“என் குழந்தைக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது?”, “சின்ன விஷயத்துக்குக்கூட கத்துகிறான்...”, “சொல்வதைக் கேட்பதே இல்லை...”, “எதற்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசுகிறாள்...” இன்றைய பெற்றோர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகளாக இவை மாறிவிட்டன. இதனை பார்க்கவும் முடிகிறது. யார் இந்த ஆல்பா குழந்தைகள்? இதன் பின்னணி என்ன? இவர்கள் மிகச் சுலபமாக கோபம், எரிச்சல், அயற்சி அடைவது ஏன்? ஆலோசனைகளும், காரணங்களையும் கொடுக்கிறார் டாக்டர் எஸ். வந்தனா (கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட்).
யார் ஆல்பா கிட்ஸ்?
பொதுவாக 2010 முதல் 2024/2025 காலகட்டத்தில் பிறந்தவர்கள் ஜெனரேஷன் ஆல்பா கிட்ஸ். இவர்கள் பிறந்த காலமே ஸ்மார்ட்போன், டேப்லெட், யூடியூப், ஸ்ட்ரீமிங், சமூக வலைதளங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்ட காலம். அதனால் இவர்களை முழுமையான டிஜிட்டல் சூழலில் பிறந்து வளரும் முதல் தலைமுறை என்றும் குறிப்பிடுகிறார்கள். மேலும் இவர்களுக்கு Buffer, Waiting இதற்கெல்லாம் அர்த்தம் தெரியாது. ஏனெனில் கைவிரலில் ஸ்வைப் செய்தால் அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் கிடைக்கும்.
ஆல்பா குழந்தைகளிடம் பொதுவாகப் பேசப்படும் சில அம்சங்கள்:
*மிக இளம் வயதிலேயே தொடுதிரை மற்றும் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தத் தொடங்குவது.
*எழுத்து வடிவிலான தகவல்களைவிட வீடியோ, குறும்படம், அனிமேஷன் போன்ற காட்சி வடிவங்களுடன் அதிகம் பழகியிருப்பது.
*தகவல்களை மிக வேகமாகத் தேடிப் பெறக்கூடிய சூழலில் வளர்வது.
*ஆன்லைன் வகுப்புகள், கல்விச் செயலிகள், கேம்கள், ஏஐ கருவிகள் போன்றவற்றுடன் கல்வியும் பொழுதுபோக்கும் கலந்த வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பது.
*அதே நேரத்தில் அதிகப்படியான திரைநேரம், தூக்கக்குறைவு, இணையப் பாதுகாப்பு, சமூக ஊடக அழுத்தம் போன்றவை இந்தத் தலைமுறையைப் பற்றிய முக்கியமான பெற்றோரின் கவலைகளாக உள்ளன.
ஒரு குழந்தை கோபப்படுவது புதிதல்ல. பிடித்த பொருள் கிடைக்காதபோது அழுவது, விளையாடுவதை நிறுத்தச் சொன்னால் எதிர்ப்பது, தோல்வியடைந்தால் எரிச்சலடைவது போன்றவை குழந்தைப் பருவத்தின் இயல்பான உணர்ச்சி வெளிப்பாடுகளாக இருக்கும். ஆனால் வயது அதிகரித்த பிறகும் கோபம், சிடுசிடுப்பு, கத்துதல், பொருட்களை உடைத்தல், அடித்தல், மிரட்டுதல் போன்ற நடத்தைகள் தொடர்ந்து நீடித்தால், அதை வெறுமனே “குழந்தையின் குணம்” என்று கடந்து செல்லக்கூடாது.
கோபம் என்பது பல நேரங்களில் பல உணர்வுகளின் அடிப்படையாகக் கூட வெளிப்படும். ஏமாற்றம், பயம், மன அழுத்தம், நிராகரிப்பு, கவனிக்கப்படாத உணர்வு, தோல்வி, பாதுகாப்பின்மை அல்லது தன்னால் சமாளிக்க முடியாத சூழ்நிலை ஆகியவை கோபமாக வெளிப்படலாம். குழந்தை தனது உணர்வை வார்த்தைகளால் சொல்லத் தெரியாதபோது, அந்த உணர்வு நடத்தையாக வெளிவருகிறது.
யேல் மெடிசின் (Yale Medicine) குறிப்பிடுவதுபோல், சிறு வயதில் கோப வெடிப்புகள் இயல்பாக இருக்கலாம். ஆனால் குழந்தை வளர வளர அவை குறையாமல், வயதுக்கு பொருந்தாத அளவில் தொடர்ந்து நீடித்தால், உளவியல் சார்ந்த உதவி தேவைப்படலாம். கோபம் மற்றும் ஆக்ரோஷம் அதிகமாக இருக்கும் குழந்தைகளிடம் மனநலத்தின் பிற அம்சங்களையும் கவனிக்க வேண்டியிருக்கும்.
