தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர், ஆடுதுறை, திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 30 நிமிடங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மதிய நேரத்தில் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கும்பகோணம், திருவிடைமருதூர், ஆடுதுறை, திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
திடீரென பெய்து வரும் இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
தற்போது பெய்து வரும் மழை விவசாயப் பயிர்களுக்கு ஓரளவு நன்மை அளிக்கும் என்றாலும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சாலையோரங்களில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு பெரும் இடையூறாக அமைந்துள்ளது.
தீபாவளி விற்பனையை நம்பி பொருட்களை வாங்கி கடைகளை அமைத்துள்ள வியாபாரிகள், மழையால் வியாபாரம் பாதிக்கப்படுமோ என்ற கவலையில் உள்ளனர்.


