டு நிழல் தாசில்தாராக செயல்பட்டு வருகிறாராம்.. இவரது முக்கிய பணி என்னவென்றால், யார் தாசில்தாராக வந்தாலும், அவர்களிடம் சென்று, எங்கெங்கு எவ்வளவு மாமூல் வருகிறது என்கிற விவரத்தை சொல்லி, அதை மாதம்தோறும் சரியாக வசூல் செய்து கொடுத்து அதில் தனக்குண்டான பங்கை எடுத்துக் கொள்வதோடு, மாமூலை சரியாக வசூல் செய்து கொடுப்பதால் தாசில்தார்களின் நிழலாக இருக்காராம்.. சிக்கலாக இருக்கும் இடங்களுக்கு பட்டா மாறுதல், சிட்டா மாறுதல் கேட்டு வருபவர்களிடமும், விவசாய நிலத்தில் வீட்டுமனை பிரித்து விற்பனை செய்ய தரிசு நில சான்றிதழ் கேட்டு வருபவர்களிடமும் ரேட் பேசி, கமிஷன் வாங்கிக்கொள்வாராம்.. உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில், விழா மேடையில், கையில் செல்போனை வைத்துக்கொண்டு, தாசில்தாருக்கு உத்தரவிடுவது போல் இவர் செயல்படுவதால் இவர்தான் தாசில்தார் என்று சிலர் நினைத்துக்கொள்ளும் அளவிற்கு அவரது நடவடிக்கைகள் இருக்கிறதாம்.. இலைக்கட்சி ஆட்சியின்போது, தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அலுவலக ஊழியர்களை மிரட்டி வந்த இவர், தற்போது தாசில்தாரிடம் உள்ள செல்வாக்கை வைத்து ஊழியர்களை மிரட்டி வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சியில் மாஜி அமைச்சரின் செயல்பாடுகளால் தலைமை ரொம்பவே அதிருப்தியில் இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கொசுவலை மாவட்டத்தில் இலை கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகியான விஜயமானவர் செயல்பாடுகளால் அவர் மீது தலைமை கடும் கோபத்தில் இருக்கிறதாம்.. 2026 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி வந்து விடும், அதன் பிறகு கட்சி வேலையை ஆரம்பிக்கலாம் என விஜயமானவர் திட்டமிட்டு இருந்தாராம்.. ஆனால், அவர் எதிர்பார்த்த மாதிரி எதுவும் நடக்காததால் விரக்தியின் உச்சகட்டத்தில் விஜயமானவர் சென்று இருக்காரு.. தலைமை என்ன சொன்னாலும் எதுவும் கண்டுகொள்வது கிடையாதாம்.. தனக்கு என்ன தோன்றுகிறதோ, அதை தான் விஜயமானவர் செய்து வருகிறாராம்.. இவரை தவிர மற்ற நிர்வாகிகளும் கட்சி பணியில் சுணக்கம் காட்டி வருவதாக தொண்டர்கள் மத்தியில் பரவலாக பேசிக்கிறாங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேனிக்காரரின் ஆதரவாளர்கள் அரசியல் முகவரியை இழந்து விடுவோமோ என்று நினைக்கும் அளவுக்கு சோர்ந்து கிடக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சட்டமன்ற தேர்தலுக்காக இலை கட்சியினர் உற்சாகத்துடன் விருப்ப மனு தாக்கல் செய்து வரும் நிலையில் அல்வா, முத்து மாவட்டங்களின் தேனிக்காரரின் ஆதரவாளர்கள் ஏக்கத்தோடு பார்க்கின்றனராம்.. ஏற்கனவே தென் மாவட்டங்களில் அவருக்கு ஆதரவாக இருந்த சட்டப்புலி எம்எல்ஏவும் திமுகவில் இணைந்து விட்ட நிலையில், தேனிக்காரரின் கை மிகவும் இறங்கிப் போனதாம்.. சமீபத்தில் டெல்லி தலைமை அழைத்ததால் எப்படியும் இணைந்து விடுவோம் என உற்சாகத்தோடு புறப்பட்டுச் சென்றாராம்.. ஆனால் சமீபத்தில் கூடிய இலை கட்சியின் பொதுக்குழுவுக்கு பின்னர் தேனிக்காரர் மிகவும் சோர்ந்து விட்டாராம்.