ஒரு மாநிலத்தில் சிறப்பான திட்டங்கள் என்பது மக்களின் வாழ்வை மேம்படுத்தும். சீரான தொழில் முதலீடுகள் என்பது பொருளாதார வளத்தை உயர்த்தும். இந்த அடிப்படையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க கூடிய சூழலை உருவாக்க, ஒவ்வொரு மாநிலமும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் முதலீடுகளுக்கு உகந்த மாநிலங்களை வரிசைப்படுத்தி நிதி ஆயோக் தலைவர் அசோக்குமார் லகிரி, பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பட்டியலில் குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. பெரிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் 56.6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிரா 53.7 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பிடித்துள்ளது. 53.3 புள்ளிகளுடன் தமிழ்நாடு மூன்றாமிடத்தில் உள்ளது. ஒடிசா 4வது இடத்திலும், மத்தியபிரதேசம் 5வது இடத்திலும், ஆந்திரா 6வது இடத்திலும் உள்ளன.
மலைப்பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான பட்டியலில் உத்தரகாண்ட் முதலிடத்தில் உள்ளது. அசாம், இமாசல பிரதேசம் போன்றவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. யூனியன் பிரதேசங்களுக்கான பட்டியலில் கோவா, டெல்லி, சண்டிகார் மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. அதேநேரத்தில் பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் மோசமான செயல்பாடுகளை கொண்டதாக பட்டியலிடப்படுகிறது.
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த பட்டியல் ஒரு மாநிலத்தின் உட்கட்டமைப்பு, வர்த்தக சூழல், வளங்கள், அரசுகளின் கொள்கை, எளிமையான ஒழுங்குமுறை, நிதிவளம் உள்ளிட்ட 8 அம்சங்களை அடிப்படையாக கொண்டது. இந்தவகையில் 56 புள்ளிகள் பெற்ற குஜராத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது. 53 புள்ளிகளை பெற்ற மகாராஷ்டிராவும், தமிழ்நாடும் ஏறக்குறைய இரண்டாமிடத்தில் தான் உள்ளது. மொத்தத்தில் தொழில் முதலீட்டுக்கு உகந்த இந்தியாவின் இரண்டாம் மாநிலம் என்ற புள்ளியை தொட்டு பெருமை சேர்த்துள்ளது தமிழ்நாடு. இது ஒருபுறமிருக்க இந்த சூழல் என்பது கடந்த ஒன்றிரண்டு மாதங்களில் உருவாக்கப்பட்டதா? என்றால் நிச்சயமாக இல்லை. 2021ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், ‘ஒரு டிரில்லியன் டாலர்’ என்ற இலக்குடன் ஊன்றிய விதையே இதற்கு அடித்தளம் அமைத்தது என்பதும் இங்ேக மறைக்கவும், மறுக்கவும் முடியாத ஒன்று.
இந்தியாவின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு உகந்த முதல் இரண்டு மாநிலங்களில் குஜராத்தும், மகாராஷ்டிராவும் இடம் பெற்றுள்ளது. ஒன்றியத்தை ஆளும் பாஜ வசமுள்ள இந்த மாநிலங்களுக்கு, நிதி ஒதுக்கீடு என்பது தாராளமாக கிடைத்தது. ஆனால் சமூகநீதிக் கொள்கையோடு நடந்த திராவிடமாடல் ஆட்சியில் நிதிபாரபட்சம் உள்ளிட்ட பல்வேறு அஸ்திரங்களை ஏவியது ஒன்றிய அரசு. ஆனாலும் சிரமங்களை கடந்து சிகரம் தொட வழிவகுத்துள்ளார் அன்றைய முதல்வர் என்பதும் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம். தற்போதும் தொழில் முதலீடுகளை பெருக்கி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மாநிலங்களுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது.
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு அனைத்து மாநிலங்களும் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றன. தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே கடும்போட்டி நிலவி வருகிறது. இதில் சமீபகாலமாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாட்டை, ஆந்திரா பின்னுக்கு தள்ளி வருகிறது என்ற சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. இதை உணர்ந்து இன்றைய அரசு விழிப்புடனும், துடிப்புடனும் செயல்பட்டு, பெருமையை வரும் ஆண்டுகளிலும் தக்க வைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.


