Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பரவிவரும் ரீல்ஸ் மோகம்...பலியாகும் இளம் தலைமுறை!!!

இன்று பத்திரிகைகளை திறந்தாலே ரீல்ஸ்மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்தவர்கள் என தினந்தோறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இவர்கள் பெரும்பாலும் இளம் தலைமுறையினர் என்பது தான் மிகவும் கவலைக்குரிய விஷயங்களாக இருக்கிறது. ஆபத்தான ரயில்பாதைகள், ஆழம் தெரியாத நீர்நிலைகள், உயரமான பள்ளத்தாக்குகள் என “இந்த இளம் கன்றுகள் பயமறியாது” வெறும் லைக்குகளுக்காக இந்த பகுதிகளில் உலா வந்து ரீல்ஸ் எடுத்து போடுகிறார்கள். இதனை பெயர் தெரியாத பல்லாயிரக் கணக்கான மக்கள் விருப்பக் குறிகள் இட்டும், பகிர்ந்து கொண்டும், பலருக்கும் பரப்பிவிடுகிறார்கள். முதலில் சாதாரணமாக ஆரம்பிக்கும் இந்த ரீல்ஸ் மோகம் பிறகு “அட்வென்ச்சர்ஸ்” மனநிலைக்கு சென்று விடுகிறது.

இந்த போட்டிகள் நிறைந்த பரபரப்பான உலகில் “அடுத்தது என்ன” என்கிற கேள்விகளால் உந்தப்பட்டு இந்த மாதிரியான சாகசங்களில் ஈடுபடுகின்றனர். தன்னுயிரைத் துச்சமாக நினைத்து இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுவது ஒரு புறம் என்றால், பைக் வீலிங் சாகசங்களில் ஈடுபடுவது அதை வீடியோ எடுத்து பதிவிடுவது பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதத்தில் பொது இடங்களில் ரீல்ஸ் எடுப்பது, யாரென்றே தெரியாத நபர்களிடம் “ப்ராங்க்” என்ற பெயரில் விளையாடுவது, அனுமதியில்லாமல் குழந்தைகளையோ , பொது மக்களையோ அவர்கள் அறியாமலேயே ரீல்ஸ் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு லைக்ஸ் மற்றும் ஷேர் வாங்குவது தற்போது அதிகமாகிவருகிறது. இதில் இளம்பெண்கள் பலர் எது பெண்ணுரிமை, எது ஆடை சுதந்திரம் என்கிற புரிதல் இல்லாமல், ஆபாசமாக உடையணிந்து வீடியோக்கள் பதிவிடுவது என எங்கும் ரீல்ஸ் மோகம்தான்.

இன்று யாரைப்பார்த்தாலும் கையில் மொபைல் கேமிராவை ஆன்செய்து வைத்துக்கொண்டு “கன்டன்ட்க்காக” அலைந்துகொண்டிருக்கிறார்கள். யார் எதில் சிக்குவோம் என்கிற பீதி பலருக்கும் ஏற்பட்டுவருகிறது. எந்த வீடியோ எதனால் எப்படி வைரலாகும் என்பதை யாராலும் கணிக்க இயலாது. அப்படி வைரலாக்கப்படும் வீடியோக்கள் பலவும் தன்னிச்சையாக போகிற போக்கில் எடுக்கப்பட்டவையாகவும் இருக்கலாம் அல்லது சில போலியாக உருவாக்கப் பட்டவையாகவும் இருக்கலாம். வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஏதும் அறியாமலே பலரும் சர்வசாதாரணமாக பகிர்ந்து அதனை மேலும் பரபரப்புக் குள்ளாக்கி விடுகிறார்கள்.

இதன் மற்றொரு பிரச்சினை என்னவென்றால் வெறும் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர்களை செலிபிரிட்டிகளாக சமூகம் பாவிப்பதும், மதிக்கப்படுவதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அவர்கள், சினிமாவில் நடிப்பதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், கல்லூரி மற்றும் பள்ளி விழாக்களில் சிறப்பு விருந்தினர்களாக ஆக்கப்படுவதும் இன்றைய இளசுகளின் ரீல்ஸ் மோகத்திற்கு அடிப்படைக்காரணம் என்பதனை பலரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை. இவர்களை ரோல் மாடலாக கொள்ளும் இளசுகள் இவர்களை பின்பற்றி தானும் ஒரு “செலிபிரிட்டிகள்” ஆக விரும்புகிறார்கள். படிக்காமலே உழைக்காமலே பிரபலமாகிவிடலாம் என்கிற மனநிலை இன்றைய தலைமுறையினருக்கு வந்து விட்டது என்பதுதான் யதார்த்த கள நிலவரம். அதற்கு தூபமிட்டு விசிறி விடுகிறது வரைமுறைகளற்ற இந்த இன்ப்ளூயன்சியர்களின் பேரும் புகழும் மற்றும் பணமும்.

