Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுகவில் இருந்து தவெகவுக்கு ஓடிய விஜயபாஸ்கர்கள் ஓடுகாலிகள், துரோகிகள்: அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தாக்கு

கிருஷ்ணகிரி: அதிமுகவில் இருந்து தவெகவிற்கு ஓடிய விஜயபாஸ்கர்கள், ஓடுகாலிகள், துரோகிகள் என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி நேற்று அளித்த பேட்டி:

தவெகவுக்கு ஓடிய விஜயபாஸ்கர்கள், ஓடுகாலிகள், சந்தர்ப்பவாதிகள், துரோகிகள். ஜாம்பவான்கள் முழுவதும் அதிமுகவில் உள்ளனர். லெட்டர் பேட் வைத்து ஏமாற்றியவர்கள் மட்டுமே, தவெகவுக்கு ஓடி உள்ளனர். அதிமுகவும், தவெகவும் ஒன்று தான். இரண்டும் இணையும் என்று ஆதவ் அர்ஜூனா சொல்லி இருக்கிறார். ஆதவ் அர்ஜூனா போல கொள்கை இல்லாத, வாய்ப்பு கிடைக்கின்ற இடங்களுக்கு எல்லாம் ஓடுபவன் இல்லை அதிமுக தொண்டன். இவர் முதலில் திமுகவிலும், விடுதலைச் சிறுத்தை கட்சியிலும், பிறகு அதிமுகவில் வாய்ப்பு கிடைக்காமல், தவெகவுக்கு சென்றவர். இரண்டு ஆண்டுகளில், இத்தனை கட்சி மாறிய ஆதவ் அர்ஜூனாவுக்கு என்ன கொள்கை இருக்கிறது?. தவெகவுடன் அதிமுக இணையும் என்று சொல்கிறார். அதிமுக 31 ஆண்டுகள் ஆட்சி செய்த இயக்கம். எனவே, ஆதவ் அர்ஜூனாவுக்கு எச்சரிக்கை விடுகிறேன். இனியும் இது போன்று பேசினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு தலைமை பொறுப்பில் உள்ளவர்கள், முறையாக செயல்படவில்லை என்றால், தன்னிடத்தில் மனு வழங்கும்படி ஆளுநர் சொல்வதில் தவறில்லை. நியாயம் எங்கு கிடைக்கவில்லையோ, அந்த நியாயம் பெறுவதற்கு அரசியல் பிரதிநிதியாக உள்ள ஆளுநரிடம் மனு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என நான் கருதுகிறேன். தவெக கட்சியினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகினர். குதிரை பேரத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை கோரி அதிமுக, திமுக, அமமுகவினர் ஆளுநரிடம் கடிதம் வழங்கி உள்ளோம்.

தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தவறு செய்துள்ளார்கள். அவர்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு அமைச்சர் போதைப்பொருள் பயன்படுத்துகிறார். நாங்கள் குற்றம் சாட்டியும் நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், ஜனநாயக ரீதியில் விமர்சனம் செய்கிறார். அவரை கைது செய்து பழி வாங்கும் போக்கில் அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஆட்சிக்கு வந்து 50 நாட்களில், மிகப்பெரிய தவறுகளை முதலமைச்சர் விஜய் செய்து வருகிறார். விஜய்யின் நடவடிக்கையால் தொடர்ந்து ஐந்தாண்டுகள் இந்த ஆட்சி நடத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மாலை ஐந்து மணிக்கு மேல் முதலமைச்சர் எங்கு செல்கிறார் என்று யாருக்கும் தெரிவதில்லை. அவர் அரசு ஊழியரை போல் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.

காவல்துறையை மிரட்டுகிறார் ஆதவ்

‘கரூர் சம்பவத்தில் கணக்கு தீர்க்க வேண்டும் என ஆதவ் அர்ஜூனா பேசுகிறார். ஆட்சியில் இருந்து கொண்டே காவல்துறையை மிரட்டுகிறார். அந்த வழக்கு, உச்சநீதிமன்ற நேரடி பார்வையில், சிபிஐ விசாரணையில் உள்ள போது, அதை விமர்சனம் செய்வதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது?. அமைச்சராக இருக்கின்ற ஒரு நபர், இப்படி மிரட்டுகின்ற பாணியில் செயல்படுகிறார். யாரையோ, எவரையோ மிரட்டி அடிபணிய வைத்து, வழக்கை நீர்த்து போக வைக்க முயற்சி செய்கிறார்’ என்று கே.பி.முனுசாமி கூறினார்.