Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

40-ஐ நெருங்கும் பயம்...பெண்களில் மட்டும் ஏன் அதிகம்?

“இன்னும் கொஞ்ச நாளில் 40…” இந்த ஒரு எண்ணமே சில பெண்களின் மனதில் பல கேள்விகளை எழுப்பிவிடும். முகத்தில் ஒரு கோடு தெரிந்தால் வயதாகிவிட்டோமா என்ற கவலை. உடல் எடை சற்று அதிகரித்தால் பழைய உடைகள் இனி பொருந்தாதோ என்ற தயக்கம். முடியில் நரை தெரிந்தால் இளமை மாறிவிட்டதோ என்ற பதற்றம். அதைவிட முக்கியமாக, “நான் நினைத்தபடி என் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேனா?” என்ற கேள்வி.

உண்மையில், 40 வயதை நெருங்குவதற்கான பயம் என்பது வயதைப் பற்றிய பயம் மட்டுமல்ல. உடல் மாற்றம், சமூக எதிர்பார்ப்பு, குடும்பப் பொறுப்புகள், தொழில், உறவுகள், தாய்மை, அழகு குறித்த பார்வை, கடந்த காலத்தை

மதிப்பீடு செய்வது என பல விஷயங்கள் ஒன்றாகச் சேரும் ஒரு மனநிலை.

ஏன் பெண்களுக்கு இந்தப் பயம் அதிகமாகத் தோன்றுகிறது?

சிறு வயதிலிருந்தே பெண்களின் மதிப்பை அவர்களின் தோற்றத்தோடு இணைக்கும் சமூகப் பார்வை இதற்கு ஒரு முக்கிய காரணம். “இளமையாக இருக்க வேண்டும்”, “அழகாக இருக்க வேண்டும்”, “உடல் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று பெண்களுக்கு தெரியாமலேயே பல விதமான அளவுகோல்கள் உருவாக்கப்படுகின்றன.

இதனால் வயது அதிகரிப்பது இயற்கையான ஒரு மாற்றமாக இல்லாமல், அழகு மற்றும் இளமை குறைவதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.

அதிலும் சமூக ஊடகங்கள் இந்தப் பிரச்சினையை இன்னும் தீவிரமாக்கியிருக்கின்றன. எப்போதும் இளமையாகத் தோன்றும் முகங்கள், உடல் அமைப்புகள், அப்பழுக்கற்ற சருமம் , ஃபில்டர் செய்யப்பட்ட புகைப்படங்கள் என தொடர்ந்து பார்க்கும்போது, இயற்கையான வயது மாற்றங்கள்கூட குறையாகத் தோன்றத் தொடங்குகின்றன.

ஆனால் ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால்—வயதாகுவது தோல்வியல்ல. அது வாழ்க்கையின் இயல்பான பயணம்.

உடலில் ஏற்படும் மாற்றங்களும் ஒரு காரணம்

35 வயதுக்குப் பிறகு சில பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் தொடங்கலாம். 40-களில் சிலருக்கு மெனோபாஸ்க்கான மாற்றங்கள் ஏற்படலாம். மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், தூக்கத்தில் மாற்றம், மனநிலையில் ஏற்ற இறக்கம், உடல் எடை மாற்றம் போன்றவை சிலருக்கு தோன்றலாம்.

இந்த மாற்றங்களைப் பற்றி சரியான புரிதல் இல்லாதபோது, “என்னுடைய உடலில் ஏதோ தவறு நடக்கிறது” என்ற பயம் உருவாகலாம்.

அதனால் உடலில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் வயதின் தோல்வியாகப் பார்ப்பதற்குப் பதிலாக, உடலைப் புரிந்துகொள்ளும் காலமாக 40-களைப் பார்க்க வேண்டும்.

“நான் இதுவரை என்ன செய்தேன்?” என்ற கேள்வி

40க்கு அருகில் வரும்போது பல பெண்கள் தங்களுடைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கத் தொடங்குகிறார்கள்.

“என் கரியர் எங்கே இருக்கிறது?”

“நான் நினைத்ததை சாதித்து விட்டேனா?”

“எனக்காக என்ன செய்திருக்கிறேன்?”

“எனக்குப் பிடித்த வாழ்க்கையைத்தான் வாழ்கிறேனா?”

“இன்னும் என்ன செய்ய வேண்டும்?”

இந்தக் கேள்விகள் சில நேரங்களில் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக குடும்பம், குழந்தைகள், வேலை, பெற்றோர், உறவுகள் என பல பொறுப்புகளுக்கிடையே தங்களுக்கான வாழ்க்கையை ஒதுக்க முடியாமல் போன பெண்களுக்கு, 40 ஒரு திருப்பு முனை போலத் தோன்றலாம்.

ஆனால் இதை தோல்வியின் அறிகுறியாகப் பார்க்க வேண்டியதில்லை.

“இதுவரை எப்படி வாழ்ந்தேன்?” என்பதை மதிப்பீடு செய்யும் வயதாக 40 இருக்கலாம். அதே நேரத்தில் “இனி எப்படி வாழ வேண்டும்?” என்பதைத் தேர்ந்தெடுக்கும் வயதாகவும் அது இருக்கலாம்.

இன்னொரு பெரிய பயம் — “இனி என்ன?”

20-களில் வாழ்க்கை முன்னால் நீண்ட பாதையாகத் தெரியும். 30-களில் பல விஷயங்களை உருவாக்கிக் கொண்டிருப்போம். 40-க்கு வரும்போது, சில பெண்களுக்கு “இனி எல்லாம் தாமதமாகி விட்டதா?” என்ற எண்ணம் தோன்றும்.

புதிய விஷயம் தொடங்க முடியுமா?

