Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சை செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு!

தஞ்சை செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார். இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தஞ்சையில் காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணை பிரச்னை குறித்து திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞர் அணி தலைவரும், எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

இதுகுறித்து தவெக தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி, தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்தார். அதன்படி தஞ்சை கிழக்கு காவல்நிலைய போலீசார், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இன்று அதிகாலை தஞ்சை போலீசார் சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் சன்ரைஸ் அவென்யூ சந்திப்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு வந்தனர். தஞ்சை போலீசாருடன், தென் சென்னை இணை கமிஷனர் விஜயகுமார், அடையாறு துணை கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் வீட்டுக்குள் வந்தனர். அப்போது வீட்டில் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இருந்தார். அவரிடம் தஞ்சை போலீசார் பேசினர். அதற்குள் திமுக நிர்வாகிகள் மத்தியில் தஞ்சை போலீசார் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு வந்த தகவல் தீயாக பரவியது.

உங்களை கைது செய்யும்படி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதனால் எங்களுடன் வாருங்கள், ஒத்துழைப்பு கொடுங்கள் என்று தெரிவித்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரத்தில், உதயநிதி ஸ்டாலின் பெற்று வழக்கு பதிவு விபர நகலை முழுமையாக படித்தார். அதைதொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தானாக முன்வந்து கைதுக்கு ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசார் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டு அவரது வீட்டில் இருந்து வெளியே வந்தனர்.

அப்போது சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்தும், தவெக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியப்படி அவரை ஏற்றி செல்லும் வாகனத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டர்களின் மறியலையும் மீறி போலீசார் உதயநிதி ஸ்டாலினை அழைத்து சென்றனர்.

இதையடுத்து 'காவிரி விவகாரத்தை திசை திருப்பவே ஆளும் அரசு என் மீது கைது நடவடிக்கையை எடுத்துள்ளது, இதை நான் காமெடியாகவே பார்க்கிறேன். காவிரி பிரச்சனையை மடைமாற்றவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்றவில்லை. மேகதாது, காவிரி பிரச்சனைக்கு குரல் கொடுக்காத இந்த பயந்தாங்கோலி அரசைக் கண்டித்து தஞ்சாவூர் போராட்டத்தில் பேசினேன்.

ரீல்ஸ் வெறி முத்திப்போய் உள்ள தவெக அரசின் அமைச்சர்களைக் கண்டித்துப் பேசினேன். அதற்காக இன்று நான் பேசாத ஒன்றை பேசியதாக கட், காப்பி, பேஸ்ட் பண்ணி பொய் செய்தியை பரப்பி அதற்காக கைது செய்துள்ளார்கள். கைதுக்கு பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது' என காவல்துறையினரால் வாகனத்தில் விசராணைக்கு அழைத்து செல்லப்படும் போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணைவிட்டது. பின்னர் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்காக தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்குள் சென்றார். 8 மணி நேர அலைக்கழிப்புக்குப் பின் உதயநிதியிடம் போலீஸ் விசாரணை நடைபெற்றது.

இதையடுத்து விசாரணைக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார். கொட்டும் மழையில் காவல் நிலையத்திற்கு வெளியே காத்திருந்த தொண்டர்கள் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். தமிழ்நாடு முழுவதும் காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தொண்டர்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர்.

தஞ்சை செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ரோடு ஷோ சென்றார். செங்கிப்பட்டியில் இருந்து புறப்படும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி திருச்சியிலிருந்து விமானத்தில் புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.