குழந்தை கத்துகிறது என்றால் “குழந்தை மோசமாக வளர்கிறது” என்பது மட்டுமே காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. முதலில், “இந்தக் குழந்தை ஏன் இப்படி நடந்துகொள்கிறது?” என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வீட்டில் பார்க்கும் நடத்தையே குழந்தை கற்றுக்கொள்கிறது என்கிறார் எஸ். வந்தனா.
குழந்தைகள் அறிவுரைகளைக் காட்டிலும், பெரியவர்கள் செய்யும் செயல்களிலிருந்துதான் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்.பெற்றோர் ஒருவருக்கொருவர் கோபமாகப் பேசுவது, பிரச்னைகளை கத்தி தீர்ப்பது, சிறிய தவறுகளுக்கும் கடுமையாக எதிர்வினையாற்றுவது போன்றவற்றை குழந்தை தொடர்ந்து பார்த்தால், கோபத்தை வெளிப்படுத்துவது ஒரு சாதாரண தகவல் தொடர்பு முறையாகவே அதன் மனதில் பதிந்துவிடலாம்.
அதேபோல், “நான் கோபமாக இருக்கிறேன்; சிறிது நேரம் கழித்து பேசலாம்” என்று பெற்றோர் தங்களுடைய கோபத்தை ஆரோக்கியமாகக் கையாள்வதை குழந்தை பார்த்தால், அதுவும் ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடமாக மாறும்.
அதனால், குழந்தையின் கோபத்தை மாற்றுவதற்கு முன்பு வீட்டில் பெரியவர்கள் தங்களுடைய கோபத்தை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இதற்கு அவர்களின் திரை நேரமும் ஒரு காரணம்.
மொபைல், வீடியோ கேம்கள், சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி போன்றவற்றில் குழந்தைகள் பார்க்கும் விஷயங்களும் அவர்களின் நடத்தை மீது தாக்கம் ஏற்படுத்தலாம். குறிப்பாக வன்முறை, அதிக ஆக்ரோஷம், கொண்ட வீடியோக்கள் அல்லது இடைவிடாத வேகமான பொழுதுபோக்கு, குழந்தையின் உணர்ச்சிக் கட்டுப்பாட்டில் சிக்கலை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கலாம்.
மொபைல், கணினி, இவற்றை திடீரெனப் பறிப்பது கூட சில குழந்தைகளிடம் கோபத்தை அதிகரிக்கலாம். காரணம் அவர்களின் பிறப்பு, வளர்ப்பு அதைச் சார்ந்துதான் நடந்திருக்கிறது என்கையில் நிச்சயம் கோபம் வரும், “இப்போதே போனை கொடு” என்று திடீரென நிறுத்துவதற்குப் பதிலாக, “இன்னும் பத்து நிமிடங்களில் முடிக்க வேண்டும்” என்று முன்கூட்டியே சொல்லி மாற்றத்துக்கு குழந்தையைத் தயார்படுத்துவது நல்லது.
ஒரு முக்கியமான விஷயம் - குழந்தை அழும்போது அல்லது கோபப்படும்போது அமைதியாக இருக்கச் செய்வதற்காக ஒவ்வொரு முறையும் மொபைலைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், “நான் கத்தினால் எனக்கு போன் கிடைக்கும்” என்ற மனநிலை குழந்தையின் மனதில் உருவாகலாம்.
தூக்கம், உணவு, உடல் இயக்கம் - இவற்றையும் கவனியுங்கள் என்கிறார் எஸ். வந்தனா தூக்கமின்மை குழந்தையின் மனநிலையையும் பொறுமையையும் பாதிக்கக்கூடும். தொடர்ந்து சோர்வாக இருக்கும் குழந்தைக்கு சிறிய விஷயங்கள்கூட பெரிய பிரச்னையாகத் தோன்றலாம்.
அதேபோல், சரியான உணவு, போதுமான உடல் இயக்கம் மற்றும் ஒழுங்கான அன்றாட வாழ்க்கை ஆகியவை குழந்தையின் ஒட்டுமொத்த உணர்ச்சி நலனுக்கு முக்கியமானவை. இதற்கிடையில் எல்லை இல்லாத அன்பும், செல்லமும் கூட பிரச்னைதான் என்கிறார் எஸ். வந்தனா.
குழந்தையை அன்பாக வளர்ப்பது என்பது அது கேட்பதையெல்லாம் கொடுப்பது அல்ல.
