Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பரபரப்புக்கு பெயர்போன அல்வா தலைவர் அடுத்த புயலை கிளப்பி விட்டுள்ளது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சமூக நலன் சார்ந்த திட்ட பயனாளிகளிடம் சம்திங் வேட்டை நடப்பதுபற்றி டீ கடை, ஜெராக்ஸ் கடைகள் வரைக்கும் புகாராக ஒலிக்குதாமே..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.

‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல வாணி பாடிய ஊர் இருக்குது.. இங்க கச்சேரி சாலையில் வட்ட ஆட்சியரோட அலுவலகம், குடிமை பொருள் வழங்கல் அலுவலகம், சமூகநலத்துறை அலுவலகம்னு செயல்பட்டு வருது.. இதுல சமூகத்தோட நலன் சார்ந்த அலுவலகத்துல, முதியோர், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்னு அரசோட உதவித்தொகை வழங்கப்பட்டு வருது.. இந்த அரசோட திட்டங்கள் கடைகோடி மக்களுக்கு சென்றடைய வேண்டும்னு வழிமுறைகள் எளிதாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குது.. ஆனாலும் சில நபர்கள், ஒவ்வொரு துறையிலயும் பாரபட்சம் பார்க்காம வசூல் வேட்டை நடத்துறாங்களாம்.. அதேபோல வாணி பாடிய ஊரான சமூக நலத்துறையிலயும் வசூல் வேட்டை ஜோரா நடக்குதாம்.. இந்த விஷயம் அந்த ஏரியா டீ கடைகள், ஜெராக்ஸ் கடைகள்னு புகார்கள் குரலாக கேட்டுகிட்டிருக்குது.. இதனால, வசூல் வேட்டையில ஈடுபடுற நபர் யாரு, என்னவென்று விசாரிச்சு ஜனங்க பாதிக்க பாடாதபடி நடவடிக்கை எடுக்கணும்னு மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பத்து முறைக்கு மேல் நாடாளுமன்றம், சட்டமன்றம் என தேர்தலில் களம் கண்ட பொன்னானவர் மீண்டும் களத்தில் குதிக்க தயாராகி விட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கடைகோடி மாவட்டத்தில் பத்துமுறை நாடாளுமன்றம், சட்டமன்றம் என்று தேர்தல்களில் களம் கண்ட பொன்னானவர் மீண்டும் வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க தயாராகிவிட்டாராம்.. அதற்கு கட்சியினரை உசுப்பேற்ற போராட்ட களத்தில் இறங்கியுள்ளாராம்.. பெருந்தலைவருக்கு கருப்பு சட்டை போட்டுவிட்டார்கள் என்று முதலில் அவர் பரப்பிய பொய்யை அப்போதே செய்தியாளர்கள் கூட்டத்தில் உடைக்க, அடுத்து கட்சியினரை திரட்டி அனுமதியின்றி போராட்டம் நடத்தி கைதாகியுள்ளாராம்.. முதலில் காமராஜருக்கு எதிராக அப்படி ஒரு நிகழ்வு நடைபெறவில்லை, அதற்கு ஆதாரம் இல்லை என்று கூறியவர், மறுநாள் அப்படி சம்பவம் நிகழ்ந்தது என்றும், அதற்கு காரணம் கதர் கட்சிதான் என்று கூறி பரபரக்க வைத்தாராம்.. எதனை கூறியாவது தேர்தல் வரை களத்தை சூட்டோடு வைத்திருக்க திட்டமிட்டுள்ளாராம்.. கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டபோதிலும் அரசியல் தன்னை சுழன்றே இருக்க வேண்டும் என்பதும் அவரது ஆசை என்கிறார்கள் மலராத கட்சியினர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சின்னஞ்சிறிய மாநில பிரச்னைதான் மலராத கட்சியின் தலைமைக்கு திருகுவலியாக இருக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘புதுச்சேரி மலராத கட்சி நடுநாயகர், அமைச்சர் மற்றும் தலைவர் தலைமையில் ஒரு