இந்திய ஆயுதப்படை வரலாற்றில் முக்கியமான மைல்கல் ஒன்று நிகழ்ந்துள்ளது. மருத்துவம் மற்றும் செவிலியர் சேவைகள் அல்லாத வழக்கமான பணிப்பிரிவில் இருந்து ஒரு பெண் அதிகாரி முதன்முறையாக இரண்டு நட்சத்திர அந்தஸ்தை அடைந்துள்ளார். அந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்தவர் ஏர் வைஸ் மார்ஷல் சக்தி சர்மா.
விமானப்படையில் ஏர் வைஸ் மார்ஷல் என்பது இரண்டு நட்சத்திர அந்தஸ்து கொண்ட உயர் பதவி. ராணுவத்தில் இதற்கு இணையானது மேஜர் ஜெனரல், கடற்படையில் ரியர் அட்மிரல். இதுவரையிலும் இந்திய ஆயுதப் படையில் இந்தப் பிரிவில் பெண்கள் பொறுப்பிற்கு வந்ததில்லை.
பெண்களின் நீண்ட பயணம்
இந்திய ஆயுதப்படையில் பெண்கள் உயர் பதவிகளை அடைவது புதிதல்ல. ஆனால் கடந்த காலத்தில் அவர்களுக்கான முக்கிய வாய்ப்புகள் மருத்துவம் மற்றும் செவிலியர் சேவைகளில் இருந்தன. 1976-ல் இந்திய ராணுவ மருத்துவ சேவையைச் சேர்ந்த ஜெர்ட்ரூட் ஆலிஸ் ராம், மேஜர் ஜெனரல் பதவியை அடைந்த முதல் பெண் அதிகாரியாக வரலாறு படைத்தார்.
வழக்கமான ராணுவப் பணிகளில் பெண்கள் அதிகாரிகளாக சேரும் வாய்ப்பு 1990களில் விரிவடைந்தது. பின்னர் நிரந்தர ஆணையம், பதவி உயர்வு, கட்டளைப் பொறுப்புகள் உள்ளிட்ட துறைகளிலும் வாய்ப்புகள் அதிகரித்தன. 2020-ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பும் இந்த முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றியது.
இந்த மாற்றங்களின் விளைவாக, அந்தத் தலைமுறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் இன்று உயர்மட்டப் பதவிகளை அடையத் தொடங்கியுள்ளனர்.
சக்தி சர்மாவின் சாதனைப் பயணம்
சக்தி சர்மா 1994-ம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி இந்திய விமானப்படையின் கல்விப் பிரிவில் அதிகாரியாக இணைந்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அவர், பயிற்சி நிறுவனங்கள், களப்பணியிடங்கள் மற்றும் தலைமையகங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
தற்போது விமானப்படை தலைமையகத்தில் Assistant Chief of the Air Staff (Education) என்ற முக்கியப் பொறுப்பை வகிக்கிறார். ஐஐடி கான்பூர் மற்றும் புனே பல்கலைக்கழகத்தில் விமானப்படையின் Chairs of Excellence அமைப்புகளை உருவாக்குவதிலும் அவர் பங்காற்றியுள்ளார். சைனிக் பள்ளியை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி என்ற சாதனையும் அவருக்கு உள்ளது.
எனவே, இரண்டு நட்சத்திர அந்தஸ்து என்பது திடீரென கிடைத்த பதவி உயர்வு அல்ல. பல ஆண்டுகளாக அவர் பெற்ற அனுபவம், பணித்திறன் மற்றும் தலைமைத்துவத்தின் அங்கீகாரமாகும்.
இத்தகைய அதிகாரியாக என்ன படிக்க வேண்டும்?
விமானப்படையில் அதிகாரியாக வேண்டும் என்றால் முதலில் எந்தப் பிரிவில் சேர விரும்புகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதன்படி கல்வித் தகுதியும் மாறும்.
