மீண்டும் ஒரு முறை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இளம் வயது முதலே மருத்துவ கனவுகளுடன் படித்து வரும் மாணவர்களின் கடின உழைப்பை மோடி அரசு மீண்டும் ஒருமுறை சிதைத்து இருக்கிறது. கடந்த 3ம் தேதி நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது உறுதி செய்யப்பட்டதால், அந்தத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்து, தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்களையும், அதற்காக இரவு, பகல் பாராது உழைத்த குடும்பத்தினரின் கனவையும் உருக்குலைத்து இருக்கிறது மோடி அரசுநாடு முழுவதும் கடந்த 3ம் தேதி நீட் தேர்வு முடிவடைந்த நிலையில், ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் ஒரு ரகசிய வினாத்தாள் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த 180 கேள்விகளில் 140 கேள்விகள் அசல் வினாத்தாளுடன் அப்படியே ஒத்துப்போனது. இதையடுத்து நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு முதல் நீட் தேர்வு முறை அமலுக்கு வந்த பிறகு, நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேர்வு முறைகேடு காரணமாக ரத்து செய்யப்படுவது இது இரண்டாவது முறை ஆகும். இதற்கு முன்பு 2024ல் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் மே 5ஆம் தேதி நடந்த தேர்வும் அப்போது ரத்து செய்யப்பட்டது. அப்போது பீகார் மாநிலம் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக 2024 ஜூன் 4 அன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் சர்ச்சை வெடித்தது. மொத்தம் 67 தேர்வர்கள் 720-க்கு 720 என்ற முழுமையான மதிப்பெண்ணைப் பெற்றிருந்தனர். இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பயிற்சி மையங்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியது. இதற்கு குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதற்கான நேரத்தை இழந்ததாகக் கூறப்படும் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களே காரணம் என்று தேசிய தேர்வு முகமை சப்பை கட்டு கட்டினாலும் பல மாநிலங்களில் போராட்டம் வெடித்ததால் அப்போது நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. சிபிஐ விசாரணை நடத்தியது. முடிவில் ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் உள்ள ஓயாசிஸ் பள்ளி மையத்திலிருந்தே வினாத்தாள் வெளியானது தெரிய வந்தது. இதையடுத்து நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வை நடத்தியது மோடி அரசு. மேலும் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் சிக்கினால் 10 ஆண்டுகள் சிறை மற்றும் 1 கோடி ரூபாய் அபராதம் என 2024ம் ஆண்டு சட்டத்திருத்தம் செய்தது. இதுதொடர்பாக வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த சூழலில் 2026 நீட் தேர்விலும் வினாத்தாள் கசிந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு இருப்பது மோடி அரசு மீதான நம்பகத்தன்மை, தேர்வு நடத்தும் தன்மை குறித்த கேள்விகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் இருந்து வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆரம்பம் முதலே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மாணவர்கள் கல்வியை, கனவை சிதைப்பதாக தமிழ்நாடு குற்றம் சாட்டி வருகிறது. தமிழ்நாட்டின் குற்றச்சாட்டு சரியானது, நீட் ஆபத்தானது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.