புதிய விஷயம் கற்றுக்கொள்ள முடியுமா?

தனியாகப் பயணம் செய்ய முடியுமா?

புதிய கனவைக் காண முடியுமா?

மீண்டும் என்னை நான் கண்டுபிடிக்க முடியுமா?

முடியும்.

40 என்பது இறுதி கோடு அல்ல. அது ஒரு புதிய ஆரம்பப் புள்ளி ஆக இருக்க முடியும்.

இந்தப் பயத்திலிருந்து எப்படி வெளியே வருவது?

1. வயதை எதிரியாகப் பார்க்காதீர்கள்

“எனக்கு 40 ஆகிறது” என்பதற்குப் பதிலாக,

“எனக்கு 40 ஆண்டுகளின் அனுபவம் கிடைத்திருக்கிறது”

என்று பாருங்கள்.

வயது என்பது குறைந்து கொண்டிருக்கும் இளமை அல்ல. அது அதிகரித்துக் கொண்டிருக்கும் அனுபவம்.

2. மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்

உங்கள் வயதில் ஒருவர் வீடு வாங்கியிருக்கலாம். இன்னொருவர் பெரிய பதவியில் இருக்கலாம். ஒருவர் திருமணம் செய்து குழந்தைகளுடன் இருக்கலாம். இன்னொருவர் உலகம் சுற்றிக்கொண்டிருக்கலாம்.

அவர்களின் டைம்லைன் உங்களுடையது அல்ல.

3. உடலைத் தண்டிக்காமல் கவனியுங்கள்

40-க்கு அருகில் வரும்போது “இளமையாகத் தோன்ற வேண்டும்” என்பதற்காக உடலை வெறுப்பதைவிட, அல்லது செயற்கையான சிகிச்சைகளை நாடுவதை விட ஆரோக்கியமாக உடலைப் பராமரிப்பது முக்கியம்.

சீரான உணவு, உடற்பயிற்சி, போதுமான தூக்கம், மன அழுத்தம் பராமரிப்பு, தேவையான மருத்துவப் பரிசோதனைகள்—இவை அனைத்தும் அழகுக்காக மட்டுமல்ல; நீண்ட கால ஆரோக்கியத்திற்காக அவசியம்.

உடலில் தொடர்ந்து அல்லது கவலைக்குரிய மாற்றங்கள் இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

4. “எனக்காக” ஒரு வாழ்க்கையை உருவாக்குங்கள்

குடும்பத்துக்காகவும், குழந்தைகளுக்காகவும், வேலைக்காகவும் வாழ்வது இயல்புதான்.

ஆனால் அதற்கிடையில்,

“எனக்கு என்ன பிடிக்கும்?”

என்று கேட்டுக் கொள்ளவும் வேண்டும்.

பொழுதுபோக்கு, பயணம், புத்தகம், போட்டோகிராபி, நடனம், எழுத்து, நண்பர்களுடன் நேரம் செலவிடுதல்—எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கான இடம் மற்றும் நேரம் இருக்க வேண்டும்.

5. 40-க்குப் பிறகு புதிய இலக்குகளை எழுதுங்கள்

பெரிய இலக்குகள் மட்டுமே வேண்டியதில்லை.

“இந்த ஆண்டு ஒரு புதிய இடத்துக்குச் செல்வேன்.”

“ஒரு புதிய திறன் கற்றுக்கொள்வேன்.”

“எனக்காக மாதம் ஒரு நாள் செலவிடுவேன்.”

“என் உடல்நலத்தை கவனிப்பேன்.”

“எனக்கு பிடிக்காத விஷயங்களுக்கு ‘இல்லை அல்லது நோ’ என்று சொல்ல கற்றுக்கொள்வேன்.”

என்று சிறிய இலக்குகளிலிருந்து தொடங்கலாம்.

6. தேவையில்லாத எதிர்பார்ப்புகளை இறக்கி வையுங்கள்

40-க்கு வந்தவுடன் எல்லாவற்றிலும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கச்சிதமான உடல்,

கச்சிதமான வாழ்க்கை, கச்சிதமான உறவு, சிறப்பான பொருளாதாரம் இதெல்லாம் விட அவசியம்

அமைதியான வாழ்க்கை, அர்த்தமுள்ள உறவுகள், உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளும் மனநிலை இவைதான் அவசியம்.

40 என்பது முடிவல்ல… ஒரு புதிய சுதந்திரம்

20 வயதில் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசித்திருக்கலாம்.

30 வயதில் குடும்பம், வேலை, எதிர்காலம் என்று ஓடியிருக்கலாம்.

ஆனால் 40 என்பது வேறு.

“இனி நான் என்ன விரும்புகிறேன்?”

என்று கேட்கத் தொடங்கலாம்.

அதுதான் 40 வயதின் அழகு.

உங்கள் முகத்தில் சில கோடுகள் இருக்கலாம். தலைமுடியில் சில நரைகள் இருக்கலாம். உடல் முன்பைப் போல வேகம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் அதே நேரத்தில், யார் உண்மையானவர், எது முக்கியம், எதற்காக நேரத்தை செலவிட வேண்டும், எதற்காக வேண்டாம் என்பதெல்லாம் இன்னும் தெளிவாகத் தெரிந்திருக்கும்.

அதனால் 40-ஐ நெருங்கும்போது,

“இளமை குறித்த பயம் இல்லாமல்…”

“என் வாழ்க்கையை இப்போது இன்னும் ஆழமாக, எனக்குப் பிடித்தபடி வாழப் போகிறேன்” என்று சொல்லிப் பாருங்கள். ஏனெனில் வயது என்பது வெறும் எண் மட்டுமே .

- ஷாலினி நியூட்டன்