Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சாதனை தொடரட்டும்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு 14 வயது 32 நாட்கள் தான் ஆகியிருக்கிறது. ஆனால் ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிவேக சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை தனக்கு ெசாந்தமாக்கி விட்டார். சூர்யவன்ஷி 35 பந்துகளில் 11 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் இந்த சாதனையை பதிவு செய்தார். இறுதியாக 37 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஐபிஎல்லில் அதிவேக சதம் என்ற சாதனை முன்னாள் மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்லுக்கு சொந்தமானது, அவர் 2013 ஏப்ரல் மாதம் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக 30 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.

அந்த சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை. இதுவே ஐபிஎல்லில் அடிக்கப்பட்ட அதிவேக சாதனை. இந்திய வீரர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய யூசுப்பதான் 35 பந்துகளில் சதம் அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் இதுதான் 2வது அதிவேக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு யூசுப்பதான் நிகழ்த்திய போது வைபவ் சூர்யவன்ஷி மண்ணில் பிறக்கவில்லை. இன்று யூசுப் பதானின் பாராட்டும் பெற்று விட்டார் வைபவ்.

ஒரு இந்தியரால் அதிவேக ஐபிஎல் சதம் என்ற எனது சாதனையை முறியடித்த இளம் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்துக்கள் பல! நான் செய்ததைப் போலவே ராஜஸ்தான் அணிக்காக அவர் விளையாடும்போது இது நடப்பது இன்னும் சிறப்பு. இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும், வீரரே! என்று வாழ்த்தியிருக்கிறார் பதான். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் இன்னும் ஒருபடி மேலே சென்று,’14 வயதில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இந்த குழந்தை உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களை கண் இமைக்காமல் விளாசுகிறது. வைபவ் சூர்யவன்ஷி - பெயரை நினைவில் வையுங்கள்! பயமற்ற மனப்பான்மையுடன் விளையாடுங்கள்.

அடுத்த தலைமுறை பிரகாசிப்பதைப் பார்ப்பதில் பெருமை’ என்கிறார் யுவராஜ். அந்த காலத்திலேயே தனது அதிரடி தொடக்கத்தால் மிரட்டிய தமிழ்நாட்டின் ஸ்ரீகாந்த் ,’ 14 வயதில், பெரும்பாலான குழந்தைகள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் கனவு கண்டு சாப்பிடுவார்கள். ஆனால் வைபவ் ஐபிஎல் போட்டியாளராகி அற்புதமான 100 ரன்களை வழங்குகிறார்! இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் இங்கே இருக்கிறார்’ என்றார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் இயன் பிஷப், சூர்யவன்ஷியின் ஆட்டத்தால் மிரண்டு விட்டார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச், சூர்யவன்ஷியின் திறமையைக் கண்டு வியந்து,’இப்படி எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? வைபவ்சூர்யவன்ஷி என்ன ஒரு திறமை’ என்றுகுறிப்பிட்டுள்ளார். இத்தனை பாராட்டுகளையும் பெற்ற வைபவ், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். பீகார் கிரிக்கெட் சங்கத் தலைவர் ராகேஷ் திவாரி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் 14 வயது வைபவ் சூர்யவன்ஷியை ஒப்படைத்தார். தற்போது அந்த வைரத்தை ராகுல் டிராவிட் பட்டை தீட்டியிருக்கிறார். இன்னும் அவர் கடந்து செல்ல வேண்டிய பாதை நிறைய உள்ளது.

இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக அவர் மாற வேண்டும் என்றால் சச்சின் போல், கோலி போல் கடும் உழைப்பை அவர் கிரிக்கெட்டில் செலுத்த வேண்டும். இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், கரீம் ஜனத் உள்ளிட்ட சர்வதேச பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சூர்யவன்ஷி 11 சிக்சர்களை பறக்க விட்டு இருக்கிறார். ஆட்டம் முடிந்த பிறகு,’நான் பந்து வீச்சாளரை பார்க்கவில்லை, நான் பந்தை மட்டுமே பார்த்து விளையாடுகிறேன்’ என்றார். அப்படியே ஆடுங்கள். அதுதான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கும் நல்லது.