மதுராந்தகம் அருகே கோயில் பூட்டை உடைத்து பல கோடி மதிப்பு மரகத முருகன் சிலை கொள்ளை: அலாரம், சிசிடிவி கேமரா, செல்போனில் எச்சரிக்கை
3 இரும்பு கேட்களை தாண்டி மர்ம நபர்கள் கைவரிசை
சென்னை: மதுராந்தகம் அருகே கோயில் பூட்டை உடைத்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத முருகன் சிலை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பெருங்கரணை கிராமம், நடுபழனி பகுதியில் மலைக்குன்றின் மீது ஸ்ரீ மரகத பாலதண்டாயுதபாணி முருகன் கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் சிலை சுமார் இரண்டே கால் அடி உயரத்தில் முழுமையான மரகத கற்களால் ஆனது. இது பல கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. இதனால் மரகத சிலையை பாதுகாக்க மலையடிவாரம் முதல் கோயிலின் மூலஸ்தானம் வரையில் 16க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
மரகத கற்களாலான மூலவர் சிலை உள்ள கருவறையை சுற்றிலும் 3 இரும்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு இரும்பு கதவை யாரேனும் உடைக்க முயற்சித்தாலோ தொட்டாலோ, அபாய மணி ஒலித்துவிடும். அத்துடன் 12 முக்கிய நிர்வாகிகளின் செல்போன்களுக்கும் தகவல் செல்லும் வகையில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கோயில் நிர்வாகத்தை பெருங்கருணை கிராம மக்களுடன் சேர்ந்து முத்துசாமி என்பவர் கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள ஸ்ரீகணபதி சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமி அறக்கட்டலையால், நடுபழனி மலைக்குன்றின் மீது அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி முருகன் கோயிலில் இருந்த கற்சிலை அகற்றப்பட்டு, மூலவர் சன்னதியில் கடந்த 2014ம் ஆண்டு சுமார் இரண்டேகால் அடி உயரத்தில் பல கோடி மதிப்பில் மரகத கற்களால் ஆன முருகன் சிலை அமைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. நாடு முழுவதும் மரகத கற்களால் ஆன சிறிய சிவன் சிலைகளை வைத்து வழிபடும் நிலையில், நடுபழனி பகுதியில் சுமார் இரண்டே கால் அடி உயரத்தில் மரகத கற்களால் ஆன முருகன் சிலையை அமைத்து, அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அர்ச்சகர்கள் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு சென்றனர். மீண்டும் நேற்று காலை பூஜைகள் மேற்கொள்வதற்காக நடை கதவை அர்ச்சகர்கள் திறந்தபோது மூலவர் சன்னதியின் கருவறை முன்பிருந்த 3 இரும்பு கதவுகளும் திறந்து கிடந்தன. அதற்குள் இருந்த பல கோடி மதிப்பிலான மரகத மூவலர் முருகன் சிலை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் பரவியதும் கோயில் முன் பக்தர்களும், கிராம மக்களும் திரண்டதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த நிர்வாகிகள், சித்தாமூர் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். மலையடிவாரத்தில் இருந்து கோயிலின் கருவறை முன்பு வரை உள்ள அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் 2 மர்ம நபர்கள் முகத்தை மறைத்தபடி மலைமீது ஏறிச்சென்று, கோயிலின் முன்புற கதவு பூட்டை உடைத்து, பின்னர் கோயிலுக்குள் சென்று கருவறைக்கு முன்பிருந்த 3 இரும்பு கதவுகளின் அலார எச்சரிக்கை மணியை துண்டித்துவிட்டு, கதவுகளை உடைத்து கருவறைக்குள் புகுந்து மரகத முருகன் சிலையை கொள்ளையடித்து செல்வது தெளிவாக பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து, சிலை கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். தொடந்து, சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்பி ஐமன் ஜமால் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் நேரில் வந்து கோயில் நிர்வாகிகள் உள்பட அனைத்து தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல கோடி ரூபாய் மதிப்பு மரகத முருகன் சிலையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்த சம்பவம் சுற்று வட்டார பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பக்தர்கள் மறியல்
பல கோடி மதிப்பிலான மரகத கற்களால் ஆன முருகன் சிலை திருடுபோனது பற்றி அறிந்ததும் பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள், பக்தர்கள் திரண்டு வந்து சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது.



