Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தஞ்சை திருவோணம் பகுதியில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த 3 பேர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதல்வர் ஆணை

சென்னை: தஞ்சை திருவோணம் பகுதியில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த பழனிவேல், காசிநாதன், வேம்பையன் ஆகியோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும் பலத்த தீக்காயமடைந்த 5 பேருக்கும் தலா ஒரு லட்சமும், லேசான தீக்காயமடைந்த நபருக்கு ரூ.50ஆயிரமும் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டம். சின்ன அம்மங்குடி கிராமத்தில் 30.07.2026 அன்று காலையில் முருகையன் த/பெ. சின்னையன் என்பவரது வீட்டின் கூரை வேய்ந்த சமையலறைக் கொட்டகை தீப்பற்றி எரிந்ததில், வீட்டினுள் இருந்த எரிவாயு சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்ததினால் ஏற்பட்ட விபத்தில், பலத்த தீக்காயமடைந்த பழனிவேல் (வயது-36), த/பெ. அப்புராசு, காசிநாதன் (வயது-39) த/பெ. வீரையன் மற்றும் வேம்பையன், (வயது-52) த/பெ. வீரையன் ஆகியோர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில், பலத்த தீக்காயங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராஜசேகர் (வயது-32), த/பெ. செல்வராசு, செல்வி (வயது-41), க/பெ. முருகையன், செல்வி அபிநயா, (வயது-15). த/பெ. முருகையன், கலையரசி. (வயது-39) க/பெ. வேம்பையன். செல்வன் புவனேஷ் (வயது-16), த/பெ. ரமேஷ் ஆகிய ஐந்து நபர்களுக்கும், லேசான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் செல்வராசு. (வயது-64). த/பெ. சின்னையன் என்பவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில், உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்குத் தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.