Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அரசியலமைப்பே உயர்ந்தது

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் ஆண்டு கணக்கில் கிடப்பில் போடப்பட்டதற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகவும், தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்து பரபரப்பு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதில், ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவையின் மூலம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து நிலுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றத்தின் உச்சபட்ச அதிகாரமான சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அந்த மசோதாக்களுக்கும் அனுமதி வழங்குவதாகவும் தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பை பாஜ அல்லாத ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் எதிர்கட்சியினர் வரவேற்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி மாநிலங்களவை நிகழ்ச்சியில் பேசிய துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர், உச்ச நீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்படுகிறது. நாம் எங்கு செல்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது?. ஜனநாயகத்திற்காக நாங்கள் ஒருபோதும் பேரம் பேசவில்லை. குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? குடியரசுத் தலைவரை நீதிமன்றம் வழி நடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது. குறிப்பாக அரசியல் சாசன பிரிவு 142-ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல் உச்ச நீதிமன்றம் பயன்படுத்துகிறது. மேலும் அரசியலமைப்பின் 145-வது பிரிவை விளக்குவதுதான் நீதிபதிகளுக்கு இருக்கும் ஒரே உரிமை. அரசியலமைப்பின் அதிகாரத்தை மறந்து குடியரசுத் தலைவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்’ என்று கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தியா-பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தவுடன், ஒன்றிய அரசின் அழுத்தத்தால் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மசோதா ஒப்புதல் விவகாரத்தில் ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்ய முடியுமா? என்பது உட்பட மொத்தம் 14 கேள்விகளுக்கு விளக்கம் கேட்டுள்ளார். இதையடுத்து மாநில சுயாட்சியை காக்க அனைத்து மாநிலங்களும் உறுதிபூண வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்ட கட்டமைப்பு பாதுகாத்திட முன்வர வேண்டும் என பாஜ ஆளாத 8 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் கொலீஜியம் அமைப்பு விரைவில் கூட உள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா, கோவா பார் கவுன்சில் சார்பில் மும்பையில் நடந்த மாநில வழக்கறிஞர்கள் மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சமீபத்தில் பதவியேற்ற பி.ஆர்.கவாய் பேசுகையில், ‘‘நாடு வலுப்பெற்றது மட்டுமல்லாமல், சமூக, பொருளாதாரத்தில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது நாட்டில் நீதித்துறையோ, அரசு நிர்வாகமோ, நாடாளுமன்றமோ உயர்ந்தது அல்ல, அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது. அதன் மற்ற 3 தூண்களும் அரசியலமைப்பின்படி இணைந்து செயல்பட வேண்டும். அரசியலமைப்பை திருத்துவதற்கு நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அது அடிப்படை கோட்பாட்டில் கை வைக்க முடியாது’’ என்றார். நீதித்துறைக்கும், நிர்வாகத்துக்கும் கருத்து வேறுபாடு உள்ள நிலையில் அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.