மோடியின் ரோட் ஷோவில் 25 மரக்கன்றுகள் திருட்டு: குஜராத்தில் பரபரப்பு
வதோதரா: குஜராத்தில் மோடியின் ரோட் ஷோவுக்காக வைக்கப்பட்ட 25 மரக்கன்றுகள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி குஜராத் மாநிலம் வதோதரா சென்றிருந்தார். அவரை வரவேற்கும் விதமாக ஆங்காங்கே வீதிகளில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் மரக்கன்றுகள், அழகிய செடி வகைகள் வைக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 100 செடிகளில் 25 திருடப்பட்டுள்ளன.
ஒன்றரை அடி முதல் இரண்டு அடி வரை வளர்ந்திருந்த அந்த செடிகளை, தொட்டியுடன் சேர்த்து பைக்கில் வந்த இரு நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இவை அங்குள்ள சிசிடிவி கேமராவின் மூலம் தெரியவந்துள்ளது. அதையடுத்து மரக்கன்றுகளை திருடிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து, அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். மோடியின் ரோட்ஷோவில் வைக்கப்பட்டிருந்த மரக்கன்றுகள் திருடப்பட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.