Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சையில் இன்று நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்; விஜய் உத்தரவை மதிக்காத தொண்டர்கள்: பின்தொடர்ந்து பைக்கில் வந்த தொண்டர் மீது கார் மோதியதால் பரபரப்பு

தஞ்சை: தவெக தலைவர் விஜய், நிர்வாகிகள் சந்திப்பு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், தஞ்சை செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் இன்று (4ம் தேதி) காலை நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. போலீசார் கேட்ட 32 கேள்விகளுக்கும் நேற்று காலை தவெக தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதை போலீசார் பரிசீலனை செய்து காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை கூட்டம் நடத்த நேற்று மாலை அனுமதி வழங்கினர். அதோடு 5000 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது, கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும், பட்டாசு வெடிக்க கூடாது, தீயணைப்பு வசதிகள் இருக்க வேண்டும், சேதங்களுக்கு விழா ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க வேண்டும், விஜய் வாகனத்தை பைக் அல்லது வேறு வாகனங்களில் பின் தொடர்வதை தவிர்க்க வேண்டும் என்பது உள்பட 52 நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அய்யாச்சாமிபட்டியில் சுமார் 10 ஏக்கரில் திடல் அமைக்கப்பட்டு வெயிலை சமாளிக்க மேற்கூரை மற்றும் அமர்வதற்கு வசதியாக நாற்காலிகள் போடப்பட்டது. நாகை, திருவாரூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 8 மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகளை சேர்ந்த 4,900 நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 9.30 மணியளவில் திருச்சி வந்தார். அங்கிருந்து காரில் அய்யாசாமி பட்டிக்கு சென்று கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து வர வேண்டாம் என்று தவெக சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. போலீசாரும் 52 நிபந்தனைகளை விதித்திருந்தனர். ஆனால் இந்த உத்தரவை தொண்டர்கள் மதிக்கவில்லை.

திருச்சி விமான நிலையத்தில் வெளியே வந்த விஜய் வாகனத்தை ஏராளமானோர் சூழ்ந்து கொண்டு பூக்களை தூவினர். இதனால் வாகனம் நகர முடியவில்லை. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதன்பின் விஜய் வாகனம் புறப்பட்டது. அந்த வாகனத்துக்கு முன்னும், பின்னும் ஏராளமானோர் டூவீலர்களில் பின் தொடர்ந்து சென்றனர். டூவீலரில் வந்தவர்களில் பெரும்பாலானவர்கள், தலைகவசம் அணியாமலும் ஒரு கையில் வாகனத்தை ஓட்டியும் ஆபத்தை உணராமல் வந்தனர். வாகனத்தை பின்தொடர்ந்து வந்தபோது டூவீலரில் வந்தவர் நிலைதடுமாறி விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த கார் மோதியது. அடுத்தடுத்து வந்த வாகனங்களும் மோதின. இதனால் பரபரப்பானது. உடனே, சிலர் வானகத்தை நிறுத்தி விட்டு படுகாயமடைந்தவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்களின் வெளியே தலையை காட்டிபடி வேகமாக சென்றனர். துவாக்குடி அருகே தொண்டர் ஒருவர் மாலை கொடுத்தார். அதை விஜய் வாங்கவில்லை. அதனால் அந்த மாலையை தொண்டர் விஜய் காரின் கண்ணாடியில் மாட்டி விட்டார். விமான நிலையம் அருகே விஜயை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் வாகனத்துடன் ஓடி வந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் தடுமாறி விழுந்தனர்.

அதேபோல் கூட்டம் நடந்த அரங்குக்கு வெளியே ஏராளமானோர் திரண்டு இருந்தனர். விஜய் உள்ேள சென்றதும் இவர்கள் தடுப்புகளை உடைத்தும், அதை தாண்டி குதித்தும் திபுதிபுவென உள்ேள புகுந்தனர். இதில் சில தொண்டர்கள் கீழே விழுந்தனர். அவர்கள் மீது ஏறி மிதித்து கொண்டு பின்னால் வந்தவர்கள் ஓடினர். இதைப்பார்த்து பெண்கள் பலர் அலறிக்கொண்டு அரங்குக்குள் செல்லாமல் வெளியேறினர். அதேபோல் கூட்ட அரங்குக்குள் நுழைவதற்காக தவெகவினர் சிலர் ஏற்பாடு செய்து ஆம்புலன்சை வரவழைத்து வந்திருந்தனர். ஆம்புலன்சை உள்ளே விடுங்கள் என கூறினர். ஆம்புலன்சுக்காக கேட்டை திறந்ததும், ஆம்புலன்சை அழைத்து வந்த பெரும்பாலானவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி முண்டியடித்து கொண்டு அரங்கத்துக்குள் நுழைந்தனர். அதாவது சுமார் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என கூறி விட்டு, கூட்டம் கூட்டுவதற்காக இப்படி திட்டமிட்டு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. தவெக தொண்டர்களின் இந்த செயலால் அங்கு பரபரப்பு நிலவியது.