இவர்களால் உந்தப்பட்ட பலரும் மக்கள் புழங்க தகுதியற்ற ஆபத்தான நீர் நிலைகளில் ரீல்ஸ் எடுத்துப்போடுவதால் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது, அது மட்டுமின்றி அதனை பார்த்து ஏராளமான மக்கள் குழந்தை குட்டிகளுடன் அந்த இடங்களை பார்வையிட வந்து ஆபத்தில் சிக்கிக்கொள்வதும் நடக்கிறது. அப்படி திடீரென பிரபலமாக்கப்படும் “கூமாபட்டி” களும் உண்டு. இப்படியாக அட்வென்ச்சருக்கு ஆசைப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களும், இரயில் தண்டவாளங்களில் உயிரை விடுபவர்களும் அதிகமாகிக்கொண்டே போகிறார்கள். டிராபிக் குவிந்து கிடக்கும் நட்ட நடுரோட்டில் கூட நடனம் ஆடி ரீல்ஸ் எடுத்து பதிவிடுகிறார்கள். இவர்களின் ரீல்ஸ் மோகத்தில் மருத்துவமனை பகுதிகளும், வழிப்பாட்டுத்தலங்களும் கூட தப்புவதில்லை. இப்படியான சூழலில் இளைய தலைமுறையினர் தான் இப்படி என்றால் பல்முளைத்த குழந்தை முதல் பல்போன முதியோர்கள் வரை இந்த ரீல்ஸ் மோகம் ஆட்டிப் படைத்து வருகிறது என்பதே நிஜம்.

ஒரு அலுவலகத்தில் மாதம் பூராவும் உழைத்தால் கிடைக்கும் பணத்தை விட அதிகமாக ரீல்ஸ் மூலமாக சம்பாதிப்பதாக சொல்கிறார்கள். மேலும் விளம்பர வருவாய் கூடுதல் லாபமாக இருப்பதும் ரீல்ஸ் போட வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாக முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால் பலருக்கும் பொழுதுபோக்கே வாழ்க்கையாக மாறிவருகிறது. தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பவர்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நிறைய பாதிப்புகள் உண்டாகி வருவதும் உண்மை. இரவு நேரத்தில் தூங்காமல் நீண்டநேரம் ரீல்ஸ் பார்ப்பதால் மூளைக்கும், நரம்புகளுக்கும், கண்களுக்கும் பெரும் பிரச்னைகள் வருவதாக சொல்கிறார்கள்.

இதனை தவிர இன்று வீட்டைவிட்டு வெளியேறினால் கேமிரா வளையத்திற்குள் சிக்காமல் வருவாமோ என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. தனி மனித சுதந்திரம் பறிபோகிறது என்பதை குறித்து சமூகநல ஆர்வலர்கள் பலர் குரல் கொடுத்துக்கொண்டேதான் வருகிறார்கள். ஆனால் இது குறித்த சட்டதிட்டங்கள் மற்றும் விழிப்புணர்வினை அதிகமாக கொண்டு வரவேண்டும் என்பதே பலரின் விருப்பம். மேலும் பொதுவெளியில் வீடியோ எடுப்பது, பதிவிடுவது, ரீல்ஸ் எடுப்பது போன்றவை குறித்து நிறைய சட்டதிட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் வரவேண்டும். மேலும் தனிநபர்களின் சுதந்திரங்களை காப்பது குறித்து நிச்சயமாக உறுதி செய்யப்பட வேண்டும். ஏதேனும் பிரச்னைகளெனில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புகார் தெரிவிக்கலாமே தவிர சட்டத்தை கையில் எடுக்கும் நிலை, பொதுவெளியில் பதிவிடுதல் தவிர்க்கப்பட வேண்டும். அப்படி பதிவிடுபவர்கள் மீது யாரேனும் புகார் அளித்தால் உடனே தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதே போல் யூடியூப் உட்பட சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட வேண்டும். பரப்பரப்புகளுக்காக உண்மைத்தன்மை ஏதுமின்றி தயாரிக்கப்படும் வீடியோக்கள் நீக்கப்பட வேண்டும்.

சமூகவலைதள வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் குறித்த சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்படுவதோடு, தனிமனிதர்களும் இது குறித்த சுயக்கட்டுபாடு மற்றும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்கள். இன்றைய சூழலில் குழந்தைகள் கூட சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவிடுவதும், வீடியோ எடுத்து போட்டு சம்பாதிப்பதும், பெற்றவர்களே அதனை ஊக்குவிப்பது அல்லது குழந்தைகளை வைத்து சம்பாதிப்பது போன்றவை அன்றாடம் நிகழும் நிகழ்வாகப்போய்விட்டது. இதற்கெல்லாம் கடுமையான கட்டுப்பாடுகள் தேவை இல்லையெனில் பல்வேறு பிரச்சனைகளை இச்சமூகம் சந்திக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படும் அபாயங்கள் உண்டு. இன்றைய சமூக வலைதளங்கள் குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் மாறிக்கொண்டு இருப்பது வருத்தம் கொள்ள வேண்டியதோடு மட்டுமின்றி மாற்றம் கொள்ள வேண்டியதும் அவசியமான ஒன்று.

- தனுஜா ஜெயராமன்.