அணியாகவும், ராஜ் நிவாசின் உச்சபட்ச தலைவர் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்படுது.. நடுநாயகர், அமைச்சர், மாநில தலைவர் ஆகியோர் மலராத கட்சியின் மேலிட பொறுப்பாளர் சுரானா மற்றும் தேசிய அமைப்பு செயலர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி செயல்படுகின்றனராம்.. உச்சபட்ட தலைவர் தலைமையில் மற்றொரு அணி செயல்படுவதால் கட்சியை எப்படி வளர்க்கிறது என மற்றொரு அணி, மலராத கட்சி தலைமைக்கு பல மனுக்களையும், நேரிடையாகவும் புகார் மனுக்களை கொடுத்தும் வருகின்றதாம்.. தேர்தலுக்கு முன்பு உச்சபட்ச தலைவரை மாற்ற வேண்டும் என போர்க்கொடியும் தூக்கி வருகின்றனராம்.. மாநிலத்தின் நிர்வாக பணிகளை கவனிக்காமல் கட்சி பணியிலும் தலையிடுவதாக பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை அடுக்குறாங்களாம்.. ஆனால் உச்சபட்ச தலைவரோ, மலராத கட்சியில் தற்போது அரசு மற்றும் கட்சியில் இருப்பவர்கள், ஊழல்வாதிகள் என தலைமையை நேரிடையாக சந்தித்து புகார்களை அடுக்கி உள்ளனராம்.. சிறிய மாநிலத்தில் மலராத கட்சியில் இருக்கும் பிரச்னைகள் தலைமைக்கு திருகு வலியாக உள்ளதாம்.. எதுவாக இருந்தாலும் டிசம்பர் மாதத்துக்கு பின்னர் புதுவை பிரச்னை தீர்க்கப்படும் என டெல்லி தலைமை இரு தரப்புக்கும் அட்வெஸ் கூறி அனுப்பி வைத்ததாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அரசியல் சக்கரம் தன்னை சுற்றி இருக்க வேண்டும் என்பதற்காக அடுத்த புயலை கிளப்பி விட்டுள்ளாரோ என அல்வா ஊர்க்காரர் மீது சந்தேகம் எழுந்திருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘அல்வா மாவட்டத்து மலராத கட்சி தலைவர் எப்போதுமே பரபரப்புக்கு பெயர் போனவர். அரசியல் சக்கரம் தன்னை சுற்றியே சுற்ற வேண்டும் என்பதற்காகவே எதையாவது செய்து, லைம் லைட்டில் இருப்பது வழக்கம். கடந்த மக்களவை தேர்தலில் கூட, தான் போட்டியிடும் தொகுதிக்கு தேர்தலுக்கு முன்பும், பின்பும் என இருமுறை பிரதமரை பிரசாரத்திற்கு அழைத்து வந்து அல்வா மாவட்டத்து மக்களை ஆச்சர்யப்படுத்தினார்.. அதன் தொடர்ச்சியாக பூத் கமிட்டி மாநாட்டிற்கும் உள்துறையை அழைத்து வந்து தொண்டர்களை வாய்பிளக்க வைச்சிட்டார்.. இலைக்கட்சி தலைவர் அல்வா மாவட்டத்திற்கு பிரசாரத்திற்கு வந்தபோதும் கூட, தனது வீட்டில் 108 வகை உணவுகளை பரிமாறி விருந்தை முன்னிலைப்படுத்தி, பிரசாரத்தை பின்தங்கச் செய்தார். அதே வீட்டில் இப்போது மர்மநபர்கள் நள்ளிரவில் புகைப்படம் எடுத்ததாக கூறி, அடுத்த புயலை கிளப்பி விட்டுள்ளார்.. ஹெல்மெட் அணிந்த நபர்கள் வீட்டை நோட்டமிட்டதால், தன் குடும்பத்தினரின் பாதுகாப்பு கேள்விக்குறி என புதுக்கரடியை சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் சிதற விட்டுள்ளார்.. குக்கர் பார்ட்டிகள் எதுவும் குறுக்குசால் ஓட்டுதோ என மலராத கட்சியின் பந்தங்களுக்கும் இப்ப லைட்டா சந்தேகம் ஓடுது.. புரிஞ்சும், புரியாமலும், புகார் இல்லை என்றாலும் எதுக்கும் விசாரிச்சி வைப்போமே என போலீசும் களத்துல இறங்கிட்டாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.