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் போனால் முகவரியை இழந்து விடுவோமே என தேனிக்காரரின் அல்வா, முத்து மாவட்ட ஆதரவாளர்கள் நினைக்கிறார்களாம்.. எப்படியும் குக்கர்காரரும், நாமும் தேசிய கட்சியில் இணைந்து சீட் பெற்று விடலாம்.. சோர்ந்து போய் விடாதீர்கள் என தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு தேனிக்காரர் படாதபாடு பட்டு ‘பூஸ்ட்’ கொடுத்துக் கொண்டிருக்கிறாராம்.. இதை பலர் நம்ப தயாராக இல்லை, சிலரோ நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். அவர்களது நம்பிக்கை பலிக்குமா என்பது டெல்லியின் கையில்தான் உள்ளது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சியில் எதிரும் புதிருமாக இருந்தவங்க திடீர் ஐக்கியம் ஆகியுள்ளது தேர்தலில் எப்படியாவது சீட்டு பெறுவதற்கு தானாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தில் இலை கட்சியில் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் திடீர் ஐக்கியம் ஆகியுள்ளார்களாம்.. வழக்கமாக, சமூக வலைதளத்தில் வசைபாடும் மன்னர் பெயரை கொண்டவர், தற்போது மிகுந்த அமைதியாகி கட்சியில் போட்டியிட சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்துள்ளதுடன் தான் வழக்கமாக வசைபாடுபவரை மிகுந்த மரியாதையுடன் அண்ணன் என்று கூறி பதிவிட்டுள்ளாராம்.. இது இலைக்கட்சியினரையே ஆச்சரியமடைய வைத்துள்ளதாம்.. தேர்தல் வரும் நேரத்தில் மோதலை குறைத்து எப்படியாவது சீட் பெற வேண்டும் என்பதுதான் இதற்கு காரணமாம்.. எனவே வசைபாடுதல் சிறிது நாட்கள் இருக்காது என்று இலைக்கட்சியினர் தங்களுக்குள்ளே பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஸ்டார் காக்கிய மண்டலத்தை விட்டே டிரான்ஸ்பர் போட்டிருப்பதை கண்டு டிபார்ட்மெண்டே அதிர்ச்சியில ஆடிபோயிருக்குதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நார்த் மண்டல காக்கி அதிகாரியால டிபார்ட்மெண்ட் அலட்டாத்தான் இருக்குது.. ஆனாலும், சில ஸ்டார் காக்கிகள் மாவட்டங்கள்ல வேலை காட்டிடுறாங்களாம்.. உரிய ஆதாரம் இருந்துச்சுன்னா, அவங்க மேல ஆக்ஷன் எடுக்கவும் மண்டல அதிகாரி தவறுவதில்லையாம்.. இதனால, அந்தந்த டிஸ்ட்ரிக் அதிகாரிங்களும் அலர்ட்டாக இருக்கறாங்க.. இதுல வெயிலூர் மாவட்டத்துல இருக்குற டிஸ்டரிக் க்ரைம் பிராஞ்ச் பிரிவுல ஸ்டார் காக்கி வாங்கிட்டதாக புகார்கள் போயிருக்குது.. தொடர்ந்து புகார்கள் போகவே, டிஸ்ட்ரிக் அதிகாரியும் விசாரிச்சு தகவல் சொல்லியிருக்குறாரு.. புகார்ல சிக்குன ஸ்டார் காக்கிய வழக்கமாக அந்த லிமிட்ல இருந்து இன்னொரு லிமிட்டுக்கு டிரான்ஸ்பர் போடுவாங்க.. ஆனா, அதிரடி நடவடிக்கையா ஸ்டார் காக்கிய மண்டலத்தை விட்டே, சென்ட்ரல் மண்டலத்திற்கு டிரான்ஸ்பர் போட்டிருக்காங்க.. இதனால், வெயிலூர் டிஸ்ட்ரிக் காக்கிகள் டிபார்ட்மெண்ட்டே அதிர்ச்சியில இருக்குதாம்.. அலர்ட்டாகவும் இருக்குறாங்களாம்.. இந்த மண்டல டிரான்ஸ்பர் மேட்டர் தான் இப்போ காக்கிகளிடையே பரபரப்பு பேச்சாக போய்கிட்டிருக்குது..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.