பறக்கும் படை, அல்லது கிளைக்கு குறிப்பிட்ட பாடத் தகுதிகளுடன் பட்டப்படிப்பு தேவைப்படலாம். தொழில்நுட்ப குழுவுக்குக்கு பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகள் முக்கியம். கல்வி, நிர்வாகம், தளவாடங்கள் பிரிவுகளுக்கு சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பு அல்லது முதுகலைப் படிப்பு தேவைப்படலாம். அதிகாரியாகச் சேருவதற்கான முக்கிய நுழைவுத் தேர்வுகளில் NDA, CDS, AFCAT உள்ளிட்டவை அடங்கும். எந்தத் தேர்வு பொருந்தும் என்பது வயது, கல்வித் தகுதி மற்றும் தேர்ந்தெடுக்கும் பிரிவைப் பொறுத்தது.
SSB-யில் சோதிக்கப்படுவது அறிவு மட்டும் அல்ல
எழுத்துத் தேர்வுக்குப் பிறகு SSB (Services Selection Board) முக்கியமான கட்டம். இதில் வேட்பாளரின் அறிவுடன், தலைமைத்துவம், குழுவாகச் செயல்படும் திறன், தன்னம்பிக்கை, தொடர்புத்திறன், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், அழுத்தமான சூழலில் முடிவெடுக்கும் திறன் போன்றவை மதிப்பிடப்படுகின்றன.
எனவே SSB-க்குத் தயாராகும் மாணவர்கள் புத்தகப் படிப்புடன் சேர்த்து நடப்பு நிகழ்வுகள், பொதுஅறிவு, பேச்சுத்திறன், குழுப்பணி மற்றும் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உடலும் மனமும் தயாராக வேண்டும்
ராணுவ அதிகாரி பணிக்கு உடற் தகுதி மிகவும் முக்கியம். ஓட்டம், சகிப்புத்தன்மை, உடல் வலிமை போன்றவற்றை வளர்க்கும் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தேர்வுக்குப் பிறகு அதிகாரி பயிற்சியில் டிரில், உடற் பயிற்சி, ராணுவ ஒழுக்கம், களப்பயிற்சி, தலைமைத்துவம் மற்றும் சேவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.
இதனால் ஒரு நல்ல ராணுவ அதிகாரியை உருவாக்குவது கல்வியால் மட்டும் நடப்பதில்லை. அறிவு, உடற்தகுதி, மன உறுதி, ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவம் அனைத்தும் அவசியம்.
இரண்டு நட்சத்திரங்களின் உண்மையான அர்த்தம்
ஒருவர் அதிகாரியாகச் சேர்ந்தவுடன் இரண்டு நட்சத்திர அந்தஸ்தை அடைந்துவிட முடியாது. பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றி, வெவ்வேறு பொறுப்புகளில் தன்னை நிரூபித்து, படிப்படியாகப் பதவி உயர்வு பெற வேண்டும். சக்தி சர்மாவின் பயணம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. 1994 ஆம் ஆண்டு தொடங்கிய அவரது பணிப்பயணம், மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு இந்திய ஆயுதப்படை வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது.
அவரது தோளில் மின்னும் இரண்டு நட்சத்திரங்கள் ஒரு பதவியின் அடையாளம் மட்டுமல்ல. பெண்களுக்கும் ஆயுதப்படையின் உயர்மட்டத் தலைமைப் பொறுப்புகளை அடைய முடியும் என்பதற்கான நம்பிக்கையின் அடையாளம்.
இன்று ஒரு பள்ளி மாணவி விமானப்படையில் சேர வேண்டும் என்று கனவு காண்கிறாள் என்றால், அந்தக் கனவுக்கு முன்பைவிட தெளிவான பாதை உள்ளது. சரியான கல்வி, போட்டித் தேர்வு, SSB (Sashastra Seema Bal) தயாரிப்பு, உடற்தகுதி மற்றும் தொடர்ந்து உழைக்கும் மனப்பக்குவம் இருந்தால், அவளுடைய பயணமும் ஒருநாள் அந்த இரண்டு நட்சத்திரங்களை நோக்கிச் செல்லலாம்.
சக்தி சர்மாவின் சாதனை ஒரு முடிவு அல்ல; அடுத்த தலைமுறை பெண் அதிகாரிகளுக்கான புதிய தொடக்கம்.
- எஸ். ஆர்த்தி.


