அறிவியல் உலகில் இந்திய பெண்கள் தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து வரும் நிலையில், தற்போது உலக விண்வெளி மற்றும் கோள் அறிவியல் துறையில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் ஒரு முக்கியமான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. உலகின் மிக முக்கியமான விண்கல் மற்றும் கோள் அறிவியல் அமைப்புகளில் ஒன்றான ‘தி மெட்டியோரிடிகல் சொசைட்டி’ (The Meteoritical Society) வழங்கும் ‘ஃபெலோ’ (Fellow) என்ற உயரிய அங்கீகாரத்தை பெறும் முதல் இந்தியப் பெண்ணாக விஞ்ஞானி குல்ஜீத் கௌர் மார்ஹாஸ் வரலாறு படைத்துள்ளார்.
இந்த அங்கீகாரம் சாதாரண விருதல்ல. விண்கற்கள், கோள்கள், சூரியக் குடும்பத்தின் தோற்றம் மற்றும் விண்வெளி வேதியியல் குறித்த ஆய்வுகளில் உலகளவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்த விஞ்ஞானிகளுக்கே இந்த பெருமை வழங்கப்படுகிறது. 1933ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சர்வதேச அமைப்பின் நீண்ட வரலாற்றில், இந்த பட்டத்தை பெறும் முதல் இந்தியப் பெண் விஞ்ஞானி என்ற பெருமையை குல்ஜீத் கௌர் மார்ஹாஸ் பெற்றிருப்பது இந்திய அறிவியல் உலகிற்கு ஒரு முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது.
தற்போது அவர் அகமதாபாத்தில் உள்ள பிஆர்எல் ஆய்வுக்கூடத்தில் (Physical Research Laboratory - PRL) கோள் அறிவியல் பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகளாக அவர் மேற்கொண்டு வரும் ஆய்வுகள், சூரியக் குடும்பம் எவ்வாறு உருவானது, கோள்கள் எப்படி வளர்ச்சி பெற்றன, விண்கற்களில் மறைந்திருக்கும் பழமையான வேதியியல் தகவல்கள் என்ன என்பதைக் குறித்து விஞ்ஞான உலகிற்கு புதிய புரிதல்களை வழங்கியுள்ளன.
விண்கற்கள் என்பது வெறும் விண்வெளியில் இருந்து விழும் கற்கள் மட்டுமல்ல; அவை கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவான சூரியக் குடும்பத்தின் வரலாற்றை தன்னுள் பதுக்கியிருக்கும் “காலக் காப்ஸ்யூல்கள்” என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இந்த விண்கற்களை ஆய்வு செய்வதன் மூலம், பூமி உருவாகும் முன் இருந்த விண்வெளி சூழல் குறித்த தகவல்களை அறிய முடிகிறது. இந்த துறையில்தான் குல்ஜீத் கௌர் மார்ஹாஸ் முக்கிய பங்களிப்புகளை செய்துள்ளார்.
அவர் குறிப்பாக ‘ப்ரீ-சோலார் கிரெயின்ஸ்’ (Pre-solar grains) எனப்படும் மிகச் சிறிய விண்வெளித் துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். இத்துகள்கள் சூரியன் உருவாகும் முன்பே பிரபஞ்சத்தில் இருந்தவை என்று கருதப்படுகின்றன. அதாவது மனிதர்கள் மட்டுமல்ல, சூரியக் குடும்பமே உருவாகும் முன் இருந்த பிரபஞ்ச வரலாற்றின் தடயங்களை இத்துகள்கள் தன்னுள் வைத்திருக்கின்றன. இந்த துகள்களின் வேதியியல் மற்றும் ஐசோடோப் அமைப்புகளை ஆய்வு செய்வதன் மூலம், நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின, வெடித்தன, புதிய மூலக்கூறுகளை உருவாக்கின என்பதைக் குறித்து விஞ்ஞானிகள் அறிந்து கொள்கிறார்கள்.
இந்த ஆய்வுகளுக்காக அவர் அதி நவீன கருவிகளை பயன்படுத்தி வருகிறார். மிக நுண்ணிய அளவில் இருக்கும் துகள்களின் வேதியியல் அடையாளங்களை ஆய்வு செய்ய உதவும் இந்த தொழில்நுட்பம், விண்வெளி அறிவியலில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
குல்ஜீத் கௌர் மார்ஹாஸ் பல சர்வதேச விண்வெளி ஆய்வுத்திட்டங்களுடனும் பணியாற்றியுள்ளார். நாசாவின் ஸ்டார் டஸ்ட் திட்டம், ஜப்பானின் Hayabusa திட்டம் மற்றும் Apollo திட்டங்களின் மாதிரிகள் போன்றவற்றை ஆய்வு செய்யும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது. இந்த ஆய்வுகள் அனைத்தும் சேர்ந்து, சூரியக் குடும்பத்தின் ஆரம்பகால வரலாறு பற்றிய மனிதர்களின் புரிதலை மேலும் விரிவுபடுத்தியுள்ளன.
அவரது சாதனை, ஒரு தனிப்பட்ட அறிவியல் வெற்றியைத் தாண்டி, இந்திய பெண்கள் உலக அறிவியல் துறையில் எட்டிக்கொண்டிருக்கும் உயரத்தையும் பிரதிபலிக்கிறது. குறிப்பாக விண்வெளி மற்றும் கோள் அறிவியல் போன்ற துறை களில் பெண்களின் பங்களிப்பு இன்னும் குறைவாக இருக்கும் சூழலில், இந்த அங்கீகாரம் பல இளம் பெண்களுக்கு ஊக்கமாக அமையும் என்று அறிவியல் உலகம் கருதுகிறது.
ஒரு இந்தியப் பெண் விஞ்ஞானி, உலகின் மிகப் பழமையான மற்றும் மதிப்புமிக்க விண்கல் அறிவியல் அமைப்பின் ஃபெலோவாக தேர்வு செய்யப்படுவது, இந்திய ஆராய்ச்சியின் தரத்தையும் உலக அரங்கில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. குல்ஜீத் கௌர் மார்ஹாஸின் இந்த சாதனை, விண்வெளியைப் பற்றிய மனித ஆர்வத்துக்கும், அதனை ஆராயும் இந்திய அறிவியல் பயணத்துக்கும் மேலும் ஒரு பெருமைமிகு அத்தியாயமாக மாறியுள்ளது.