குழந்தை முதல்முறையாக பிடிவாதம் பிடிக்கும்போது, கத்தும்போது அல்லது பொருட்களை வீசும்போது பெற்றோர் “சரி, அழாதே... இதை எடுத்துக்கொள்” என்று ஒவ்வொரு முறையும் சமரசம் செய்தால், அந்த நடத்தை குழந்தைக்கு வெற்றிகரமான உத்தியாக மாறிவிடலாம்.
“கத்தினால் கிடைக்கும்”, “அழுதால் விதி மாறும்”, “பொருளை உடைத்தால் பெற்றோர் பயப்படுவார்கள்” என்ற அனுபவம் மீண்டும் மீண்டும் கிடைத்தால், அதே விஷயத்தைதான் குழந்தை எதிர்காலத்திலும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
இதற்கு நேர்மாறாக கடுமையான தண்டனை, அடித்தல், அவமானப்படுத்துதல் அல்லது தொடர்ந்து கத்துவதும் கூட தீர்வல்ல. கடுமையான மற்றும் ஒரே மாதிரி இல்லாத தண்டனை முறைகள் குழந்தையின் ஆக்ரோஷமான நடத்தையை அதிகரிக்கக்கூடிய காரணிகளில் ஒன்றாக மாறிவிடும். அதற்கு பதிலாக பேசுங்கள்.
“கோபப்படாதே” என்று சொல்லாதீர்கள்கோபம் ஒரு உணர்வு. அதை முற்றிலுமாகத் தடுக்க முடியாது. அதனால்,“கோபப்படாதே.” “அழாதே.” “இதற்கெல்லாம் ஏன் இவ்வளவு கோபம்?” என்று சொல்வதைவிட, “உனக்கு கோபம் வந்திருக்கிறது என்று எனக்குப் புரிகிறது.”
“எது உன்னை இவ்வளவு கோபப்படுத்தியது?”
“கோபமாக இருக்கலாம்; ஆனால் அடிக்கக் கூடாது.”என்று பேசுவது சிறந்த அணுகுமுறை.
இதில் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது: உணர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்; தவறான நடத்தையை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.
குழந்தையிடம் “உனக்கு கோபப்பட உரிமை இருக்கிறது. ஆனால் மற்றவரை அடிக்க உரிமை இல்லை” என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
எப்படிப்பட்ட பயிற்சிகள் பெற்றோர்கள் கொடுக்கலாம்? தொடர்ந்தார் எஸ். வந்தனா.
குழந்தை கோபப்படும்போது உடனடியாக அறிவுரை கூறுவதற்கு பதிலாக, முதலில் அதன் உடல் மற்றும் மனநிலையை அமைதிப்படுத்த முயற்சிக்கலாம்.
குழந்தைக்கு இந்த நான்கு படிகளைப் பழக்கலாம்:
நில் - மூச்சு விடு - யோசி - பேசு.
கோபம் வந்தவுடன் உடனடியாக பதில் சொல்லாமல் சில விநாடிகள் நிற்க வேண்டும். மூக்கின் வழியாக மெதுவாக மூச்சை இழுத்து, வாயின் வழியாக மெதுவாக வெளியே விட வேண்டும். இதை சில முறை செய்யலாம்.
பிறகு, “ உனக்கு உண்மையில் என்ன கோபம்?” என்று யோசிக்க வேண்டும். அதன்பிறகு மட்டுமே பேச வேண்டும்.
இதை குழந்தைக்கு மட்டும் சொல்லி விட்டு பெற்றோர் தாங்கள் கடைப்பிடிக்காமல் இருந்தால் பலன் குறையும். எனவே பெற்றோரும் இதையே செய்து காட்ட வேண்டும்.
“கோப மீட்டர்” பயிற்சி
குழந்தைக்கு கோபத்தின் அளவை அடையாளம் காண கற்றுக்கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும்.
ஒன்று முதல் ஐந்து வரை ஒரு அளவுகோலை உருவாக்கலாம்.
1 - அமைதி
2 - சிறிய எரிச்சல்
3 - கோபம் அதிகரிக்கிறது
4 - கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபம்
5 - வெடிக்கத் தயாராக இருக்கும் நிலை
குழந்தையிடம், “இப்போது உன் கோபம் எந்த எண்ணில் இருக்கிறது?” என்று கேட்கலாம்.
கோபம் 2 அல்லது 3இல் இருக்கும்போதே குழந்தை இடைவேளை எடுக்கக் கற்றுக்கொண்டால், அது 5க்கு சென்று வெடிப்பதைத் தடுப்பது எளிதாகலாம்.
“கோபப் பதிவு” வைத்துப் பாருங்கள்
ஒரு வாரத்திற்கு குழந்தையின் கோபத்தை பெற்றோர் பதிவு செய்து பார்க்கலாம்.
