தஞ்சாவூர் : விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கிய தமிழக அரசுக்கு விவசாயிகளின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.தஞ்சை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பேச்சு.தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தலைமை தாங்கினார்.
இதில் கோட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏகேஆர். ரவிச்சந்தர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
மேட்டூர் அணை திறக்கின்ற ஜூன் 12ம் தேதியே குறுவை தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று ஒற்றைக்கம்ப மின்மாற்றிகள் மின் வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் அம்மையகரம், அடஞ்சூர், வரகூர், மெலட்டூர், பூதலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒற்றை கம்ப மின்மாற்றிகளை உடைத்து செப்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி வருகின்றனர் .
இது பல மாதங்களாக நடந்து வருகிறது. எனவே போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து மின்மாற்றியை உடைத்து செப்பு கம்பிகளை திருடுவதை தடுக்க வேண்டும் . திருடியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்பெரம்பூர் விவிஆர் பூங்காவை பராமரித்து சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகள் சங்க செயலாளார் கோவிந்தராஜ்:தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கிய தமிழக அரசுக்கு விவசாயிகளின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த டிசம்பர் மாதம் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை. அதனை விரைவாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூர்வாரும் பணியை விரைந்து முடித்து தடையில்லாமல் தண்ணீர் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த நிதிநிலை அறிக்கையில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 அறிவித்ததற்கு விரைவாக அரசாணை வெளியிட்டு விவசாயிகளுக்கு விரைவில் கரும்பு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வெள்ளப்பெரம்பூர் துரை ரமேஷ்: காவிரி, வெண்ணாரு பகுதிகளில் மணல் திருடப்படுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும். அல்லது அவரவர் தேவைக்கு ஏற்ப கட்டுமான பணிகளுக்கு தேவையான மணல் எடுக்க அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும். பெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவையாறு வட்டம் வெள்ளபெரம்பூர் எல்லைக்குட்பட்ட பிள்ளை வாய்க்கால் வலது கரையில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
அம்மன்பேட்டை சாலை கோணக்கடுங்களூர் அருகே வயல்களில் அடிக்கடி மின் மோட்டார்கள் திருட்டு நடைபெறுகிறது. இது குறித்து காவல் நிலையங்களில் புகார் அளித்தும் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் காவல்துறைக்கு அறிவுறுத்தி மோட்டார் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வானமர் கோட்டை இளங்கோவன் :தஞ்சை சுற்றியுள்ள நன்செய் நிலங்களை விவசாயம் செய்யாமல் தரிசு நிலங்கள் என்று சான்று வழங்கப்பட்டு மனைகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தஞ்சை சுற்றியுள்ள பல இடங்கள் தரிசி நிலங்களாக போடப்பட்டுள்ளன இதை அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் நன்செய் விவசாய நிலங்களாக சாகுபடி பதிவு செய்யப்பட வேண்டும்.
விவசாயிகளிடமிருந்து மனு பெற்றுக் கொண்ட தஞ்சை போட்டாச்சியர் இலக்கியா இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை அதிகாரிகள், தோட்டக்கலை துறை அதிகாரிகள், நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
