காவிரி நீர் விவகாரம் தமிழகத்தில் தற்போது அடிக்கும் வெயிலை விட அனல் பறந்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள் வறட்சியின் கோர பிடியில் சிக்கித் தவிக்கின்றன. டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் தண்ணீர் திறக்காததால், இம்மாவட்டங்களில் சுமார் 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரி கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இது ஒருபுறமிருக்க, தமிழகத்தின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரியில் இருந்து ஜூலை 29ம் தேதி முதல் தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிட்டது. தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. 50 சதவீதம் மட்டுமே உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என மிகவும் திட்டவட்டமாக அறிவித்து விட்டார் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார். இதுதொடர்பாக நாளை கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், தவெக அரசு பெரும் மவுனம் சாதித்து வருகிறது. உரிய இடத்தில் பேசுவோம் என முதல்வர் விஜய் ஒதுங்கிக் கொண்டார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு, காவிரி மேலாண்மை உத்தரவு தமிழகத்திற்கு சாதமாக இருக்கும் சூழலில், நாளை மறுதினம் (ஆக. 3) கர்நாடகா சென்று அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமாரை, தமிழக முதல்வர் விஜய் சந்தித்து பேச உள்ளதாகவும், இதற்காக அமைச்சர்கள், தலைமை செயலாளர்கள் உள்ளிட்ட குழுவினருடன், முதல்வர் விஜய் அங்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இங்கு பதற்றமான சூழல் உள்ளதால், தற்போது இங்கு வர வேண்டாம். வேறொரு தேதியில் சந்திப்போமென கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருப்பது அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த நேரடி சந்திப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் மட்டுமின்றி, தவெக கூட்டணியில் இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும் ஓடோடி சென்று காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. அமைச்சரவையிலும் இடம் பிடித்தது. ஆட்சியில் பங்கு கேட்பதில் காட்டிய ஆர்வத்தை காங்கிரஸ், காவிரி நீர் விவகாரத்தில் காட்டவில்லை என பாமக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இத்தனைக்கும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில அளவிலான காங்கிரஸ் கட்சியின் முடிவுகள் வெவ்வேறுவிதமாகத்தான் இருக்கும் என ‘வழக்கம்போல’ காவிரி நீர் விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டுள்ளது.
நேரில் வர வேண்டாமென முகத்தில் அடித்தாற்போல கர்நாடக முதல்வர் கூறி விட்டார். இப்போது, தமிழக முதல்வர் விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார்? தமிழகத்தில் உடனடியாக அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை கூட்டி, உரிய ஆலோசனைகளை பெற்று நடவடிக்கை எடுப்பாரா? காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசு, தமிழக உரிமையை விட்டுத்தரக்கூடாது. உரிய சட்டப் போராட்டம் நடத்தியாவது தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டும். நம் விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டுமென்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.


