கல்வியில் ஏற்படுத்தும் சிறிய மாற்றங்கள் மூலமாக மாணவ மாணவியர்களை செம்மைப்படுத்த முடியும். கல்வியோடு நிறைய எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும் வெற்றியோ தோல்வியோ அது குறித்து அதிகம் யோசிக்காமல் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். வெற்றியால் மகிழ்வதை விட தோல்வியால் துவண்டு விடக் கூடாது என்பதை வலியுறுத்தவேண்டும். தோல்வியே வெற்றிக்கான முதல் படி என்பதை உணர்ந்தால் அவர்களிடையே நிறைய மாற்றங்களை உருவாக்க முடியும். அதையும் குழந்தைப் பருவத்திலே சொல்லிக்கொடுத்து விட்டால் மனதில் பதிந்து விடும் என்கிறார் சர்மிளா நாச்சியார். மதுரையில் குழந்தைகளுக்கான மழலைப் பள்ளி ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். குழந்தைகளோடு பல காலமாக பழகி வரும் அனுபவங்களில் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன் என்கிறார். இப்படியாக கல்வியும் சேவையுமே தனது வாழ்வின் இலட்சியம் என இருந்து வருகிறார் மதுரையை சேர்ந்த கல்வியாளர், சமூக சேவகர், தொழில் முனைவோர் என்கிற பன்முக திறமை கொண்ட கல்வியாளர் சர்மிளா நாச்சியார். இவர் மதுரைப் பகுதியில் குழந்தைகளுக்கான லில்லி பாண்ட் ஸ்டார் ப்ளே ஸ்கூலை நடத்தி வருகிறார். இவரது கற்பித்தல் அனுபவத்தினைக் கொண்டு குழந்தைப் பருவ கல்வி குறித்தும் குழந்தைகளின் மனநிலை மற்றும் ஆர்வங்கள் குறித்தும் நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார்.
கல்வியில் என்னென்ன மாற்றங்கள் வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
வெளிநாடுகளில் கல்வியோடு சேர்ந்து நிறைய புதிய விஷயங்களைக் குழந்தைப் பருவத்திலேயே கற்றுத் தருகிறார்கள். முதலில் குழந்தைகளோட தனித்திறமைகளை கண்டறிந்து விடுகிறார்கள். அதற்கேற்ப குழந்தைகளின் திறன்களை ஊக்குவித்து வருகிறார். நமது நாட்டில் இதற்கு முன்பு கல்வி கற்பித்தல் மற்றும் கற்றல்கள் வெறும் மனப்பாட முறைகளாக இருந்து வந்தது. ஆனால் தற்போது நமது நாட்டிலும் கல்வி கற்கும் முறைகள் நிறைய மாற்றங்களைப் பெற்று வருவது மகிழ்வான விஷயம் தான். தற்போது எங்களை போன்று இளம்தளிர்களை கையாளும் ஆசிரியர்கள் குழந்தைகளின் அடிப்படைத்திறன்கள் மற்றும் ஆர்வம் விருப்பம் போன்ற விஷயங்களை கண்டறிந்து விடுகிறோம். அதற்கேற்ப அவர்களுக்குப் பயிற்று வித்தும் வருகிறோம். இதற்கு நல்ல பலன்களும் கிடைத்து வருகிறது. அதற்கேற்ப இன்றைய குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் தனித்திறன்களும் அபாரமாக இருந்து வருகிறது. தற்போது எங்களை போன்று இளம்தளிர்களை கையாளும் ஆசிரியர்கள் குழந்தைகளின் அடிப்படை திறன்கள் மற்றும் ஆர்வம் விருப்பம் போன்ற விஷயங்களை கண்டறிந்து விடுகிறோம். அதற்கேற்ப அவர்களுக்கு பயிற்று வித்தும் வருகிறோம். இதற்கு நல்ல பலன்களும் கிடைத்து வருகிறது. அதற்கேற்ப இன்றைய குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் தனித்திறன்களும் அபாரமாக இருந்து வருகிறது.
குழந்தைகளின் கற்றல் திறன்களை மேம்படுத்துவது எப்படி?
குழந்தைகளின் கற்றல் திறன் குறைந்து போனதற்கு மிக முக்கிய காரணம் இன்று அவர்களது ஸ்கிரீன் டைம் அதிகமாகி விட்டது. இது நினைவாற்றலை குறைப்பதோடு எதையும் தானாக யோசிக்க விடாமல் செய்கிறது. மொபைல்போனோடு டிவியும் அவர்களது பெரும் பிரச்சனைகளாக இருந்து வருகிறது. இதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து தான் குறைக்க இயலும். தற்போதைய சமூகவலைதள காலத்தில் அதன் தாக்கங்கள் குழந்தைகளின் மனநிலையில் ஏகப்பட்ட மாற்றங்களை உருவாக்கி வருவதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவர்கள் என்ன பார்க்கிறார்கள் எதை பார்க்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.