உதாரணமாக, பள்ளியில் இருந்து வந்த உடனே கோபப்படுகிறார்களா? பசி இருக்கும் நேரத்தில் கோபப்படுகிறார்களா? தூக்கம் குறைந்த நாட்களில் கோபம் அதிகரிக்கிறார்களா? படிக்கச் சொல்லும்போது மட்டும் எதிர்க்கிறார்களா? மொபைலை நிறுத்தச் சொல்லும்போது மட்டும் வெடிக்கிறார்களா? என்ற காரணத்தை அடையாளம் கண்டுவிட்டால், தீர்வை உருவாக்குவது எளிது. ஒவ்வொரு விஷயத்திலும் கட்டளையிடுவதற்குப் பதிலாக, குழந்தைக்கு கட்டுப்பாட்டின் சிறிய உணர்வைக் கொடுக்கலாம்.
“இப்போதே படிக்க வேண்டும்” என்பதற்குப் பதிலாக,
“இப்போது படிக்கிறாயா அல்லது பத்து நிமிடத்திற்குப் பிறகு படிக்கிறாயா?”
“இதை அணிய வேண்டும்” என்பதற்குப் பதிலாக,
“நீல சட்டையா, பச்சை சட்டையா?”
என்று இரண்டு ஏற்றுக்கொள்ளக்கூடிய தேர்வுகளை வழங்கலாம். இது குழந்தையின் சுய சிந்தனை உணர்வை மதிப்பதோடு, தேவையற்ற மோதலையும் குறைக்க உதவும்.
“ரோல்-ப்ளே” பயிற்சி
குழந்தையின் அன்றாட வாழ்க்கையில் கோபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை வீட்டிலேயே நடித்து பார்க்கலாம்.
உதாரணமாக, “நண்பன் உன்னுடைய பொம்மையை எடுத்துக்கொண்டால் என்ன செய்வாய்?” என்று கேளுங்கள்.
குழந்தை “அவனை அடிப்பேன்” என்றால்,
“சரி, வேறு வழி என்ன?”
என்று கேளுங்கள்.
“அதை எனக்குத் திருப்பிக் கொடு என்று சொல்லலாம்.”
“ஆசிரியரிடம் சொல்லலாம்.”
“சிறிது நேரம் வேறு இடத்துக்குச் செல்லலாம்.”
என்று மாற்று வழிகளை குழந்தையுடன் சேர்ந்து உருவாக்கலாம்.குறிப்பாக மற்றவர்கள் முன்னிலையில் குழந்தையை அவமானப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
நல்ல நடத்தையைப் பாராட்டுங்கள். குழந்தை அமைதியாக நடந்துகொண்டால் அதை கவனியுங்கள். “நான் கோபமாக இருந்தாலும் உன்னை அடிக்கவில்லை” என்று குழந்தை சொன்னால், அந்த தருணத்தைப் பாராட்டுங்கள். “நீ கோபமாக இருந்தும் கட்டுப்படுத்திக்கொண்டது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.” என்று சொல்லலாம்.
குழந்தை நல்ல நடத்தையை வெளிப் படுத்தும்போது பெற்றோர் அதைக் கவனித்து பாராட்டுவது, தவறான நடத்தைக்கு மட்டும் கவனம் செலுத்துவதைவிட சிறந்த பலனைத் தரலாம்.
தேவைப்பட்டால் தொழில்முறை உதவியைப் பெறுவது அவசியம் ஒரு குழந்தையின் கோபத்தின் பின்னால் இருக்கும் கதையை முதலில் கேளுங்கள். “ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்பதற்குப் பதிலாக “உனக்கு என்ன நடந்தது?” என்று கேட்கத் தொடங்குங்கள்.
ஏனெனில், ஒவ்வொரு கோபத்தின் பின்னாலும் ஒரு காரணம் இருக்கலாம். அந்த காரணத்தைப் புரிந்துகொள்ளும் பெற்றோரால், கோபத்தை மட்டும் அடக்காமல், குழந்தைக்கு தன்னுடைய உணர்வுகளை ஆரோக்கியமாகக் கையாளக் கற்றுக்கொடுக்க முடியும். இல்லை இது எல்லை மீறிய நிலையாக இருப்பின் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
ஒவ்வொரு குழந்தையின் நடத்தை அதன் வயது, வளர்ச்சி, குடும்பச் சூழல் மற்றும் தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்து அவர்கள் நடத்தை மாறுபடும். தொடர்ந்து அல்லது தீவிரமாக இருக்கும் கோபம்/ஆக்ரோஷத்திற்கு தகுதிவாய்ந்த குழந்தை உளவியல் நிபுணர் அல்லது குழந்தை மனநல மருத்துவரின் நேரடி மதிப்பீடு செய்துகொள்வது அவசியம்.
- ஷாலினி நியூட்டன்



