பெங்களூரு மாநகரத்தின் பரபரப்பான சாலைகளுக்கு நடுவே, மக்களின் அவசரக் குரல்களுக்கும் வாகனங்களின் சத்தங்களுக்கும் இடையே ஓடிக்கொண்டிருக்கும் ஓர் ஆட்டோவில் பயணிக்கிறது ஒரு பெண்ணின் மாபெரும் லட்சியக் கதை. அவரது பெயர் ஜான்சி. இன்று முப்பதுகளின் இறுதியில் இருக்கும் ஜான்சி, வெறும் ஆட்டோ ஓட்டுநர் மட்டுமல்ல; வாழ்க்கையில் தடுமாறி நிற்கும் பல பெண்களின் வாழ்க்கைப் பாதையை நல்வழிப்படுத்தும் ஒரு நம்பிக்கை வெளிச்சம்.
ஜான்சியின் சிறுவயது வாழ்க்கை அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. பெங்களூருவின் பேனருகட்டா பகுதியில் வளர்ந்த அவருக்கு, தந்தையின் குடிப் பழக்கம் குடும்பத்தின் நிம்மதியைப் பறித்தது. அவர் பன்னிரண்டு வயதாக இருக்கும்போதே தந்தை மறைந்துவிட, குடும்பத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பும் தாயின் தோள்களில் விழுந்தது. வீட்டு வேலைகளையும் கட்டிட வேலைகளையும் செய்து மாதத்திற்கு வெறும் ஐந்தாயிரம் ரூபாயை ஈட்டிய தாயின் உழைப்பையும் தியாகத்தையும் பார்த்தே ஜான்சி வளர்ந்தார். பத்தாம் வகுப்போடு படிப்பு நின்றுபோக, பதினாறு வயதிலேயே ஆடை தைக்கும் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். கடுமையான கட்டுப்பாடுகளும் நெருக்குதல்களும் நிறைந்த அந்த வேலையில் சில ஆண்டுகள் உழைத்த பிறகு, திருமண வாழ்க்கைக்குள் அடிஎடுத்து வைத்தார்.
அதன்பின் கணவருடன் சேர்ந்து ஒரு சிறிய தேநீர்க்கடை நடத்தினார். அந்த சமயத்தில், வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்தபோது, அவரது கணவர்தான் அவருக்கு ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொடுக்கும் யோசனையைக் கூறினார். தொடக்கத்தில் பயமும் தயக்கமும் இருந்தாலும், அமைதியான நேரங்களில் கணவர் பொறுமையாகச் சொல்லிக்கொடுத்த ஆட்டோ பயிற்சிகள் ஜான்சிக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்தன. ஒருகட்டத்தில் தேநீர்க்கடை பிசினஸ் மந்தமடைய, தைரியமாக வீதியை நோக்கி ஆட்டோவை முறுக்கினார். முதல் நாளில் கிடைத்த 700 ரூபாய் வருமானம், ‘‘என்னாலும் உழைத்துச் சம்பாதிக்க முடியும்” என்ற பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.
2018ஆம் ஆண்டு வணிக ரீதியிலான ஓட்டுநர் உரிமம் பெற்ற ஜான்சி, பெங்களூருவின் மேடு பள்ளங்கள் நிறைந்த வீதிகளில் தனது பயணத்தைத் தொடங்கினார். தொடக்கத்தில் பாதைகள் தெரியாமல் பலரிடம் வழி கேட்டு கேட்டு ஓட்டியவர், நாளாக நாளாக நகரின் வீதிகளைத் தனது உள்ளங்கையாக மாற்றிக்கொண்டார். மேலும் கூகுள் மேப், டாக்சி செயலி மேப்கள் என இன்னும் அந்த டிராபிக் நிறைந்த சாலைகள் அவர் கைக்குள் அடங்கின. அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து குடும்பத்திற்கான சமையல், குழந்தைகளுக்கான மதிய உணவு டப்பாக்கள் என அனைத்தையும் முடித்துவிட்டு, காலை பத்து மணிக்கு ஆட்டோவை எடுப்பார். பள்ளிச் சிறார்களை அழைத்துப் போவது, சவாரி முடிப்பது எனத் தினமும் பத்து முதல் பன்னிரண்டு மணி நேரம் உழைத்தாலும், தன் உழைப்பில் கிடைக்கும் சுதந்திரத்தை அவர் பெரிதும் நேசித்தார்.
2021ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வு ஜான்சியின் வாழ்க்கையில் மற்றொரு திருப்பத்தை ஏற்படுத்தியது. தன்னைப் போல சமூகத்தில் வழி தெரியாமல், நிதிச் சுதந்திரம் இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் உதித்தது. அதன்பின்னர், ஆட்டோ ஓட்ட விரும்பும் பெண்களுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி இலவசமாகவே ஆட்டோ ஓட்டப் பயிற்சி அளிக்கத் தொடங்கினார்.
இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களைச் சொந்தக் காலில் நிற்க வைத்துள்ளார். வீட்டுவேலை செய்து சொற்ப வருமானம் பார்த்தவர்கள், நிலையான வேலை இல்லாமல் தவித்தவர்கள் எனப் பல பெண்கள் இன்று ஜான்சியின் வழிகாட்டுதலால் பெங்களூரு வீதிகளில் கம்பீரமாக ஆட்டோ ஓட்டித் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்கள்.
தன் குழந்தைகளுக்கு ஒரு நல்ல ஆங்கில வழிக் கல்வியை வழங்க முடிகிறது என்பதிலும், தன்னால் பல பெண்களின் வாழ்வில் விடியல் பிறந்திருக்கிறது என்பதிலும் ஜான்சிக்கு பெருமிதம். ஒரு பெண் நினைத்தால் தன் வாழ்க்கையை மட்டுமல்ல, தன்னைச் சுற்றியிருக்கும் பெண்களின் வாழ்க்கையையும் மாற்றியமைக்க முடியும் என்பதற்கு பெங்களூருவின் வீதிகளில் ஓடும் ஜான்சியின் ஆட்டோவே ஆதாரம்.
- எஸ். விஜயலட்சுமி