அரசாங்க தலையீடும் இதில் தேவை தான். மொபைல் பயன்படுத்துவதில் குழந்தைகளுக்கான கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும். அதனை பார்ப்பதில் ஏதேனும் உளவியல் தாக்கங்கள் இருக்கிறதா? என்பதையும் கண்டறிந்து அதற்கான கவுன்சிலிங் கூட அளிக்கலாம். மொபைல் பயன்பாடுகளை குறைக்க வாசிப்புத் திறனை வளர்க்க வேண்டும். அது அவர்களின் உலகத்தை இன்னும் அழகாக்கித் தரும். நிறைய கலைகளை கற்றுக்கொள்ள ஊக்குவித்தாலே தானாக மொபைல்களைப் பயன்படுத்துவது குறையும். ஸ்கிரீன் டைம் குறைந்தாலே கற்றல் திறன் நினைவுத்திறன் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. மாறாக வலுக்கட்டாயமாக பிடுங்கி வைப்பதும் எதிர்மறை விளைவுகளை தரும் ஆபத்துகள் இருக்கிறது. கண்ணாடிப் பாத்திரங்களை கையாளும் தந்திரம் தேவையாயிருக்கிறது.
சிறுவயதிலேயே குழந்தைகளுக்கான ஆட்டிஸம் உட்பட சில குறைபாடு குறித்த பிரச்னைகளை கண்டறிவது எப்படி?
குழந்தை பிறந்து மூன்று மாதத்திலேயே அவற்றின் கண்பார்வைத் திறனில் வேறுபாடுகளை கண்டறிய முடியும். நம்மை நேராக பார்க்கிறதா? என்பதை ஓரளவு கண்டறியலாம். ஆறுமாதத்தில் முகம் பார்த்து சிரிக்க தெரிந்திருக்கிறதா? அதற்கான அந்தந்த மாதங்களுக்கான முறையான சரியான வளர்ச்சி இருக்கிறதா என்பதை கூர்ந்து கண்டறிய வேண்டும். ஒரு வயதுக்கு பிறகு சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறதா? மற்றவர்களிடம் எப்படி பழகுகிறது பேசுகிறது என்பதை கவனிக்கலாம். வெளியிடங்களில் தேவையின்றி சத்தமிட்டு கொண்டும் தங்களை கன்ட்ரோல் செய்ய முடியாமல் இருக்கும் குழந்தைகளை கவனிக்க வேண்டும். இவர்களுக்கான ஸ்பெஷல் எஜுகேஷன் குறித்து சில மாதங்கள் வகுப்புக்கு சென்று இருக்கிறேன். அதில் நான் கற்றுக் கொண்டது இவர்களை சீக்கிரமே கண்டறிந்து பயிற்சிகளை அளித்தால் நல்ல மாற்றங்களை பெற முடியும். இவர்களுக்கு தொடர்ந்து கவனம் செலுத்துவது போன்ற நிறைய பயிற்சிகளை அளித்தால் நல்லதொரு மாற்றத்தைக் காணலாம். இவர்களுக்கான நிறைய சிறப்புக் கல்வி முறைகள் வந்து விட்டது.
குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி எப்படி இருக்க வேண்டும்?
குழந்தைகளுக்கான ஆரம்ப கல்வி என்பது சுகமாக இருக்க வேண்டும்.. சுமையாக இருக்க கூடாது. நாம் நம் எதிர்பார்ப்புகளை நமது குழந்தைகளிடம் அளவுக்கதிகமாக திணிக்கிறோமோ என்று தோன்றுகிறது. மூன்று வயது குழந்தைகளுக்கு கூட எத்தனை விதமான கல்வி செலவுகள். ஆடம்பரக் கல்வி முறைகள் என்பது தேவையற்றது. அவர்களின் மன நலனை புரிந்து கொள்ளும் விதமான எளிமையான கல்வித் திட்டங்களே போதுமானது. சமூகப் புற அழுத்தங்களை அதிகரிக்க வேண்டாம். குழந்தைகளை குழந்தைகளாக மட்டுமே வைத்துக் கொள்வோம் என்பதே எனது ஆசை.
பொதுவாக குழந்தைகளுக்கான உளவியல் மற்றும் பிரச்சனைகளை ஆசிரியர் , பெற்றோர், சமூகம் என மூன்று தரப்பினரும் யோசிக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதை நோக்கிய முன்னெடுப்புகளை அனைவருமே எடுக்க வேண்டும் அப்போது குழந்தைகளுக்கான எதிர்காலத்தோடு நிகழ்காலமும் மிக சிறப்பாக இருக்கும் என பொறுப்புடன் பேசுகிறார் குழந்தைகளுக்கான கல்வியாளர் சர்மிளா நாச்சியார்.
- தனுஜா ஜெயராமன்


